Wonderful Shopping@Amazon

Thursday, 20 February 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-45


ஹே ராம் (2000)

'ஹே ராம்' - இருபது வருடங்களுக்கு முன்பு பார்த்தது. 'ஹே ராம்' படம் பற்றி நிறையப் பேர் எழுதினாலும். முகப்புத்தகத்தில் திரு கீதப்பிரியன் கார்த்திகேயன் வாசுதேவன் அவர்கள் 'ஹே ராம்' படம் பற்றி எழுதும் கட்டுரை ஒவ்வொன்றும் அருமை. படிக்க, படிக்க மீண்டும் ஒரு முறை 'ஹே ராம்' படம் பார்க்கத் தூண்டுகிறது. மொத்தமாகப் புத்தகமாக தொகுத்து வெளியிடலாம், அவ்வளவு detailing.

என் தம்பி பார்த்துவிட்டுக் கதை வந்து சொன்னான், அவனுக்குப் படம் நிரம்பப் பிடித்திருந்தது. கண்கள் விரிய, சில காட்சிகளை விவரித்தது இன்னும் என் நினைவுகளில்.

இத்தனை வருடங்கள் கழித்தும் 'ஹே ராம்' படம் சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது மற்றும் பேசப் பொருளாயிருக்கிறது. யுடியூப் காணொளி தளத்தில் 'ஹே ராம்' படம் பற்றிய பல கோணங்களில் அலசிய விமர்சனங்கள் காணக் கிடைக்கிறது.  

சினிமாவே சொல்-செயல்-மூச்சாக இருக்கும் கமலஹாசன் போன்றவர்களால் தான் 'ஹே ராம்' போன்ற உலகத் தரம் வாய்ந்த சிறந்த படைப்பைத் தர முடியும்.

சரி விசயத்துக்கு வருவோம், 'ஹே ராம்' படத்தில் ஆஷாஜி பாடிய ஒரு ஊடல் பாடல் உள்ளது, அது எல்லோருக்கும் பிடிக்கும். பெங்காலி பாடகர் திரு அஜய் சக்ரவர்த்தி "இசையில் தொடங்குதம்மா..." என்ற இன்னொரு பாடலும் உள்ளது உங்களுக்கு நினைவிருக்கலாம். இரவு வேளையில் இந்த பாடலை சிறந்த தலையணியுடன் (Headphone) கேட்டுப் பாருங்கள். ராஜாவின் சேர்ந்திசைக்குழு ஜாலத்தை (Grandeur) உணரலாம்.  தொலைக்காட்சி பாடல் போட்டியில் இந்த பாடலை பாடத்தை இளம் பாடகர்களே இல்லை எனலாம்.

கமல் மற்றும் ராஜா சார் நிகழ்த்திய மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று.  இதோ அந்த பாடலை கேட்டு மகிழுங்கள்:






நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     

Friday, 3 January 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-44

நினைத்ததை முடிப்பவன் (1975)

எம்ஜிஆர் - The Don of Tamil Cinema, பாடல்களில் பிடித்த ஒன்று. இதில் எம்ஜிஆரின் Energy வேற லெவல். திரை ஊடகத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியவர் புரட்சித் தலைவர். தனி அமைப்பை உருவாக்கி விஸ்வரூபம் எடுப்பார் என்று கடைசி வரை யாராலும் கணிக்க முடியவில்லை. உற்று நோக்கினால் தனக்கான /அதற்கான கட்டமைப்பை மிக மிகப் பலமாக அமைத்துக்கொண்டார் என்றே சொல்வேன்.

சரி விசயத்துக்கு வருகிறேன், எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குநர் ப.நீலகண்டன் இயக்கிய பதினாறாவது படம் "நினைத்ததை முடிப்பவன்" படத்தில் வரும் கவிஞர் மருதகாசி எழுதி, விச்சு டார்லிங் இசையமைத்த "கண்ணை நம்பாதே" பாடல், எம் ஜி ஆர் பிறந்தநாள், நினைவு நாள் அன்று, அலுவலகம் செல்கையில், ஊர் முழுதும் இந்தப் பாடல் ஒலிக்கும், கேட்கும் போதே உற்சாகமாக இருக்கும்.

இன்றைய தமிழ் சினிமா கதாநாயகர்கள் இப்படியான பாட்டைத் தனக்கு வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தகமே. இந்தப் படத்தில் "பூமழை தூவி வசந்தம்..."என்ற இன்னொரு அருமையான பாடலும் உண்டு.





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-43


உன்னால் முடியும் தம்பி (1988) 

சென்ற வாரம் மதிய வேளையில் தொலைக்காட்சியில் இயக்குநர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கி, கமல் நடித்த 'உன்னால் முடியும் தம்பி' படம் ஒளிபரப்பானது. எப்போது போட்டாலும் பார்க்கக்கூடிய சில படங்களில் இதுவும் ஒன்று.

இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான படம், ஆனால் 32 வருடத்துக்கு முன்பே வந்துவிட்டது. குடிமறுப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, ஸ்வச்பாரத், தன்னிறைவு பெற்ற கிராம மேம்பாடு எனப் பல விஷயங்களை அப்பவே பேசியிருப்பார் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். சரியாக நான்கு வருடத்து முன்பு தான் ராஜேஷ், சரிதா நடிப்பில் 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற அரசியல் படத்தைத் தந்து அதிரவைத்தார். அதற்கும் முன்பு 1981-ஆம் ஆண்டுத் திரு கோமல் சாமிநாதன் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட 'தண்ணீர் தண்ணீர்' என்ற படத்தைத் தந்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அண்ணா ஹசாரே மற்றும் எம் எஸ் உதயமூர்த்தி அவர்களின் சமூக வாழ்க்கை பயணத்தைத் தழுவி மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்து, கே பாலசந்தர் இயக்கிய தெலுங்கு படம் 'ருத்ரவீணா' அதே ஆண்டில் (1988) ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கமலுடன் சேர்ந்து 'உன்னால் முடியும் தம்பி' என்ற படத்தைத் தமிழில் தந்தார்.

'பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை' ஜெமினி கணேசன்-'உதயமூர்த்தி'க் கமலஹாசன் இருவருக்கும் நடக்கும் அந்த Confrontation. அதற்கு இணையாக ஒலிக்கும் பின்னணி இசை ரகளையான இருக்கும்.

மரம் நாடும் தாத்தாவைப் பார்த்து Inspire ஆகும் கமல் (நாமும் தான்!). அப்போது வரும் புல்லாங்குழல் Progressive பின்னணி இசை அருமையாக இருக்கும்.

படத்தில் சீதா அறிமுகமாகும் அந்த முதல் காட்சி 'நச்'. பாலச்சந்தரின் அக்மார்க் 'டச்'. கமல்-சீதா சந்திப்பின் போது வரும் அந்தக் காதல் பின்னணி இசை (Love BGM) என்னுடைய கைப்பேசி அழைப்புமணி.

கமல்-சீதா திருமணம் நின்றுபோகும் தருணத்தில் அவர்களிருவரும் முகத்தில் காட்டும் அந்த Expressions பலே!

எப்பொழுதும் கே பாலசந்தர் படத்தில் துணைக் கதாபாத்திரங்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இதிலும் அப்படியே. மனோரமா, டெல்லிகணேஷ், நாசர், சார்லி, ஜனகராஜ், கிருஷ்ணன், ரமேஷ் அரவிந்த், தாரணி, பிரசாத் பாபு, மீசை முருகேஷ், வி கே ராமசாமி போன்றோர் கதையோட்டத்திற்கு வலுசேர்ப்பார்கள்.

இப்படி
நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். படத்தின் இன்னொரு நாயகன் ராஜாவின் இசை. ராஜாவின் ஆகச்சிறந்த படைப்பு இது.




நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-42

ர் எஸ் மனோகர்

காலஞ்சென்ற நடிகர், 'நாடக காவலர்' என போற்றப்பட்ட ஆர் எஸ் மனோகர் - தமிழ் சினிமாவின் ஒப்பற்ற நடிகர். இவர் நடித்த வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், நூற்றுக்கு நூறு, பில்லா, மற்றும் தீ   போன்ற படங்களைச் சென்னை தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன். தென்னகத்தின் 'ஜேம்ஸ் பாண்ட்' ஜெய்சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய வில்லன், வில்லனின் கையாள் என கர கர குரலில் மிரட்டலாகத் தனது நடிப்பை வழங்கியிருப்பார். சினிமாவில் வில்லன், நிஜத்தில் புராண மேடை நாடகம் மீது தீரா காதலும், அர்ப்பணிப்பும் கொண்ட கலைஞன். இவருடைய சம கால நடிகர்கள் பலர் மேடை நாடகத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தாலும். இவரின் 'நேஷனல் தியேட்டர்ஸ்'  நாடகக் குழு 'இலங்கேஸ்வரன்', 'சாணக்கிய சபதம்' , 'சூரபத்மன்', 'சிசுபாலன்', 'இந்திரஜித்', 'சுக்ராச்சாரியார்', 'நரகாசூரன்' மற்றும் 'திருநாவுக்கரசர்' போன்ற பிரமாண்ட அரங்க அமைப்புகள் கொண்ட மேடை நாடகங்களில், மந்திர-தந்திர காட்சிகள், போர்க்கள காட்சிகள் எனப் பல புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை மகிழ்வித்தவர். ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கும் நாடகத்தைப் பார்க்கக் கூட்டம் அலைமோதும், திரும்ப, திரும்பப் பார்த்து வியந்தவர்கள் உண்டு. சாணக்கிய சபதம் மற்றும் நரகாசுரன் நாடகங்களைச் சென்னை தூர்தர்ஷனில் அப்போது ஒளிபரப்பானது. இவர் கேரளாவிலோ, கர்நாடகாவிலோ அல்லது ஆந்திராவிலோ பிறந்திருந்தால் இவருக்குப் பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் கொடுத்துக் கௌரவித்திருப்பார்கள்.  இவர் மேடையில் நிகழ்த்திய மாயாஜாலத்தை இனியொருவர் நிகழ்த்துவது சாத்தியமில்லை. இதோ அவருடைய நாடகத்தின் சிறிய பகுதியினை கண்டுகளியுங்கள்:



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி     

Saturday, 21 December 2019

ஒரு கதை சொல்கிறேன் -1

இல்லை.....  இல்லை......

நான் ஒரு கதை சொல்லப் போகிறேன் ....நண்பர் ஒருவர் சொன்ன நிஜக் கதையை அப்படியே என்னுடைய பாணியில்.  

நண்பரின் உறவினர் பலசரக்கு கடை வியாபாரி. சின்ன கடைதான். அவரது கடையில் அநேகம் எல்லா பொருட்களும் கிடைக்கும். அதனால் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். பண்டிகை நாட்களில் சொல்லவே வேண்டாம் கூட்டம் அள்ளும். அந்த கடைக்குப் பழைய வாடிக்கையாளர்கள் நிறையப் பேர் உண்டு. 

எல்லோரிடமும் இருக்கும் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இவருக்கும் (வியாபாரி) இருந்தது, வேறு ஒன்றுமில்லை.. சோம்பேறித்தனம், அதனால் விளைந்த "இல்லை" என்ற  வார்த்தை பிரயோகம். வழக்கமான வாடிக்கையாளர் எதாவது பொருள் வேண்டி கடையில் கேட்டால்....இவரிடமிருந்து வரும் வார்த்தை "இல்லை... அடுத்தாப்ல நாலு கட தள்ளி இருக்கிற கடைல கேளுங்க..."  (அல்லது) "டர்னிங்ல ஒரு கட இருக்கு...அங்க கேளுங்க.."

இதில் வேடிக்கை என்னவென்றால், வாடிக்கையாளர் கேட்கும் பொருள்.. கடையில் இருக்கும் அல்லது பாரீஸிலிருந்து அந்த பொருள் கொள்முதல் செய்யப்படாமல் இருக்கும். அதை எடுத்த தர/ வாங்கி வரச் சோம்பேறித்தனம். வாடிக்கையாளர் கொடுக்கும் பட்டியலில் அந்த பொருள் இருந்தால் தான் தேடி எடுத்து கொடுப்பாராம். தனியாகக் கேட்டால் மேலே சொன்ன பதில் தான் வரும்.  

என்னுடைய நண்பர் விடுமுறை நாட்களில் அவருக்கு ஒத்தாசையாக இருக்கக் கடையில் வேலை செய்வதுண்டு. அவரை மீறி அந்த பொருளை எடுத்த தரப் பயம், சமயங்களில் கோபப்படுவார். நமக்கெதற்கு வம்பென்று சும்மா இருந்து விடுவார். அப்படியே, நண்பர், கடைக்குப் போவதைக் குறைத்துக் கொண்டார்.

வருடங்கள் ஓடியது, வேலை நிமித்தமாக நமது நண்பர், உறவினர் கடை வழியே செல்லுகையில், அந்த இடமே முற்றிலும் மாறியிருந்தது. அவரது உறவினர் கடை அந்த இடத்தில் இல்லை. சரி கடையை விரிவுபடுத்தியிருப்பார் போல என்று நினைத்தார்.

சில மாதங்கள் கழித்து, குடும்ப சுப நிகழ்வில் அந்த வியாபார உறவினர் குடும்பத்தைச் சேர்ந்தவரைச் சந்தித்துக் கேட்டறிந்தார். அதாவது விஷயம் இதுதான்: முன்பு கடை இருந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட இடமாகும்.  புதிதாகப்  பதவியேற்ற அதிகாரியின் உத்தரவின் பேரில் சாலை விரிவுபடுத்தவேண்டும் என்ற காரணத்துக்காகக் கடைகள் இடிக்கப்பட்டது. பல லட்ச ரூபாய் பொருட்கள் வீணானது, கொஞ்ச நாள் தள்ளுவண்டியில் கடை நடத்தவேண்டிய சூழல் வந்தது. வாடிக்கையாளர்கள் வருகையும் குறைந்தது. இதற்கிடையே, கவலையால் உடல் நலம் குன்றியது.  பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அதே பகுதியில் ஒரு சிறிய கடையை  வாடகை எடுத்து இப்போது வியாபாரம் செய்கிறார்.

கடையில் பொருட்கள் இருந்தும் "இல்லை" என்ற வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்தியதால் ஒரு நாள் கடையே இல்லாமல் போனது.

"இல்லை", "இல்லை", "இல்லை" என்று சொன்னால் ஒரு நாள் இல்லாமலே போய்விடும்/போய்விடுவோம். "முடியாது", "முடியாது" "முடியாது" என்று சொன்னால் ஒரு நாள் முடியாமலே போய்விடுவோம்.

எதிர்மறை சொற்களையே பயன்படுத்தக்கூடாதா என்றால்...எதிர்மறைச் சொற்களை எங்கு, எதற்கு சொல்லவேண்டுமோ அங்குச் சொல்லவேண்டும், "இல்லை", "முடியாது" என்ற வார்த்தைகளை எங்குப் பயன்படுத்தவேண்டுமோ அங்குப் பயன்படுத்தவேண்டும். அதைவிடுத்து நாளுக்கு 108 முறை அதையே சொல்லிக்கொண்டிருந்தால், அதனுடைய வேலையைக் காட்டத் தான் செய்யும். அதைத் தான் நமது பெரியவர்கள் வார்த்தை "அளந்து" பேசவேண்டும் என்று சொன்னார்கள்.

எதிர்மறைச் சொற்கள் நமது வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த கதை ஒரு சிறிய உதாரணம்.


பட உதவி, நன்றி:Google


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 

சிறந்த யுடியூப் சேனல் 2019

இந்த வருடத்தில் என்னை கவர்ந்த சில சேனல்களை பற்றி இப்போது  பேசுவோம்.

ஃபில்மி கிராஃப்ட்

சினிமாவை உள்ளேயிருந்து நேசிப்பவர்களை விட, வெளியே இருந்து நேசிப்பவர்கள் அதிகம். மேலே படியுங்கள்....

யுடியூப்-இல் எத்தனையோ சினிமா விமர்சன சேனல்கள் இருந்தாலும், திரு அருண் அளவுக்குச் சிறப்பாகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. அருண் ஒரு சிறந்த கதைசொல்லி. Filmi Craft-சினிமா ரசிகர்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டும் விதத்தில் இருக்கும் அவருடைய presentation. உங்களுக்கு எந்த ஜானரில், எந்த மொழி படம் வேண்டும்? கொரியா, ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குறும்படம், புதிய படம், இதுவரை கேட்டிராத உலகப் புகழ்பெற்ற பழைய படங்கள் - இவை அத்தனையும் Filmi Craft-இல் காணலாம்.

சும்மா அடித்துவிட்டுப் போகிற ஆசாமி இல்லை இவர், கேமரா கோணங்கள், பின்னணி இசைத் துணுக்குகள் பற்றி, ஷாட் பை ஷாட், ஏன் அந்த ஷாட் அந்தக்காட்சியில் வைத்தார்கள், இயக்குநர் என்ன சொல்ல வருகிறார், இயக்குநர் / நடிகரின் / நடிகையரின் முந்தைய சிறந்த படங்களின் சுவையான தகவல்கள், கதாபாத்திரங்கள் பேசும் ஆங்கில வசன வரிகள், அந்தக் கதாபாத்திரங்கள் தன்மை என்ன, என்பன போன்ற பல விசயங்களை ரசிகனுக்குப் புரியவைப்பார். எப்படித் தான் இவரால் இவ்வளவு விஷயங்களைத் திரட்ட முடிகிறதோ தெரியவில்லை. ஒவ்வொரு காணொளியிலும் அவருடைய Home Work & Hard Work தெரிகிறது. அதே சமயத்தில், படம் குடும்பத்துடன் காணக்கூடியதா, யாருக்கெல்லாம் இந்தப் படம் பிடிக்கும், அந்தப் படம் எந்தத் தளத்தில் உள்ளது என்ற விஷயங்களையும் சொல்லிவிடுவார்.

இவர் பரிந்துரை செய்யும் பெரும்பாலான சிறந்த உலகத் திரைப்படங்கள் யுடியூப் தளத்தில் காணக்கிடைக்கவில்லை. அனைத்தும் Amazon Prime, Netflix, Hotstar மற்றும் பல OTT கட்டண தளங்களுக்கு மாறிவிட்டது.

சரி உங்களுக்கு இந்தச் சினிமா பிடிக்கவில்லையா, பரவாயில்லை போகட்டும், ஒரு கதையை / சம்பவங்களை மற்றும் கதாபாத்திரத்தை / சூழலைப் பற்றி எப்படிச் சுவாரஸ்யமாகச் சொல்லவேண்டும் என்பதை இந்த Filmi Craft யுடியூப் சேனலை பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.

பிசினஸ் தமிழா:
இளைய தலைமுறையினர் அனைவரும் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் விக்னேஷ் அவர்கள், தமிழகத்தில் உள்ள விவசாயம், நெசவு, புதிய தொழில்(நுட்ப) வாய்ப்புகள், சந்தை வியாபார வாய்ப்புகள், ஜவுளி கண்காட்சி என இப்படி எல்லாவற்றிலும் புகுந்து, சம்பந்தப்பட்ட ஆட்களைச் சந்தித்து, பேட்டி கண்டு தனது பயனர்களுக்குத் தெரிவிக்கிறார். சமீபத்திய சாதனை, குஜராத் மாநிலம் சூரத் சென்று அங்குள்ள ஜவுளி தொழில் உற்பத்தியாளர்கள் பேட்டி, சூரத் எப்படிச் செல்வது, நம்பகமான ஜவுளி நிறுவனத்தை எப்படி அணுகுவது எனப் பல விஷயங்கள் உள்ள காணொளி கண்டு வியந்தேன்.

ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிப்பதும், அதைத் தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குறையாமல், திறம்பட நடத்துவதும் சாதாரண விஷயம் இல்லை. நல்ல கருத்துகளையும், நாராசமான கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் வேண்டும்.

இன்னும் வரும்...........

பட உதவி, நன்றி:Google


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 


Friday, 20 December 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-41

குங்குமச்சிமிஷ் (1985)

மோகன்-ராஜா சார் இணை "சங்கீத மேகம்", "பருவமே", "கடலோரம் வீசும் காற்று", "இளையநிலா" போன்ற எத்தனையோ அருமையான பாடல்கள் தந்திருக்கின்றனர். இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கி, மோகன், இளவரசி, மற்றும் ரேவதி நடித்த "குங்குமச்சிமிஷ்" படத்தில் இடம்பெற்ற "நிலவு தூங்கும்.." என்ற மனதை வருடும் பாடலும் அதுபோல ஒன்று தான். படம் வந்த புதிதில் இந்தப் பாடல் சென்னை தூர்தர்ஷன், இலங்கை வானொலி, சென்னை வானொலி, விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு நிகழ்ச்சி, கல்யாண, காதுகுத்து, திருவிழா கச்சேரி என எல்லா இடத்திலும் ஒலித்து "கிறுகிறுக்க" வைத்தது. எளிய இசைக்கோர்வை, பாடல் ஆரம்பத்தில் வரும் மவுத்தார்கன் இசைத் துணுக்குக் கொஞ்சம் கவனிக்க வைக்கும். தூக்கம் வரவில்லையா..? இந்தப் பாடலை கேளுங்கள் பாடல் முடிவதற்குள் தூங்கியிருப்பீர்கள்.

இதே படத்தில் மலேசிய வாசுதேவன் மற்றும் ஜானகி அம்மா பாடிய "கூட்ஸு வண்டியிலே.." என்ற இன்னொரு பாடலும் உண்டு. அப்போதிருந்த Special Effects வசதியை வைத்து இப்பாடலைச் சிறப்பாகப் படமாகியிருப்பார் இயக்குநர்.



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி