Wonderful Shopping@Amazon

Wednesday, 13 December 2017

தூக்கத்தை மீட்போம்


"தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்"
                                   - கவிஞர் கண்ணதாசன்
நாங்கள் சிறுவர்களாயிருந்த போது மாலை 7.30 மணிக்கு இரவு உணவு முடித்துவிட்டு வானொலி ஒளிபரப்பாகும் விவிதபாரதி வர்த்தக நிகழ்ச்சியில் 'வண்ணச்சுடறில் இன்றுநாடகத்தை கேட்டுக்கொண்டே தூங்கிவிடுவோம்.

பள்ளி / கல்லூரி படிக்கும் போது கூட 9.30 மணிக்கு படுக்கைக்கு சென்று விடுவோம். வயது ஆக ஆக தூக்கம் குறைந்து விழித்திருக்கும் நேரம் அதிகரித்துக்கொண்டே போகிறது.
அதிகரிக்கும் மன அழுத்தத்தால் தூக்கம் கெடுகிறது /தடைபடுகிறது.  மன அழுத்தம் / மன உளைச்சலால் எத்தனையோ இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.
சில பேருக்கு புதிய இடம், புதிய சூழலில் படுத்தால் தூக்கம் வருவதில்லை.
பயணம் செய்யும்போது தூங்குபவர்கள் அனேகம் கார், பஸ், ரயில், விமானம் என எதிலும் உட்கார்ந்த உடன் தூங்கி விடுவார்கள், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
பஸ், ரெயிலில் பயணிக்கும்போது உடன் பயணம் செய்யும் சக பயணி நம் மேல் தூங்கி விழுவதையும் பார்க்கலாம். கொஞ்சம் நேராக கழித்து  நம்மை அறியாமல் நாமும் தூங்கி வழிய ஆரம்பிப்போம்.
தூங்குவதற்காகவே பயணம் செய்பவர்களும் உண்டு.  ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்யும்போது தூக்க வருவதேயில்லை. அதே மூன்றாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் பயணம் செய்யும் போது படுத்த உடன் தூங்கிவிடுவேன், அதோடு சென்னையில் எழுவேன். 

புறநகர் ரயிலில் பயணம் செய்யும்போது இடம் கிடைத்தால் தூங்குவது உண்டு. சில சமயம் இறங்கவேண்டிய ரயில் நிலையத்தை தவறவிட்டு அடுத்த நிலையத்தில் இறங்கி பஸ் படித்து வீடு வந்து சேர்வதுண்டு.


பள்ளி / கல்லூரி கோடை விடுமுறையில் மொட்டை மாடியில் நண்பர்களுடன் தூங்குவோம். வீட்டை சுற்றி தென்னை மரங்கள். நல்ல காற்று வரும். அதோடு நல்ல உறக்கமும் வரும்.  காலையில் சூரியன் முகத்தில் விழும் வரை தூங்குவோம். திருட்டு பயம் காரணமாக இப்போதை மொட்டைமாடியில் படுக்க பயமாயிருக்கிறது.

ஒரு நாள் லீவு போட்டு நாள் முழுவதும் தூங்க வேண்டும் என்ற ஆசை, ஆனால் இன்னும் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை காரணம் அப்பொழுதும் வீட்டில் ஏதாவது  வேலை இருக்கும்.

சினிமா தியேட்டரில் காசு கொடுத்து வந்து தூங்குபவர்களும் உண்டு.

திருப்பதி திருமலையில் வாடகை அறை / லாக்கர் கிடைக்காவிட்டால் கிடைத்த இடத்தில தூங்குவதுண்டு. எப்பேர்ப்பட்ட தூக்கம் வரும் தெரியுமா. கனவே வராது.

பாராளுமன்றத்தில் முக்கிய விவாதத்தின் / அலுவலின் போது தூங்கி வழியும உறுப்பினர்கள் காணலாம். அறிவியல் மாநாட்டில் தூங்கி வழியும் விஞ்ஞானிகளை அவ்வபோது தினசரி ஏடுகளில் செய்தி/படம் காணலாம்.

அலுவலக நாட்களில் காலை படுக்கையை விட்டு  எழமுடிவதில்லை ஆனால் ஞாயிறு காலை சீக்கிரமே தூக்கம் கலைந்துவிடுகிறது.


மருத்துவமனையில் பணிபுரிந்தபோது தூங்காமல் இரவு நேரப்பணி செய்த அனுபவம் எனக்குண்டு.  நோயாளிகள் வரவில்லையென்றால் சற்று நேரம் கண் அயரலாம். பெரும்பாலும் மழை கால இரவுகள் இன்னும் கூடுதல்
நேரம் தூங்கலாம்.

காலை சீக்கிரம் எழவேண்டும் என்று நினைத்து படுத்தால், சரியான நேரத்துக்கு எழமுடியும் காரணம் மூலையில் உள்ள சர்க்காடியன் கடிகாரம்.

நல்லெண்ணெய் குளியல் போட்ட சனிக்கிழமை இரவு தூக்கம் ஆளை தள்ளும். மறுநாள் ஞாயிறு காலை ஆடுகால் வாங்கிவந்து சூப் செய்து அருந்துங்கள். உடலுக்கு புது தெம்பு கிடைக்கும்.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு தூக்க குறைபாடு அல்லது தூக்க மூச்சுத்திணறல் நோய் (Sleep Apnea) உள்ளது.  நம்மை போல் அவருக்கு படுத்த உடன் தூக்கம் வராது. அதற்கென்றே வெளிநாட்டிலிலுருந்து வரவழைத்த ஒரு நெபுலைஸர்  கருவியை அணிந்து கொண்டு தான் தூங்க வேண்டும். அதுவே இப்பொது வழக்கமாகி போனது. பலபேருடைய தூக்கத்தை கெடுத்தவர் ........பின்பு எப்படி தூக்கம் வரும்!


இன்னொரு நண்பருக்கு ராஜாவின் தாலாட்டு வரிசை பாடல்களை கேட்டுக்கொண்டே தூங்குவது தான் வழக்கமாம். சிலருக்கு ராஜா மற்றும் ஜிக்கி பாடல்கள் கேட்டால் தூக்கம் வரும்.

ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 6  முதல் 22 வரை உள்ள பாசுரங்கள் தூக்கம் மற்றும் துயிலெழுப்புதல் பற்றி பேசுகிறது.

வைகுண்ட ஏகாதசிக்கு  இரவு முதல் காலை வரை கண் விழித்து, பரமபதம் ஆடி, பிறகு குளித்து பெருமாளுக்கு பூஜை செய்து பகல் முழுதும் தூங்காமல் இரவு தூங்கும் வழக்கம் எங்கள் வீட்டு பெண்களிடம் இருந்தது.  ஆனால் எப்போது வயது ஆகிவிட்டதால் அந்த பழக்கம் மெல்ல மறைந்து வருகிறது.

வைகுண்ட ஏகாதசியன்று ஒரே டிக்கெட்டில் மூன்று படங்கள் போடுவார்கள் எங்கள் ஊர் திரையரங்கில். முதல் படம் வரை தான் தாக்குப்பிடிக்கமுடியும் அப்புறம் ரசிகர்கள் தூக்கத்திடம் சரண். இப்போது அதுபோல் ஒரே டிக்கெட்டில் மூன்று படங்கள் போடும் திரையரங்கம் உள்ளதா தெரியவில்லை.

- காளிகபாலி

No comments:

Post a Comment