Wonderful Shopping@Amazon

Monday, 24 December 2018

படி படி லேசெ மனசு(2018)

எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கிறது, வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு ரகம்.  குடும்பம், ஆக்ஷன், மற்றும் பேய் படங்கள் வந்து ஓய்ந்து பிறகு. மீண்டும் காதல் படங்கள் வந்து ரசிகனை  ஆசுவாசபடுத்தும்.  காதல் படங்களுக்கு என்றுமே மவுசு இருக்கத்தான் செய்கிறது.

இந்தாண்டின் இறுதியில் தெலுங்கில் வந்திருக்கும் Musical Romantic Comedy படம் படி படி லேசெ மனசு.

எந்த ஒரு நடிகரும் கொஞ்சநாள் தான் காதல் படங்கள் நடிக்கமுடியும். ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் திரை வாழ்வில் காதல் படங்கள் பெரு வெற்றியை தேடி தந்திருக்கும்.

சர்வானந்த் - தெலுங்கு திரையுலகில் ரன் ராஜா ரன், மல்லி மல்லி இதி ரன்னி ரோஜு,  எக்ஸ்பிரஸ் ராஜா, ராஜாதி ராஜா, ஷதமானம் பவதி, ராதா, மஹானுபாவுடு என வித்தியாசமான கதைகளில் நடித்து வெற்றிகளை குவித்துவரும் நடிகர்.  காமெடி, ஆக்ஷன் என மனிதர் கலந்து கட்டி நடிக்கிறார்.  100% பொழுபோக்கு அம்சங்கள் அவர் படங்களில் நிச்சயம் இருக்கும்.

பெரிய நடிகர் நடித்த படமும், சர்வானந்த் நடித்த 'ஷதமானம் பவதி' படமும் ஒரே நாளில் வெளியானது.  ஆனால் 'ஷதமானம் பவதி' படம் பெரிய நடிகரின் பட வசூலை பாதித்தது. குடும்ப மாண்புகளை சொன்ன 'ஷதமானம் பவதி' ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

ஃபிடா, எம்சிஏ போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவிக்கு இது மூன்றாவது தெலுங்கு படம்.

சரி விஷயத்துக்கு வருகிறேன்..... 'படி படி லேசெ மனசு...' என்ன ஒரு அருமையான பெயர்.. 'விழுந்து விழுந்து எழும் மனசு..' என்று பொருள் கொள்ளலாம். சர்வானந்த் மற்றும் சாய் பல்லவி நடித்து வெளிவந்திருக்கும் படத்தை பற்றி பார்ப்போம்.

நாயகன் விழுந்து விழுந்து நாயகியை காதிலிக்கிறான் ஒரு பூகம்பம்  அவர்களை பிரிக்க, அவர்கள் மீண்டும் எப்படி ஒன்று ஒன்று சேர்கிறார்கள் என்பது மீதி கதை.  காதல், காதல், காதல், பிரேக்-அப் மீண்டும் காதல், காதல் சுபம்.

சர்வானந்த் (சூர்யா) - சாய் பல்லவி (வைஷு) ...ப்பா  என ஒரு கெமிஸ்ட்ரி. சாய் பல்லவி துரு துரு, கண்கள்........காதல், சோகம் என வாவ்சொல்ல வைக்கிறார்...
நாயகனுக்கு முத்தத்தை மொத்தமாக வரி வழங்குகிறார் நாயகி.

விஷால் சந்திரசேகரின் இசையில் "படி படி லேசெ மனசு", "கல்லோலம்",
"ஹ்ருதயம் ஜார்பி...", "ஏமை போயாவே..","ஓ மை லவ்லி.."  போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.  பின்னணி இசை சுமார்.

ஹௌரா பாலம், டம் டம் ரயில் நிலையம், ஹூக்லி படகு குழாம், கல்கத்தாவின் நெருக்கமான வீதிகள் என ஒளிப்பதிவாளர் ஜே கே வின் கேமரா நம்மை அழைத்து செல்கிறது.

சில படங்களில் துணை கதாபாத்திரங்கள் நமக்கு பிடிக்கும் காரணம் அவர்கள் இயல்பான நடிப்பு நம்மை.  இதில் சாய் பல்லவிக்கு அப்பாவாக வரும் முரளி சர்மா வெகு இயல்பாக நகைசுவை கலந்து நடித்திருகிறார். மெயின் வில்லன், போலீஸ் என கலக்கியவர் இப்பொது அப்பா வேடங்களில் முத்திரை பதித்து வருகிறார்.

சாய் பல்லவிக்கு தோழியாக வரும் நடிகை Cute..!

இயக்குனர் ஹனு ராகவபுடியின் நான்காவது படம்  படி படி லேசெ மனசு...! இடைவேளைக்கு பிறகு படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது மற்றபடி காதல் இசை பட ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் இந்த படம்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

கே ஜி ஃஎப் - முதல் பாகம் (2018)


நவீன் குமார் கவுடா என்கிற நடிகர் யாஷ் அல்லது யஷ் - கன்னட திரையுலகின் வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டார். குறுகிய காலத்தில் பல வெற்றிப்படங்கள்.  அவருடைய சில படங்களை பார்த்திருக்கிறேன் அதில் கஜகேசரி, மாஸ்ட்டர்பீஸ், மிஸ்டர் & மிஸ்டர்ஸ் ராமச்சரி மற்றும் கூகுலி எனக்கு பிடித்த படங்கள்.  நல்ல உயரம்,  சமகால இளைஞர்களை பிரதிபலிக்கும் தோற்றம், மீசையுடன் சேர்ந்த அழகான குறுந்தாடி, ஆக்ரோஷம், நகைசுவை என கலந்து கட்டி மனிதர் ஜமாய்க்கிறார்.

கே ஜிஎப் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்தாலும், கே ஜிஎப் டிரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை  எகிற வைத்தது.  பெங்களுருவில் உள்ள என்னுடைய நண்பர் அவ்வப்போது படத்தை பற்றி  சொவதுண்டு. கண்டிப்பாக பார்க்கவேண்டியிருந்தார்.  தமிழிலும் வந்ததால் கிளம்பிவிட்டேன்.

கே ஜி எப் - Best of Neo-Noir Film in  Indian Cinema என்று சொல்வேன். கன்னட திரையுலகை திரும்பி பார்க்கவைக்கும் படைப்பு.  கோலார் தங்க வயலும் அதன் பின்னிலுள்ள ஒடுக்குமுறை, ரத்தக்கரை படிந்த அடிமை வரலாறு மற்றும் தங்க சாம்ராஜ்யத்தை கைப்பற்ற  நாயகன் நடத்தும் வேட்டை என எழுத்தாளர்  ஆனந்த் நாக் பார்வையில் விரிகிறது படம்.

நாயகன்  'ராக்கி' அறிமுகமாகும் அந்த முதல் சண்டை காட்சி அட்டகாசம். இதுபோல ஒரு அறிமுக காட்சி பார்த்து நீண்ட நாளாயிற்று.  இந்தாண்டின்
சிறந்த நாயகன் அறிமுக காட்சி.  நாயகன் யாஷ் தன்னுடைய அனாயசமாக  நடிப்பால் மிரட்டுகிறார்.  படத்தில் நாயகன் பயன்படுத்தும் பைக் வடிவமைப்பு அருமை.

இடைவேளைக்கு பிறகு வரும் தங்க வயல் காட்சிகள் நம்மை வாய் பிளக்க வைக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் கலை இயக்குனர் சிவகுமார் குழாம் உழைப்பு தெரிகிறது. கோலார் தங்க வயலை நாம் பார்த்தது இல்லை ஆனால் அது இப்படி தான் இருக்கும் என்று என்னுனமளவுக்கு தத்ரூபமாக படைத்திருக்கிறார் கலை இயக்குனர்.

கோலார் தங்க வயலில் நடக்கும் பைக் துறத்தல் மற்றும் சுரங்க அடியில் நடக்கும் சண்டைக்காட்சியை படமாக்கிய விதம் வாவ்!!

தமன்னா ஒரு  பாட்டுக்கு வந்து போகிறார். கதாநாயகி ஸ்ரீநிதி நாயகன் ராக்கி அறிமுகமாகும் பாடல் காட்சி அருமை. பின்னணி இசை காட்சிகளின் படத்தின் வீரியத்தன்மையை.  பாடல்கள் பெரிதாக மனதில் ஓட்டவில்லை.

படத்தில் வரும் எல்லா நடிகர்களும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லை ஆதாலால் படத்தில் எளிதில் ஒன்றை முடிகிறது.  படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள். ஆனால் வில்லன்களுக்கெல்லாம் வில்லன் நம்முடைய நாயகன் ராக்கி.  கிளைமாக்ஸ் காட்சி திக் திக் நிமிடங்கள்.

இது பீரியட் சினிமா ரசிகர்களுக்கானது.  அகன்ற திரையில் கண்டு சுகானுபவம் பெறுக.

கே ஜி ஃஎப் - பாகம் இரண்டுக்காக காத்திருப்போம்......

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Saturday, 15 December 2018

ஓடியன் - 2018


மோகன்லால் நடித்த எத்தனையோ படங்களை பார்த்திருக்கிறேன். அதில் என்னுடைய விருப்ப படங்கள்... ராவணபிரபு, கிலுக்கம், ஆறாம் தம்புரான், ஸ்படிகம், நரசிம்மம், சித்ரம், தேவாசுரம், கிரீடம், காலபாணி, என்னும் எப்போழும் மற்றும் தேன்மாவின் கொம்பத்து.

அவர் ஸ்டலிலிஷாக பேசும் வசனங்கள் எனக்கு பிடிக்கும்.

"சவாரி கிரி கிரி.........",  "நீ போ மோனே தினேஷா..........", "மீனுக்குட்டி...",  "முத்து காவு...",  "களி கனிமங்களத்தே தம்புரானோடு வேண்ட.."

2018 ன் மலையாள மொழியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோகன்லால் படம் "ஓடியன்". படத்தை பற்றிய செய்திகள் அவ்வப்போது படிக்க நேர்ந்தது.  சரி அப்படி என்னதான் இருக்கிறது, பார்ப்போமே என்று போனேன்.

வெளிநாட்டு பழங்குடிகள் பற்றிய சிறுகதைகளை படித்திருப்போம் / கேட்டிருப்போம். அக்கதைகளின் உள்ளடக்கம் தார்மீக அறம் பற்றி சொல்லப்பட்டிருக்கும். அறம் மீறி நடந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்கவேண்டிருக்கும் என்பது போல கதை இருக்கும்.

ஓடியன் படம் அதுபோல ஒரு கதை என்று தோன்றுகிறது. மெகா ஸ்டார் மம்முட்டி கதை சொல்ல விரிகிறது படம்.

நமது நாயகனும் தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட 'சித்து' மற்றும் 'கட்டு' வேலைகளை நியாயமான காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறான். இருந்தாலும் கொலை பழி நாயகன் மீது விழ, ஊரைவிட்டு தலைமறைவாகிறான்.

பதினைந்து வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பி வரும் தன் மீது விழுந்த பழியை எப்படி தீர்க்கிறான் என்பது மீதி கதை.

நாம் மோகன்லால் நடிப்பை எத்தனையோ படங்களில் பார்த்து  வியந்திருப்போம், இதிலும் அப்படியே. காசியில் அறிமுகமாகும் அந்த முதல் காட்சி அருமை. எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இளவயது மற்றும் முதிர்ச்சியான வயது என மாறுபட்ட கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார் Complete Actor மோகன்லால்.

பொதுநலன் கருதியோ என்னவோ 'சித்து' மற்றும் 'கட்டு' வேலைகளை பற்றிய டீடைலிங் இயக்குனர் சொல்லாமல் விட்டிருக்கலாம் என்று நினைக்கிறன்.

சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்னின் உழைப்பு ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் தெரிகிறது. அதற்கேற்றார்போல் லாலேட்டனின் எனர்ஜி லெவல் அசரடிக்கிறது.  அந்த கிளைமாக்ஸ் சண்டை காட்சி அருமை.

பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர், சனா அல்தாப், நரேன், இன்னோசென்ட், மனோஜ் ஜோஷி, சித்திக் மற்றும் நம்மூர் மொட்டை ராஜேந்திரன் (கிளைமாக்ஸ் சண்டை காட்சி) என அவரவர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.  சாம் சி எஸ் பின்னணி இசை அருமை.

கமர்சியல் பட ரசிகர்களுக்கு ஏற்ற படம் இதுவல்ல.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Monday, 29 October 2018

பாரிஸ், பாரிஸ்

பாரிஸ் என்றதும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தான் உங்களுக்கு ஞாபகம் வரும்.  நான் சென்னையில் உள்ள பாரிஸ் கார்னர் பற்றி பேசுகிறேன். சென்னையில் எனக்கு பிடித்த இடம் பாரிஸ் கார்னர்.

பாரிஸ் கார்னர், சௌகார்பேட், மின்ட் தெரு, உயர்நீதிமன்றம், பிராட்வே, இரண்டாவது சந்து கடற்கரை  சாலை, பூக்கடை, யானை கவுனி, ஜார்ஜ் டவுன், வால்டாக்ஸ் சாலை, மற்றும் பல நூற்றுக்கணக்கான தெருவை உள்ளடக்கியது தான் பாரிஸ். அதன் மவுசு இன்றும் குறையவில்லை.

மாமாவின் கைபிடித்து சிறுவயதில் பாரிஸ் / கொத்தவால்சாவடி சேரும் சகதியும் நிறைந்த தெருக்களில் நடந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது,  மாமா தன்னுடைய நட்டு மருந்து கடைக்கு சரக்கு வாங்க போகும்பொழுது என்னையும் அழைத்து செல்வார்.

காலையில் கடைக்கு தேவையான சரக்கை கொள்முதல் செய்துவிட்டு வந்தால்.  அன்று இரவு மாட்டு வண்டியில் வந்து சேரும்.  இப்பொது லாரியில் வந்து இறங்குகிறது.
துணி வகைகள், பூஜை சாமான்கள், பறவைகள் - அழகு மீன்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூக்கள், நாட்டு மருந்து, வாசனை பொருட்கள், இரசாயன பொருட்கள், காகிதம் முதலிய எழுது பொருள்கள், லாகிரி வஸ்துக்கள், மோட்டார் பம்ப் செட், மின் சாதன உபகரணங்கள், வீட்டு பராமரிப்பு பொருட்கள், என ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு தெரு.  மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் என தெரு முழுதும் வியாபாரிகள் - வாடிக்கையாளர் நிரம்பி வழியும்.

என்ன வேண்டும் உங்களுக்கு.. எல்லாம் கிடைக்கும் ஊசி முதல் எந்திரம் வரை
அனுபமுள்ள ஆட்களோடு போனால் குறைந்த / நியாமான விலையில் வீட்டுக்கு தேவையான தரமான பொருட்கள் வாங்கி வரலாம்.

சென்னையை சுற்றி உள்ள எல்லையோர ஆந்திரா நகரங்களுக்கு பாரிசிலுருந்து தான் பொருட்கள் செல்கிறது.

தி நகர், புரசைவாக்கம் போன்ற சில்லறை விற்பனை சந்தைகளுக்கு வியாபாரிகள் பாரிசிலுருந்து தான்  கொள்முதல் செய்கிறார்கள்.

குறுகலான சந்து / தெரு / குறுகலான சாலையில் ரிக்க்ஷா, ஆட்டோ, மனிதர்கள் நீ,  நான்  என்று முந்துவார்கள், அவர்கள் மேல் மோதிவிடாமல் கவனமாக நடக்க வேண்டும்,

இரண்டு மாதத்திற்கொருமுறை பாரிஸ் கந்தசாமி கோயில் தெருவில் உள்ள சம்பத்து செட்டி கடைக்கு செல்வது வழக்கம். குளியல் சீக்காய் அரைப்பதற்கு தேவையான மூல பொருட்கள், நொய் அரிசி, சிகப்பரிசி, மூங்கில் அரிசி, சத்து மாவு அரைப்பதற்கு தேவையான மூல பொருட்கள், பனை வெள்ளம், பனஞ்சர்க்கரை, பூஜை பொருட்கள், சாம்பிராணி மற்றும் பல பொருட்கள். (இதையெல்லாம் அதிக விலை  கொடுத்து நம் அருகில் உள்ள கடைகளில் வாங்க வேண்டியிருக்கும்). அப்படியே கந்தசாமி கோவில், பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில் தரிசனம் செய்து விட்டு  வீடு வந்து சேர்வதுண்டு.

நீங்கள் பாரிஸ் போனால் கீழ்கண்ட கடைகளில் சாப்பிடலாம்.  சில சுற்றுலா அமைப்புகள் Food Walk என்ற பெயரில் இங்கெல்லாம் கூட்டி போக சிறிய தொகையை வசூலிக்கிறார்கள்.  உணவுக்கு நீங்கள் தான் செலவழிக்க வேண்டும்!  நீங்களே கூட உணவகத்தை தேடி கண்டுபிடித்து உண்டு மகிழலாம்.
  • காக்கடா ராம்பிரசாத் வட இந்திய இனிப்பாகம் மற்றும் நொறுக்குத்தீனியகம்.
  • சீனா பாய் டிபன் கடை நெய் மினி பொடி இட்லி, மினி பொடி தோசை மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது.
  • இரண்டாவது கடற்கரை சாலை தெருவில் பர்மா உணவு சாப்பிடலாம்.
  • பழமையான 777 உணவகம்.
  • ஸ்ரீராமகிருஷ்ணா இனிப்பகம் மற்றும் உணவகம்.
  • கமல் நொறுக்குத்தீனி கடை.
  • சோட்டு மோட்டு ஜெயின் நொறுக்குத்தீனி கடை.
  • கிங்’ஸ் வடாபாவ் கடை.
  • அஜ்நாபி மிட்டாய் கடை.
  • மாயா நொறுக்குத்தீனி கடை.
  •  இன்னும்  நிறைய உண்டு.
பாரிசில் கீழ்கண்ட பழமையான கோயில்கள் பல உண்டு அதில் சில....  நேரமிருந்தால் விஜயம் செய்யலாம்.
  • ஸ்ரீ காளிகாம்பாள் கோயில்.
  • ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோயில்.
  • ஸ்ரீ கச்சாலீஸ்வரர் கோயில்.
  • ஸ்ரீ கந்தசாமி கோயில்.
  • ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில்.
  • ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில்.
  • ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்.
உங்களக்கு சோர்வாக இருக்கிறதா...பாரிசில் உள்ள தெருக்களில் சிறு நடை பயிலுங்கள். ஆயிரக்கணக்கான தொழில்கள், வீடுகளற்ற ஆயிரக்கணக்கான மக்கள், பாரிஸை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், சிறு / நடைபாதை வியாபாரிகள் என எல்லோரும் உங்கள் கண்முன் வந்து போவார்கள். அவர்களை பார்க்கும் போது உங்கள் சோர்வு நீங்கி புதிய உற்சாகம் பிறக்கும்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Tuesday, 23 October 2018

ஒரே நாளில் மூன்று நரசிம்மர் கோயில்கள்

மூன்று வருடங்களாக போக வேண்டும், போக வேண்டும் நினைப்பதுண்டு. ஆனால் சில சூழ்நிலைகளால் போகமுடியவில்லை.  சரி இந்த முறை தனியாக போக முடிவு செய்தபோது. மின்சாரமும் (சம்சாரம்) பிள்ளைகளும் வர விருப்பம் தெரிவிக்க... போக முடிவானது.

காலை 6.30  மணிக்கு,  சென்னை எழுப்பூரிலிருந்து புறப்படும் பாண்டிச்சேரி பாசேன்ஜ்ர் பயணம் செய்து விழுப்புரம் இறங்கி அங்கிருந்து மூன்று கோயில்களையும் தரிசிக்க எண்ணியிருந்தேன்.

அதற்குள்ளாக மேலும் இரண்டு குடும்பங்களும் எங்களுடன் இணைய....சரி தனியாக ஒரு டெம்போ ட்ராவலர் வேன் முன்பதிவு செய்து. சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு வீட்டிலுருந்து புறப்பட்டோம்.

காலை சிற்றுந்துண்டிக்கு இட்லி, சாம்பார், கார சட்னி, மின்சாரம் தயார் செய்து கொண்டுவந்தாள் மற்றும் எங்களுடன் பயணிக்கும் வாண்டுகளுக்கு நொறுக்கு தீனி.

பெருங்களத்தூரில் காப்பி பிரேக் மற்றும் மாமண்டூரில் டிபன் பிரேக்.  விழுப்புரம் தேசிய நெடுஞசாலையிலுருந்து பிரிந்து பரிக்கல் இருப்பு பாதையை கடந்து கோயிலை சரியாக 10.15 மணிக்கு அடைந்தோம். கோயிலில் மிதமான கூட்டம் ஆண்கள் சட்டை கழட்டிவிட்டு தான் சுவாமி தரிசனம் செய்யவேண்டும்.  வரிசையில் நின்று சுவாமி சுவாமி தரிசனம் செய்து விட்டு 11.00 மணிக்கு பரிகளிலுருந்து புறப்பட்டோம்.

விழுப்புரம் தேசிய நெடுஞசாலையிலுருந்து பண்ருட்டி நகரம் வழியாக பல கிராமங்களை கடந்து  பூவரசன்குப்பத்தை சரியாக  12.30 ,மணிக்கு அடைந்தோம்.  அதற்குள் கோயில் நடை அடைக்கப்பட்டது.  அங்கிருந்து அருகே உள்ள சிறுவதந்தாடு கிராமத்தில் உள்ள ஒரு சிறிய உணவகத்தில் மதிய உணவை முடித்தோம்.  பட்டு வஸ்திரங்களுக்கு பெயர் பெற்ற இடம் சிறுவதந்தாடு. மறுபடியும் கோயிலுக்கு வந்து ஸ்வாதி மண்டபத்தில் இளைப்பாறினோம்.

சரியாக மாலை 4.15 மணிக்கு கோயில் திறந்தவுடன் சுவாமி தரிசனம் செய்தோம்.  அங்கிருந்து சிங்கிரிக்குடியை நோக்கி புறப்பட்டோம்.  மாலை 6.00 மணிக்கு கோயிலை அடைந்து சுவாமி தரிசனம் செய்தோம்.

அடுத்து ஆதி திருவரங்கம் செல்வதாய் திட்டம். ஆனால் அங்கேயே 7.00 மணி ஆகிவிட்டது.  மேலும், சென்னை சென்று சேர தாமதமாகும் என்பதால் திட்டம் ரத்தானது.

அங்கிருந்து புறப்பட்டு வந்து திண்டிவனத்தில் இரவு உணவை முடித்துவிட்டு வீடு வந்து சேர  இரவு 12.00  மணி ஆகியிருந்தது.

வரைபடம் ஒரே நேர்கோட்டில் மூன்று நரசிம்மர் கோயில்கள் இருப்பதாக காட்டினாலும்.  மூன்றும் வெவேறு மாவட்டங்களில் இருக்கிறது.  போகும் பாதையும் நீண்ட தூரமாக இருக்கிறது. பூவரசன்குப்பத்தை அடைய பண்ருட்டி நகரை கடந்து தான் போக வேண்டும்.  சிங்கிரிக்குடியை அடைய புதுச்சேரி - வில்லியனுர் வழியாக செல்லவேண்டியிருந்தது.

விழுப்புரம் to பரிக்கல் 25 கி மீ
பரிக்கல் to பூவரசன்குப்பம் : 36  கி மீ
பூவரசன்குப்பம் to சிங்கிரிக்குடி : 26 கி மீ
சிங்கிரிக்குடி to சென்னை : 177 கி மீ

பரிக்கல் மற்றும் பூவரசன்குப்பத்தில் நரசிம்மர் இலட்சிமியுடன் இருக்க, சிங்கிரிக்குடியில் நரசிம்மர் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

ஒரு நபருக்கு ரூபாய் 700/- கொண்டு போய் - கொண்டுவந்து விட ஓட்டுநர் படிப் பணம் மற்றும் உணவு தனி.  ஓட்டுநர் புதிதென்பதால் கூகிள் வரைபடம் கைகொடுத்தது.

நேராக விழுப்புரம் சென்று அங்கிருந்து பரிக்கல் பஸ்ஸில் சென்று, பிறகு பரிக்களிலுருந்து இன்னொரு பேருந்து பிடித்து பூவரசன்குப்பம் சென்று அங்கிருந்து சிங்கிரிக்குடிக்கு பேருந்து ஏறி சுவாமி தரிசனம் செய்யலாம் என்று நினைத்தால், உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள் அது சாத்தியமே இல்லை. பேருந்து வசதி அரிது. மூன்று கோயில்களும் தொலை கிராமங்களில் அமைந்துள்ளது. தனி வாகனம் தான் சிறந்தது. 

எதிரிகள் தொல்லை நீங்க, கடன் தொல்லை தீர, மன அமைதி பெற, மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாக மூன்று நரசிம்மர் கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் நல்லது.

எதிரியும் நல்லாயிருக்கட்டும், அவனை எதிர்கொள்ள மனோதைரியத்தை மட்டும் கொடுப்பா ஜெய் நரசிம்மா !!!

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Friday, 19 October 2018

பி வி ஆர் ஐகான் சினிமாஸ்

பத்து திரைகள் கொண்ட திரைப்பூங்காவை பி வி ஆர் குழுமம் சென்னை அண்ணா நகர் வி ஆர் மாலில் திறந்துள்ளதுசரி அலுவலகம்  முடிந்து ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாமே வி ஆர் மாலுக்கு போனேன்.

சமீபகாலமாக திரை அனுபவம் முற்றிலும் மாறியுள்ளதுகுறிப்பிட்ட சில திரைப்படங்களை திரையங்குகளில் பார்ப்பதே சிறந்தது. அப்போதுதான் அதன் முழுமையான வீச்சை அனுபவிக்க முடியும்.

10 -20 வருடங்களுக்கு முன் திரையரங்கம் என்றாலே ஊருக்கு மத்தியிலோ அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ இருக்கும்நீளமான கட்டை இருக்கை - ரெண்டாவது வகுப்பு, முதல் வகுப்பு நல்ல இருக்கை, மின் விசிறி, திரை மெல்ல மேலே எழும்பும், படம் முடிந்ததும் கிழே இறங்கும்ஆறிப்போன சமோசா, சூடான முட்டை பஜ்ஜி, காப்பி, பாப்கார்ன், மோசமான கழிவறைகள், ப்ரொஜெக்ட்டர் ஓடும் சத்தம் தெளிவாக  கேட்கும், ஒளி அமைப்பு பற்றி சொல்லவே வேண்டாம்அப்படியும் நாம் எண்ணற்ற திரைப்படங்களை ரசித்தோம். அது ஒரு இனிய அனுபவம்

பெருநிறுவனங்களின் வருகைக்கு பிறகு ஒற்றை திரை கொண்ட திரையரங்கங்கள் எல்லாம் நான்கு - ஐந்து திரை கொண்ட திரை பூங்காவாக மாறி வருகிறது. இது ஒரு நல்ல மாற்றம்நிறைய படங்கள் ஒரே இடத்தில. நமக்கு பிடித்த படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கலாம். ஆனால் என்ன, நுழைவு கட்டணம், வண்டி பார்க்கிங் கட்டணம், திரையரங்கனில் உள்ளே விற்கப்படும் தின்பண்டங்கள் விலை என நமது பர்ஸை பதம் பார்க்கும்.

சரி பி வி ஆர் ஐகான் எப்படி?

கௌண்டரில் போதிய ஆட்கள் இல்லாததால்  நீண்ட நேரம்  காத்திருக்கவேண்டியதாயிற்று. 'FIRST MAN' ஆங்கில படத்துக்கு டிக்கெட் வாங்கினேன். திரை எண்- 6, படத்தில் ஒன்ற கொஞ்ச நேரம் பிடித்தது காரணம் உள் அலங்கார வேலைப்பாடுகள், ஒளி ஒலி அமைப்புகள்பெரிய திரை, என சூழல் அருமையாக இருந்தது. திரைக்கும் பட்ஜெட் டிக்கெட் வரிசைக்கும் விசாலமான இடைவெளி, படம் முடிந்து வெளியேற தனி வழி, நேராக பார்க்கிங் பகுதிக்கு செல்லுமாறு வடிவமைப்பட்டுள்ளது.

எங்கு காணினும் பிரம்மாண்டமான  L C  D திரை, அதில் வெளி வரப்போகும் திரைப்படங்களின்  திரை முன்னோட்டம் ஓடிக்கொண்டிருந்தது.  சொகுசு லாஞ்சு, 10  திரையும் DOLBY ATMOS ஒலி அமைப்பு கொண்டது  3D படங்களை ரசிப்பதற்கென்றே அதிநவீன PXL என்ற திரையும் உண்டு. மொத்தத்தில் உலக தர அனுபவம்.

ஒரு விஷயம் செய்திருக்கிறார்கள்......சினிமாவை நேசிக்கும் ஒரு நிறுவனத்தால் மட்டுமே இதைசெய்ய முடியும்அதாவது, உலக புகழ் பெற்ற இயக்குனர்கள் உதிர்த்த வார்த்தைகள், புகழ் பெற்ற உலக திரைப்படங்களின் பழய வின்டேஜ்  சுவரொட்டிகள் சுவரில் மாட்டியிருந்தார்கள், காண்போரை வியக்க வைக்கிறது.

மூன்று சிற்றுண்டி அரங்குகள் உள்ளன வெவ்வேறு சுவைகளில்  பாப்கார்ன்  முதல் பல சிற்றுண்டிவகைகள் கிடைக்கிறது. விலை உங்களுக்கே தெரியும்போன் செய்தால் நம் இருக்கைக்கே வந்து  தருகிறார்கள். சுத்தமான கழிவறைகள். பட்ஜெட் டிக்கெட்டுகள் தாராளமாக கிடைக்கிறதுஒரு நல்ல திரைப்படத்தை ரசிக்க இது போதாதா?

சமீபத்தில்பி வி ஆர் ஐகான் திரையரங்கில் பார்த்த படங்கள்:
வட சென்னை, FIRST MAN (ஆங்கிலம்) மற்றும் அரவிந்த சமேத வீர ராகவா (தெலுங்கு).

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

வட சென்னை - பாகம் ஒன்று

இதற்கு முன்பு வட சென்னையை மையமாக வைத்து புதுப்பேட்டை, பொல்லாதவன், மெட்ராஸ், கோலமாவு கோகிலா என பல படங்கள் வந்தாலும் வட சென்னை படம் முற்றிலும் வேறான கதை கொண்டது.

இடம்பெயர்வு உள் அரசியல், வஞ்சகம், துரோகம், மற்றும் காதல்,  இவை கலந்ததே வட சென்னை.  இயக்குனர் வெற்றிமாறன் சிறந்த கதைசொல்லி, இதில்  நான்-லீனியர் முறையில் கதை சொல்லி இருக்கிறார்

நாயகன் கேரம் விளையாட்டு போட்டியில் தேசிய பட்டம் பெற்று அமைதியான வாழ்க்கை வாழ  ஆசைப்பட,  காதல் விவகாரத்தில் ஒருத்தனை போட்டுத்தள்ள, அதன் மூலமாக குணாவிடம் சேர, குணா நாயகனை வைத்து இன்னொரு கொலை முயற்ச்சியை நிகழ்த்த. குணாவின் சுயரூபம் நாயகனுக்கு தெரிய வர, அப்போது நாயகன் எடுக்கும் முடிவு அடுத்த பாகத்தில்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் உண்டு என்பதற்கேற்ப இயக்குனர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும்  நன்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமே மெர்சல்.  ஐஸ்வர்யா - தனுஷ் காம்போ கலக்கல் மற்றும் குட் கெமிஸ்ட்ரி.

அமீரின் பகுதி படத்திற்கு அடித்தளம்.  ஆண்ட்ரியா படத்தின் முக்கிய திருப்பத்திற்கு உதவுகிறார்.  இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் படங்கள் அவர் மேல் தான்  பயணிக்கும் போல் தோன்றுகிறது.

தனுஷ் நல்ல நடிக்கிறார் என்று சொன்னால் நன்றாகவா இருக்கும், ஆனால் துணை கதாபாத்திரங்களும்  நன்றாக நடித்திருப்பது தான் படத்தின் ஹை லைட்.

படத்தில் வரும்  முதல் இருபது நிமிட சிறை  காட்சிகள் டீடைலிங் அருமை.

சாதாரணமாக  இந்த மாதிரி படங்களுக்கு இசையும் ஒரு துணை கதாபாத்திரமாக பயணிக்க வேண்டும். பின்னணி இசை முன்னிலை வகிக்க வேண்டும். ஆனால் பின்னணி இசை பெரிதாக ஈர்க்கவில்லை. மான்டேஜ் பாடல்கள்.  சந்தோஷ் நாராயணன் தன்னுடைய முன்னோடிகளிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றும் சிலர் பொல்லாதவன்  படத்தின் பின்னணி இசை ரிங்க்டோன் வைத்திருப்பதை கேட்க முடியும்.

இடம்பெயர்வு உள் அரசியலால் பூர்வகுடிகள் சந்திக்கும் பிரச்சனைகள்  மனித நாகரிகம் தோன்றிய முதலே இருந்து வருகிறது. பெரு நிறுவனங்களின் இலாப பசிக்கு இரையாகும் பூர்வகுடிகள், அவர்களின் வாழ்வாதார சிக்கல்களையும், சுரண்டல்களையும் இயக்குனர் சுட்டிகட்ட தவறவில்லை.

படத்தில் ஆங்காங்கே வரும் கெட்டவார்த்தைகள் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இது அப்படியே வர போகும் எல்லா படங்களிலும் வந்தால் என்னாவது?

பெரியவர்கள் மட்டுமே பார்க்கவேண்டிய படம்

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி