Wonderful Shopping@Amazon

Thursday, 24 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-21

யாதோன் கி பாரத் (1973)

இந்தியாவின் தலைசிறந்த கதை-திரைக்கதை ஆசிரியர்களான சலீம்-ஜாவேத் எழுத்தில் உருவான "யாதோன் கி பாரத்" இந்திய சினிமாவின் பல முன்னுதாரணங்களைக் கொண்ட படம். பல நட்சத்திர நடிகர்கள் ஒரே படத்தில், காதல், ரொமான்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட், பழிவாங்கல் எனக் கலந்து கட்டி வந்த படம். அதற்குப்பிறகு வந்த படங்கள் அனைத்தும் இதே முறையைப் பின்பற்றி வந்தது.

"யாதோன் கி பாரத்" இந்தி படம் பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் எம் ஜி ஆர் இரு வேடங்களில் நடித்து "நாளை நமதே" என்ற பெயரில் வெளியாகி ஹிட்டடித்தது பின்பு தெரிந்துகொண்டேன்.

பள்ளி நாட்களில் தூர்தர்ஷனில் சனிக்கிழமை தோறும் இந்தி படம் மற்றும் ஞாயிறு தோறும் தமிழ்ப் படம் போடுவார்கள். ஒரு மாலை வேளையில் "யாதோன் கி பாரத்" இந்தி படம் போட்டார்கள். மொழி தெரியவில்லையென்றாலும் ஒரு மாதிரி கமர்சியல் அம்சங்கள் நிறைந்திருந்ததால், ஆர்வமுடன் பார்த்தோம். ஆனால் "சுரா லியா ஹை தும்நெ ஜோ தில் கோ " என்ற பாடல் என் நினைவில் பதிந்துவிட்டது. 

ஆர் டி பர்மன் இசையில் ஆஷா போஸ்லே மயக்கும் குரலில் ரகளையாகப் பாடியிருப்பார். இந்தப் பாடல் எனக்கு எப்போதும் பிடிக்கும். பாடலின் பிற்பகுதியில் பாடகர் முகமது ரபி உள்ளே வருவார். இடையே இடையே வரும் சாக்ஸபோன் interlude அருமையாக இருக்கும்.  இதோ நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் :


நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


Tuesday, 22 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-20

ஆராதனா (1969)

காதல் இளவரசன் ராஜேஷ்கண்ணா-சர்மிளா தாகூர் நடித்து, 1969-ஆம் ஆண்டு வெளிவந்து இந்தியா முழுவதும் வெற்றிபெற்ற காதல் சித்திரம். பல மொழிகளில் இப்படம் மறு ஆக்கம் செய்திருந்தாலும், அசல் வெளியீடான "ஆராதனா" எப்போதுமே பெஸ்ட்.

அப்போது தூர்தர்சனில் புதன் கிழமை இரவு தோறும் ஒளிபரப்பாகும் "சித்ராஹார்" நிகழ்ச்சியில் அடிக்கடி கிஷோர் குமார் பாடிய "மேரே சப்னோ கி ராணி...." என்ற பாடலை போடுவார்கள். ராஜேஷ்கண்ணா ஜீப்பில் பாடிய படி வர, ரயிலில் பயணம் செய்யும் சர்மிளா ஓரக்கண்ணால் இடையே, இடையே பார்க்க எனப் பாடல் அழகாக இருக்கும்.

இப்போது விஷயம் அதுவல்ல, ஆராதனா படத்தில் இன்னொரு பாடல் உண்டு "ரூப் தேரா மஸ்தானா பியார்" என்ற பாடல் காலஞ்சென்ற பாடகர் கிஷோர் குமார் கிறங்கடிக்கும் குரலில் அனாயாசமாகப் பாடியிருப்பார். மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை எனக் கலந்துகட்டி விருந்து படைத்திருப்பார் இசையமைப்பாளர் எஸ் டி பர்மன்.

இன்னொன்று காதல் இளவரசன் ராஜேஷ்கண்ணா-சர்மிளா தாகூர் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் நன்றாக ஒர்கவுட் ஆகியிருக்கும்.



 

குறிப்பு: ஆராதனா ஹிந்தி படத்தில் மறுஆக்கத்தில் நடிகர் திலகம் நடித்து "சிவகாமியின் செல்வன்" என்ற பெயரில் வெளிவந்து வெற்றிபெற்றது. அதைப் பற்றிய சுவையான தகவல்களை இந்தச் சுட்டியை அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
https://www.vikatan.com/anniversaries/kollywood/61774-sivakamiyin-selvan-movie-analytics


நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-19

உயிரே உனக்காக (1986)

 யக்குநர்க் கே ரங்கராஜ் இயக்கி, வெள்ளிவிழா நாயகன் நடித்த மற்றொரு படம் "உயிரே உனக்காக". ஒரு மாற்றத்துக்கு வேண்டி இந்தப் படத்துக்கு இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையைத் தமிழுக்குக் கொண்டுவந்திருப்பார் தயாரிப்பாளர் திரு. கோவை தம்பி. இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசை எனக்குப் பிடிக்கும். அவர்களுடைய இசை ரகளையாக இருக்கும். "ஆரிராரோ.. ஆரிராரிரோ.....தேனுரும் ராகம் ", "பல்லவி இல்லாமல் பாடுகிறேன்", "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க" போன்ற பாடல்களை அனைத்தும் அருமையாக இருக்கும். எனக்குப் பிடித்த பாடல் ஜானகி அம்மா பாடிய "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க". சற்றே பெரிய பாடல். புல்லாங்குழல் ராகம் எடுத்துத் தர, குயில்கள் கிச்சு... கிச்சு..அப்படியே ஜானகி உள்ளே வருவார். பாடல் முழுதும் பல வித கருவிகளை ஒலிக்கவிட்டு ஜுகள் பந்தி போல, அட்டகாசமாக இசையமைத்திருப்பார்கள் இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால்.

"நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும் எளிமையான அந்த இறைவன் ஆலயம்....." வரிகளுக்குப் பிறகு வரும் அந்தக் கோரஸ்.......கொஞ்சம் அமைதி... பின்பு ஜானகி பாடலை முடித்துவைப்பார். நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி            


Monday, 21 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-18



ஏக் துஜே கே லியே (1980)

ப்போது விவிதபாரதி வானொலி நிகழ்ச்சியில் லதாஜி பாடிய மனதை உருக்கும் இந்தப் பாட்டை அடிக்கடி ஒளிபரப்புவார்கள்.  கேட்கப் பிடிக்கும். ஆனால் மறுபடியும் கேட்க முடியாது, எப்போதாவது ஒளிபரப்பினால் தான் உண்டு. வீட்டில் டேப்ரெக்கார்டர் எல்லாம் இல்லை. வளர்ந்த பிறகு தான் தெரிந்தது அது கமலஹாசன் நடித்து, இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கி, கவிஞர் ஆனந்த் பக்ஷி எழுதி, இசை இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையமைத்த ஏக் துஜே கே லியே (1980) என்ற கோடிகளை வசூலித்த இந்தி வெற்றிப்படம் என்று!

மரோசரித்ரா (1978) கமலஹாசன் நடித்து, இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கி தெலுங்கில் வெளிவந்து ஐந்நூறு நாட்களுக்கு மேல் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஓடிய படம் தான் மேலே சொன்ன ஏக் துஜே கே லியே (1980.) என்ற இந்தி மறுஆக்கம் படம்.  சரி நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் :



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி            

Thursday, 17 October 2019

மிதிவண்டி நாட்கள்

ன்னால் என் பையனை மிதிவண்டி பின்புறம் உட்கார வைத்து மிதிக்க முடியவில்லை.. உடலில் சக்தி இல்லையா, வயதாகிவிட்டதா அல்லது சாலை சரியில்லையா என்று தெரியவில்லை. கை, கால், உடம்பு வலி எடுத்துக்கொண்டது.

அப்பா என்னையும் என் தம்பியையும் மிதிவண்டியில் முன் பின் உட்காரவைத்து 3-4 கிலோமீட்டர் ஓட்டிக்கொண்டு பள்ளியில் விட்டு அலுவலகம் செல்வார். சுகமான பயணம், லாவகமாக ஓட்டுவார். கொஞ்சம் வளர்த்தபிறகு பள்ளிக்கு நடந்தே வந்து, போவேன்.

சைக்கிள் என் கனவு. பள்ளியில் படிக்கும் போது வகுப்பு நண்பர்கள் எல்லோரிடமும் சைக்கிள் இருக்கும்.

என்னுடன் படித்த பவன் குமார் என்ற நண்பன் அவனுடைய புதிய மிதிவண்டியைப் பள்ளிக்குக் கொண்டுவந்தான். அவ்வப்போது எனக்கு ஓட்ட தருவான். ஒரு நாள் அவனுடைய மிதிவண்டி திருடு போய் விட்டது. கடைசி வரை அதை யார் எடுத்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

எப்போதாவது அப்பா அலுவலகம் விடுப்பு எடுத்தால் அப்போது பள்ளிக்குச் மிதிவண்டி கொண்டு வருவேன். எப்போது பள்ளி விடுவார்கள் என்று ஆவலாய் இருப்பேன். பள்ளி விட்டதும் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு வேகமாய் ஓட்டிச்செல்வது பிடிக்கும்.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் அம்பத்தூர் சைக்கிள் தொழிற்சாலையில் பணிபுரிந்த எனது மாமா புதுச் சைக்கிள் வாங்கிக்கொடுத்தார் (காசுக்குத்தான்...) ஆரம்பம் முதலே செலவு வைக்க ஆரம்பித்துவிட்டது. மீண்டும் நடராஜா சர்வீஸ்.

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டருகே ஒரு தாத்தா மிதிவண்டி வாடகை கடை இருக்கும், ஒரு மணிநேரத்துக்கு ரூ.1/-. பாட்டி அரைமணி நேரத்துக்குத் தான் காசு கொடுக்கும். என்னைப் போலப் பையன்கள் நேரம் முடிந்து மிதிவண்டி கொண்டுவரும் வரை காத்திருக்க வேண்டும். வந்ததும் எனக்கு வண்டி கிடைக்கும். வண்டி எடுத்துக்கொண்டு பூங்கா, அந்த நான்கு தெருவைச் சுற்றி வருவதற்குள் அரைமணி நேரம் முடிந்துவிடும். அப்போது தெருவில் வாகன புழக்கம் குறைவு. தைரியமாக வண்டி ஓட்டலாம்.

வாடகை மிதிவண்டி கடையைச் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். திராவிட இயக்க வரலாற்றைப் பார்த்தோமானால் முடிதிருத்தகக் கடை மற்றும் மிதிவண்டி கடை தோழர்கள் தான் இயக்கத்தை வளர்த்தெடுத்தார்கள். முடிதிருத்தகக் கடை மற்றும் மிதிவண்டி கடைகளில் கிடைக்கும் திராவிட இயக்க பத்திரிக்கைகளைப் படித்து ஏனையோர் சாரை சாரையாக அவ்வியக்கத்தில் சேர்ந்தார்கள். இப்படி வந்தவர்கள் தான் பிற்பாடு தமிழக அரசியலில் கோலோச்சினார்கள் - நன்றி : "அறிஞர் அண்ணா - மாபெரும் தமிழ் கனவு" - தி ஹிந்து பதிப்பகம்.

என் பையனுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும்போதே மிதிவண்டி வாங்கிக் கொடுத்துவிட்டேன். ஆரம்பத்தில் மிதிவண்டி ஓட்டும்போது அவன் பின் பள்ளிவரை செல்வேன்.

இப்போது மிதிவண்டி அடிக்கடி பழுதேற்படுகிறது. மிதிவண்டி பழுதானால் அதைச் சரி செய்வதற்குள் போதும் போதும் என்றாகிறது காரணம் முன்பெல்லாம் தெருவுக்கு நான்கு மிதிவண்டி பழுது பார்க்கும் கடை இருக்கும், இப்போது ஊரின் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது. மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. குறைந்த பட்ச பழுது நீக்குக் கட்டணம் ரூ.100/-. விடுமுறையில் அரை நாள் செலவு செய்ய வேண்டியுள்ளது.

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் மிதிவண்டியை யாரும் சாலையில் ஓட்டுவதில்லை. மிதிவண்டி உடற்பயிற்சி சாதனமாகி நீண்ட நாட்களாகிவிட்டது . வீட்டிலே மிதிவண்டி போல உள்ள சாதனம் வாங்கி உடம்பு இளைக்க உடற்பயிற்சி செய்கிறார்கள். ஊர் ஊருக்குப் பயிற்சிக்கூடங்களும் பெருகிவிட்டது.

ட்ரயத்லான் என்ற விளையாட்டு, மூன்று செயல்களான நீச்சல் (1500 மீட்டர் ) மிதிவண்டி ஓட்டுதல் (40 கிலோமீட்டர்) மற்றும் ஓட்டப்பந்தயம் (10 கிலோமீட்டர்) அடுத்தடுத்துச் செய்யவேண்டும். இப்போதைய நடப்பு ட்ரயத்லான் உலகச் சாம்பியன் (ஆண்கள்) பிரான்ஸைச் சேர்ந்த திரு வின்சென்ட் லூயிஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த செல்வி கேட்டி சபிரேஸ் (பெண்கள்). ட்ரயத்லான் போட்டியில் பயன்படுத்தப்படும் மிதிவண்டியின் விலை ரூபாய் 1.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை.

சாலையில் மிதிவண்டி ஓட்டுவதே பெரும்பாடாய் இருக்கிறது, இதில் மிதிவண்டி ஓட்டுவது, நீச்சல், ஓட்டப்பந்தயம் ஒரே நேரத்தில் எப்படிச் செய்யமுடிகிறதென்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் மிதிவண்டி பல வித வசதிகளோடு கிடைக்கிறது. பல வெளிநாட்டு மிதிவண்டி ரகங்களும் சென்னையில் கிடைக்கிறது. கியர் வண்டியின் ஆரம்பி விலை ரூபாய் 4000/-. சில நகரங்களில் மிதிவண்டி பாதை என்று தனியாக அமைத்திருக்கிறார்கள்.  சென்னையிலும் சில இடங்களில் இருக்கிறது.

"பைசிக்கிள் தீஃவ்ஸ்" (1948.) என்ற இத்தாலியப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? காணாமல் போன மிதிவண்டியைச் சுற்றி நிகழும் கதைக்களம். அதை நெஞ்சைத் தொடும் விதத்தில் சொன்ன இயக்குநர் விட்டோரியோ டி சிகா மற்றும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய நடிகர்கள், அதனால் தான் என்னவோ உலகின் இரண்டாவது சிறந்த படமாக இருக்கிறது இப்படம்.  வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் இப்படத்தைப் பாருங்கள்.

சரி, நீங்கள் எப்போது கடைசியாக மிதிவண்டி ஓட்டினீர்கள். உங்கள் பழைய மிதிவண்டி இன்னும் உங்களிடம் இருக்கிறதா?


Image: Thanks,Google 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

Tuesday, 15 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-17

செம்பருத்தி (1992)

ம்பத்தூர் ராக்கி திரையரங்கில் நானும் எனது நண்பனும் பார்த்த படம்.  வழக்கமான காதல் கதை தான். புதிதாக ஒன்றும் இல்லை  ஆனால் ராஜாவின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள் ஊரெங்கும் ஒலித்தது. இப்போது கூட கேட்கலாம்.

காலஞ்சென்ற அமரர் திரு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய திமுக கட்சி பாடல்களை கேட்டிருக்கிறேன். அவரின் இஸ்லாமியப் பாடல்கள் மனதை வசீகரிக்கும். அவரை போலவே பாடுபவர்கள் இருந்தாலும்,  இனி அது போன்றொரு குரலைக் கேட்கமுடியாது. "பாவமன்னிப்பு" படத்தில் இடம்பெற்ற "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடலில் தொடங்கியது அவர் குரலின் வீச்சு. அவர் குரல் ஒலிக்காத தமிழக ஊர்களே இல்லை எனலாம். 

அடுத்து, ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த  "செம்பருத்தி" படத்தில் அமரர் திரு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய  அருமையான பாடல் "காதலே தனிமையிலே". தரமான தலையணியுடன் கேட்டுப்பாருங்கள். விஸ்தீரணமான குரல், பாடலை கேட்டு முடித்தவுடன் உங்களைக் கொஞ்ச நேரம் ஆக்கிரமிக்கும். இதோ அந்த பாடல்.



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி


மூளையை கசக்கு

ன்னுடன் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து, சொந்த தொழில் செய்யும் நண்பரின் தாரக மந்திரம் "மூளையைக் கசக்கு". எப்போதும் தான் தொடங்கப்போகும் தொழிலைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருக்கும். என்னென்ன தோன்றுகிறதோ அத்தனையும் ஒரு நாட்குறிப்பில் பதிவு செய்துகொள்வார். தொழில் தொடங்குவதற்கு முன்பிருந்தே அதற்கான திட்டச் செலவினங்கள், திடீர் செலவுகளைச் சமாளிக்க வேண்டி கையிருப்பை எவ்வளவு வைத்திருப்பது, கட்டிடப் பொறியாளர் தயாரித்துக் கொடுத்த கட்டிட வரைபட அறிக்கை, அரசு அனுமதி வாங்கத் தேவையான துணை காகிதங்கள், வங்கிக் கடன் வாங்கத் தேவையான காகிதங்கள் என எல்லாம் தயாராக வைத்திருப்பார்.

தினமும் நாளிதழில் வரும் அனைத்து விளம்பரங்களையும் விடாமல் பார்ப்பதும், இணையத்தில் அந்தக் குறிப்பிட்ட நிறுவன இணையத்தளத்தில் பார்ப்பதும் அவர் வழக்கம். சொந்த தொழில் என்பது விபத்து அல்ல, அது தானாக ஏற்றுக்கொண்ட ஒரு தவ வாழ்க்கை என்பது அவருடைய குறிக்கோள். மேலே சொன்னதெல்லாம் அவர்
ஒவ்வொருவரிடமும் கேட்டு/ புத்தகங்கள் படித்துத் தெரிந்துகொண்டு உருவாக்கிக் கொண்ட வழிமுறை.

அந்த நாளும் வந்தது நாளிதழில் விளம்பரம் வந்தது, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கென்றே பிரத்தியேகமான ஆட்கள் உண்டு.
தில் bidding தொகையைக் குறிப்பிடுவது முக்கியம். இதில் அனுபவம் உள்ள நபரைத் தேர்ந்தெடுத்து, அவரை வைத்து விண்ணப்பித்தார். பிறகு எப்போதும் போலத் தான் பணிபுரியும் அலுவலக வேலையைப் பார்த்தார். சில மாதங்கள் கழித்து விண்ணப்பித்த நிறுவனத்திலிருந்து வந்த அதிகாரிகள் தன்னுடைய நிலத்தை பார்த்துப் போனார்கள். முக்கியச் சாலையில் நிலம் மற்றும் bidding தொகை காரணமாக இவருடைய விண்ணப்பம் தேர்வானது. மேலும் நிறுவனம் அந்த இடத்தில் அமையவிருக்கும் தனது கிளைக்கு அதிகத் தொகை ஒதுக்கியது.

அதன் பிறகு பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து அனுமதி, அதற்கென்று உள்ள நபரைப் பிடித்து அவரிடம் பணியை ஒப்படைத்தார். அவருடைய கட்டணம் ரூபாய் இரண்டு லட்சம். இதற்கிடையில் தனது மகனை ஒரு நிறுவனத்தில் இரண்டு மாதம் பயிற்சிக்கு அனுப்பினார்.

நிறுவன ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பமிடுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு அரசுத் துறைகளிடமிருந்து அனுமதி பெற்ற காகிதங்கள் வருவதற்கும் சரியாக இருந்தது. வைப்புத்தொகையைக் காட்டினார். பிறகென்ன நிறுவனம் தனது வேலை ஆரம்பித்தது. இனி பிரச்சனை இல்லை, களத்தில்/தளத்தில் தான் கண்டிப்பாக இருக்க வேண்டும், வேலைக்கு வந்துகொண்டு
ம், போய்க்கொண்டும் இருந்தால் வேலைக்காகாது எனக் கருதி தனது வேலையை ராஜினாமா செய்தார். தான் பணிபுரிந்த நிறுவனம் வியப்பாகப் பார்த்தது. லட்சியம் உறுதியாக இருக்கும்போது யார் என்ன செய்யமுடியும்.

பிறகு இரண்டு மாதம் கழித்துத் தனது நிறுவனத்தை எளியமுறையில் தொடங்கி விட்டதாக எனக்கு மட்டும் தகவல் சொன்னார். பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து யாரையும் அழைக்கவில்லை, காரணம் பல சொன்னார். அதில் முதல் காரணம் பொறாமை.

சரி அவரைப் பற்றிய சிறுகுறிப்பு:


தந்தையின் அகல மரணத்தால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனது, தனது தந்தை பணிபுரிந்த நிறுவனத்தில் கருணை அடிப்படையில் வேலை கிடைத்தது. திறம்பட வேலை செய்து நல்ல பெயர் வாங்கினார். தனது அம்மாவின் நகைகளை வைத்து, வீட்டு காலி நிலத்தில்

ஒரு கடை, இரண்டு வீடுகளைக் கட்டி வாடகை விட்டார். வாடகை பணம், சம்பளப் பணம் எனச் சேர்த்த பணத்தில் அந்தக் காலகட்டத்தில் சென்னை புறநகர்ப் பகுதியில் சொற்ப தொகையில் நிலங்களை வாங்கிப் போட்டார், அடுத்த இருபது வருடங்களில் அது ராக்கெட் வேகத்தில் விலையேற்றம் காணப் போகிறது என்று தெரியாமல். அதில் ஒன்றில் சில கடைகளைக் கட்டி வாடகை விட்டார். இதற்கிடையில் திருமணம், குழந்தைகள் எனக் குடும்பம் பெரிதானது. அம்மாவும் மனைவியும் தான் அவரது பலம். அப்படி வாங்கிப் போட்ட நிலத்தில் தான் முருகன் பெயரில் இன்று தனது வாகன எரிபொருள் நிலையம் அமைத்துள்ளார் அந்த நண்பர்.  வாழ்நாள் இலட்சியம், பத்து வருட காத்திருப்பு மற்றும் முயற்சி நன்றாகவே பலன் கொடுத்தது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் தூரதேசத்தில், வேறு மாநிலத்தில் அல்லது வெளிநாட்டினரை மேற்கோள் கட்ட வேண்டாம் நம்மைச் சுற்றியும் வெற்றி மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பொறாமையுடன் பார்ப்பதை விட்டு அதற்குப் பின் உள்ள உழைப்பைப் பார்த்தால் போதும் நமக்குத் தேவையான பாடம் ஏதாவது ஒன்று அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். நான் கற்றுக்கொண்ட பாடம் "மூளையைக் கசக்கு".


Image: Thanks,Google 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி