Wonderful Shopping@Amazon

Thursday, 28 December 2017

இணைந்த கைகள் (1990)

இணைந்த கைகள் (1990)
 
 
 
இது பட விமர்சனம் அல்ல. இன்று காலை அலுவலகம் வரும் வழியில் "அந்தி நேர தென்றல் காற்று..." என்ற பாடலை கேட்டு கொண்டே என்னை கடந்து போனார் ஒருவர்.  எங்கேயோ கேட்ட பாடல் போல இருக்கிறதே... என்ற நினைவு 1990 களில் பயணித்தது.

முதல் ரீலில் வரும் சண்டை காட்சி, நண்பர்கள் இணையும் அந்த இடைவெளி  காட்சி அப்போது வரும் ஆர்ப்பரிக்கும் பின்னணி இசை. குள்ளமணி சண்டை காட்சி,  இறுதி காட்சி என மனதில் படம் ஓடியது. இணைந்த கைகள் படம் வெளிவந்தபோது நான் பள்ளியில் படித்துகொண்டிருந்தேன். வகுப்பு  நண்பர்கள் 20 பேர் சேர்ந்து பூவிருந்தமல்லி சுந்தர் 70 MM  திரையரங்கில்  முதல் நாள் முதல் காட்சியில் பார்த்த படம். எனக்கு பிடித்த படம். அதன் பிறகு 2 -3 முறை பார்த்திருப்பேன்.




இன்று காலை அலுவலகம் வரும் வழியில் "அந்தி நேர தென்றல் காற்று..." என்ற பாடலை ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவில் கேட்டு கொண்டே என்னை கடந்து போனார் ஒருவர்.  எங்கேயோ கேட்ட பாடல் போல இருக்கிறதே... என்ற நினைவு 1990 களில் பயணித்தது.

முதல் ரீலில் வரும் ஆக்ஷன் பிளாக், நண்பர்கள் இணையும் அந்த இடைவேளை காட்சி அப்போது வரும் ஆர்ப்பரிக்கும் பின்னணி இசை. குள்ளமணி ஆக்ஷன் பிளாக், ரயில் நிலைய கிளைமாக்ஸ்  என மனதில் படம் ஓடியது. 'இணைந்த கைகள்' படம் வெளிவந்தபோது நான் பள்ளியில் படித்துகொண்டிருந்தேன். வகுப்பு  நண்பர்கள் 10 பேர் சேர்ந்து பூவிருந்தமல்லி சுந்தர் 70 MM  திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்த படம். எனக்கு பிடித்த படம். அதன் பிறகு 2 -3 முறை பார்த்திருப்பேன்.

ராம்கி, அருண்பாண்டியன், நிரோஷா, சிந்து, நாசர், செந்தில் ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்து "முற்றிலும் இளைஞர்களுக்காக" என்ற கோஷத்துடன் மிகுந்த பொருட்செலவில் வெளிவந்த பிரம்மாண்ட படம்.

சமூக ஊடகங்கள் வளர்ச்சியடையாத அந்த காலகட்டத்தில் படத்துக்காக பரவலான  எல்லா தினசரி முன்னணி பத்திரிக்கை, வார இதழ் மற்றும் வானொலியிலும் விளம்பரம் செய்திருந்தார் தயாரிப்பாளர் ஆபாவாணன். சென்னை மவுண்ட் ரோட்டில் பிரமாண்டமான விளம்பர பதாகை இடம்பெற்றது நினைவிருக்கிறது. விளம்பரங்கள் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

இப்போதும் எனக்கு புரியாத விஷயம் இந்த படம் ஏன் தோல்வி அடைந்தது என்பது தான்.  தேவையான எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த படம்.

- மறைந்த இயக்குனர் என். கே விஸ்வநாதனின் விறுவிறு இயக்கம்.
- மனோஜ் கியானின் இனிமையான பாடல்கள் /பின்னணி இசை. 
- சண்டை காட்சிகள்.
- சென்டிமென்ட் காட்சிகள்.
- அப்போதைய முன்னணி நடிகர்கள் நடித்தது.
- நாசரின் வில்லத்தனம்.
- ஹீரோவுடன் மோதும் சண்டைகாட்சியில் வித்தியாசமான தோற்றத்தில் குள்ளமணி.
- கிளைமாக்சுக்கு முந்திய பாடலான "அந்தி நேர தென்றல் காற்று..." அப்போது பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

கொசுறு செய்தி:

இணையத்தில் எதையோ தேடும் பொது கிடைத்த தகவல்கள் தமிழில் இதோ:

இயக்குனர் சாணக்கிய இயக்கத்தில் ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர் தமிழில் மற்றும் என்.டி ஆர் தெலுங்கில் நடிக்கவிருந்த படம் இணைந்த கைகள்.  மிகுந்த பொருட்செலவில் எடுக்க திட்டமிடப்பட்டது. ஈரானில் படப்பிடிப்பு மற்றும் ஈரானிய நடிகையை அறிமுகபடுத்த எண்ணியிருந்தார் எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டது. எம்.எஸ் விஸ்வநாதன் பாடல்களும் ரெடி. பட பூஜையில் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.

நிலவு ஒரு பெண்ணாகி, அவள் ஒரு நவரச நாடகம் மற்றும் கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் போன்ற இனிய பாடல்கள் பின்னர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெற்றது.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Monday, 25 December 2017

2017 சிறந்த படம் - பாகுபலி- 2

பாகுபலி -1 படம். டிக்கெட் முன்பதிவு செய்து குடும்பத்துடன் அகன்ற திரையில் பார்த்தோம். அற்புதமான திரையனுபவம். அந்த அருவி காட்சி இன்னும் கண் முன் நிற்கிறது. அப்போதே இரண்டாம் பாகத்துக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம்.

இம்முறையும் குடும்பத்துடன் தெலுங்கு பதிப்பை அகன்ற திரையில் பார்த்தோம்.  முதல் காட்சி முதல் கடைசிவரை கண் அங்கிங்கு நகரவில்லை. ஒரு சாம்ராஜ்யத்தியே இயக்குனர் ராஜாமௌலி சிருஷ்டித்து அதில் கதாபாத்திரங்களை உலவிட்டிருந்தார்.  பாகுபலி-2 பிரம்மிப்பிலுருந்து மீள சில நாட்கள் ஆனது.  அதற்காகவே மா தெலுங்கு மற்றும் ஏசியாநெட் மலையாள  தொலைக்காட்சியில் அடிக்கடி பாகுபலி- 2 ஒளிபரப்பாகும் போது அந்த தொடக்க காட்சிக்காக மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். சினிமாவுக்கு மொழி ஒரு தடை இல்லை.

விக்ரமார்குடு படம்  மூலம் இயக்குமார் ராஜமௌலி எனக்கு அறிமுகமானார்.  அதற்கு பிறகு வந்த எமதொங்கா, மகதீரா, ஈகா, மரியாதை ராமண்ணா  படங்களை விடாமல் பார்த்தேன். இதில் ஜூனியர் என் டி ஆர் நடித்த எமதொங்கா திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன். அருமையான மேக்கிங். அந்த எம லோக செட் அற்புதமாக இருக்கும்.

சினிமாவை இயக்குனர் ராஜமௌலி எந்தளவுக்கு நேசிப்பவர் என்பதை அவருடைய படைப்புக்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும். அவருடைய தொழில்முறை குழு ஆந்திர திரையுலகில் பிரசித்தம்.

நான் தூர்தர்ஷனில்  ஒளிபரப்பாகும் கருப்பு-வெள்ளை  புராண / இதிகாச படங்களை பார்த்து வளர்ந்தவன். அதனால்  புராண / இதிகாச படங்கள் எனக்கு பிடிக்கும்.  என்னுடைய All Time Favorite மாயாபஜார் மற்றும் அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.

பாகுபலி-2 பற்றி என்ன சொல்ல:

1 ) அந்த தொடக்கக்காட்சி பற்றி சொல்வதா.
2 ) குந்தல தேசத்தில் நடக்கும் போர்க்கள காட்சிகளை பற்றி சொல்வதா.
3 ) பெண்கள் மீது கை வைப்பவனுக்கு பாகுபலி தரும் உடனடி தண்டனையை
     பற்றி சொல்வதா.
4 ) நாசர் / ராணா / சத்யராஜ் / ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பற்றி சொல்வதா.
5 ) அனுஷ்காவின் அறிமுக காட்சி பற்றி சொல்வதா.
6 ) மரகதமணியின் பாடல்கள் / பின்னணி இசை கோர்ப்பை பற்றி சொல்வதா.
7 ) அந்த பட்டாபிஷேக காட்சியை பற்றி சொல்வதா.
8) அதே துணை நடிகர்கள், முதல் காட்சியிலுருந்து கடைசி காட்சி வரை
     இயக்குனர் ராஜமௌலி நேர்த்தியாக பயன்படுத்தியதை பற்றி சொல்வதா.

எல்லாவற்றையும் பற்றி என் முன்னோடிகள் எழுதிவிட்டார்கள்.

பாகுபலி  படைப்பாற்றலின் உச்சக்கட்டம்.  ஒரு படைப்பாளிக்கு முழு சுதந்திரம் தந்தால், அவனால் பாகுபலி போன்ற படைப்புக்களை தரமுடியும்.  ஆனால் இங்கு அந்த வாய்ப்பு வெகு சிலருக்கே அமைவதுதான்  துரதிஷ்டம்.

என்னுடைய வட இந்திய நண்பர் சொன்னது தான் எல்லாவற்றையும்விட விஷேமானது அதாவது:

"வட இந்தியர்களும் வாய் பிளந்து பார்த்ததுதான். வட இந்தியர்கள் அதுவரை பார்த்திராத பிரமாண்ட வண்ணமயமான திரையனுபவத்தை பாகுபலி  கொடுத்தது. பாகுபலி படத்தில் ஒரு ரசிகனுக்கு என்ன தேவையோ அனைத்தும் இருந்தது" என்றார்.

பொன்னியின் செல்வன் கதையையும் யாராவது இதுபோல் நேர்த்தியாக எடுப்பார்களா ? அதை திரையில் காண ஆவலாக இருக்கிறேன்.

- காளிகபாலி

Friday, 22 December 2017

ஜோதிட வியாபாரம்

சனி பெயர்ச்சிக்காக எங்கள் வீட்டு அருகில் உள்ள சிவன் கோயிலில் பரிகார யாகம் / பூஜைக்காக பணம் கட்டியிருந்தேன்.  பூஜையன்று  அர்ச்சனை பைய் வாங்க போயிருந்தேன்.

கோயிலில் ஒரே கூட்டம். சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வீதி வரை மக்கள் காத்திருந்தார்கள். நவகிரஹ சந்நிதியிலும் கூட்டம். நான் அர்ச்சனை பையை மட்டும் வாங்கி வந்துவிட்டேன். நம்  அருகில் உள்ள சிறிய சிவன் கோயிலிலேயே இவ்வளவு கூட்டமென்றால், பிரிசித்திபெற்ற கோயில்களான திருநள்ளாறு, குச்சனுர், திருக்கொள்ளிக்காடு மற்றும் திருநரையூர் இங்கெல்லாம் எவ்வளவு கூட்டம் இருக்கும் யோசித்து பாருங்கள்.  சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இதெல்லாம் காலங்காலமாய் வந்து கொண்டிருந்தாலும்.  பிரபலம் அடைந்தது என்னவோ கடந்த 15 வருடங்களாக தான்.

ஜோதிடம் என்றல் என்ன ? அது எப்படி கணிக்கப்படுகிறது என்ற விஷயத்திற்குள் நாம் நுழையவேண்டாம். அதனுடைய இப்போதைய வளர்ச்சியை மட்டும் பார்ப்போம்.
அலுவலகத்தில் சேர்ந்த பிறகு தான் இது பற்றி எனக்கு தெரியவந்தது.  என்னுடைய சக அலுவலக நண்பர்கள் இதிலெல்லாம் தீவிரமாக இருப்பவர்கள். நாள், நட்சத்திரம் மற்றும் ஹோரை என்று எல்லாம் பார்த்து தான் எதுவும் செய்வார்கள்.  இவர்களோடு சேர்ந்து நானும் கொஞ்சம் மாறித்தான் போனேன்.

அனைத்து மொழி பெரிய / சிறிய பத்திரிக்கைகள், வார இதழ்கள் நிறுவனங்கள் தங்கள் பத்திரிக்கை அதிக எண்ணிக்கையில் விற்க வேண்டி  மற்றும் தொலைக்காட்சிகள் நிறுவனங்கள் தங்களுடைய TRP ரேட்டிங்கை  உயர்த்த ஜோதிட இணைப்பை / நிகழ்ச்சியை வழங்க தவறுவதில்லை.

சில  வார இதழ் நிறுவனங்கள் ஜோதிடத்திற்கென்றே தனி இதழ்களும் வெளியிடுகிறது. விலை ரூபாய் 20 முதல் 50  வரை. இணையத்திலும் ஏராளமான ஜோதிட தளங்கள் உண்டு. பெயர், பிறந்த தேதி மற்றும் நாள் - நேரம் - பிறந்த இடம் உள்ளீடு செய்தல் போதும் உங்கள் சில நொடிகளில் உங்கள் ஜாகதகம் தயார்.

இது தவிர ஜோதிடசிகாமணிகள், ஜோதிடதிலகங்கள்,  ஜோதிடரத்னாக்கள் ஜோதிட மாமேதைகள் வெளியிடும் தனி பதிப்புகள் ராசி / நட்சத்திர வாரியாக தனி தனி புத்தகங்கள் பாக்கெட் அளவு முதல் பெரிய புத்தகம் வரை ஒவ்வொன்றும் ரூபா 30  முதல் 50  வரை சந்தையில் கிடைக்கிறது. நம்மவர்கள் அதையும் வாங்கி படிக்கிறார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு சுற்றுலா ஏற்பாட்டாளர் மாதமிரண்டுமுறை  கும்பகோணம் நவகிரக சுற்றுலா ஏற்பாடு செய்கிறார். நபருக்கு ரூபாய் 1000/-. சனிக்கிழமை  இரவு புறப்பட்டு ஞாயிறு இரவு வீடு திரும்புதல். வெறும் முப்பது பேர். 98% பேர் ஆஜர். மாத மாதம் முன்பதிவு புத்தகம் நிரம்பி வழிகிறது.  சென்னையில் இப்படி என்றால் பிற ஊர்களில்....! வருடம் 365  நாட்களும் இவர்களால் கும்பகோணம் நவகிரக ஷேத்திரங்கள் நிரம்பி வழிகிறது.

கும்பகோணம் செல்ல முடியாதவர்கள் சென்னையிலுள்ள நவகிரஹ க்ஷேத்ரங்கள்லான கோளப்பாக்கம் (சூரியன்), சோமங்கலம் (சந்திரன்), பூவிருந்தமல்லி (செவ்வாய்), கோவூர் (புதன்), போரூர் (குரு), மாங்காடு (சுக்ரன்), பொழிச்சலூர் (சனிஸ்வரர்), கெருகம்பாக்கம் (கேது), குன்றத்தூர் (ராகு),  ஆட்டோ  / கார் அமர்த்தி சென்று ஒரே நாளில் தரிசித்து வருகிறார்கள்.

தொழில் உலகமும், அரசியல் உலகமும் ஜோதிடத்தை நம்பியே இயங்குகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவருக்கும் ஒரு ஜோதிட குழுக்கள் உண்டு. அவர்களை கேட்டு தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகிறது.
சென்னையில் தான் பிரபல ஜோதிடர்கள் உண்டென்று நீங்கள் நினைத்தால்  அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு ஊரிலும் பிரபல ஜோதிடர்கள் இருக்கிறார்கள்.

திருச்சியிலுள்ள பிரபல ஜோதிடரை காண முன்பதிவு செய்து ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். ஜெயன்கொண்டத்தில் உள்ள பிரபல ஜோதிடரை காண வேண்டுமென்றால் முன்பதிவு செய்து ஒரு மாதம்வரை காத்திருக்கவேண்டும்.  சென்னை, சேலையூரில் உள்ள ஓலை சுவடி ஜோதிடரை காணவேண்டுமென்றால் போன் முன்பதிவு அவசியம். கட்டணம் ரூபாய் 350/-.

சென்னை குடுவாஞ்சேரியில் உள்ள ஒரு பிரபல ஜோதிடரை காண முன்பதிவு இல்லை. முதலில் வருபவர்க்கே முன்னுரிமை. சீக்கிரம் காண வேண்டுமென்றால் காலை 6.00  மணிக்கே சென்றால் தான் மதியம் வீடு திரும்ப முடியும்.
 
சென்னையில் உள்ள பிரபல ஜோதிடர்களை காண முன்பதிவு அவசியம். கட்டணம் ரூபாய் 1500/ - முதல் 3000/- வரை (ஒரு சந்திப்புக்கு மட்டும்).

ஜோதிடர்கள் பரிந்துரை செய்யும் பரிகார பூஜை / ஹோமங்கள் / யாகங்கள் நடத்த /செய்ய ஆகும் செலவு ரூபாய் 10000/- முதல் ஒரு லட்சம் வரை.  இதை திறம்பட நடத்தி தர பல புரோகித குழுக்கள் தமிழக முழுவதும் உண்டு.


ஜோதிடர்கள் பரிகார பூஜை / ஹோமங்கள் / யாகங்கள் நடத்த /செய்ய பரிந்துரை செய்யும் கோவில்கள் சில:

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்.
திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேசுவரர்  கோயில்.
திருப்பைஞ்ஞீலி  ஞீலிவனேஸ்வரர் கோயில்.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்.

சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, உதயப்பூர், குருகிராம், செகந்தராபாத், ஜெய்ப்பூர், இந்தூர், ரிஷிகேஷ், சண்டிகர், லூதியானா மற்றும் அகமதாபாத் போன்ற நகரகங்களில் ஜோதிட கலையை பயில பல பயிற்ச்சி நிறுவனங்கள் உள்ளன. பல பல்கலைக்கழகங்கள் தபால் மூலம் ஜோதிட டிப்ளமா  வகுப்புகளை நடத்துகிறது.

ஜோதிட உபகரணங்கள் சந்தையை எடுத்துக்கொண்டால் ராசிகற்கள் பதித்த மோதிரங்கள், கைக்கடிகாரங்கள், கைப்பட்டை, ராசி /நட்சத்திர லட்சினை அச்சடித்த கைப்பைகள் மற்றும் பல பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. விலை ரூபாய் 1000/- முதல் அதற்கு மேல்.

வரும் காலங்களில் ஜோதிட துறைக்கென்றே தனி அமைச்சகமும் அத்துறையை கவனிக்க ஒரு அமைச்சரை நியமித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.  TRAI, SEBI, IRDA போன்று  ஜோதிட ஒழுங்குமுறை ஆணையம் வந்தாலும் வரும்.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி


Monday, 18 December 2017

ஒரே நாள் - மூன்று முருகன் கோயில்

வருடம் இரண்டு முறை (ஜனவரி & ஆகஸ்ட்)  திருச்சி பாய்லர் டவுன்ஷிப்பில் உள்ள தம்பி வீட்டுக்கு செல்வது வழக்கம். அங்கு 2 - 3  நாட்கள் தங்கி திருச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள கோயில்களுக்கு செல்வது பிடிக்கும். சென்னை நகர நெருக்கடியிலிருந்து ஒரு சிறிய Commercial Break.
 

என்னுடைய பயண திட்டம் எப்போதுமே சாதாரண பயணிகள் ரயில் (Passenger Train) நேரத்தை ஒட்டியே அமையும். குறைந்த செலவு, அலுப்பு இல்லா மற்றும் துரித பயணம்.

ஒரே நாளில் மூன்று முருகன் கோவில்களை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தியது முருகன் தான். 
 
அதன்படி திருவெறும்பூரிலுருந்து காலை 7.30  மணிக்கு சாதாரண ரயில் வண்டியில் சுமார் 1.35 மணி நேர பயணம் செய்து சுவாமிமலையை அடைந்தேன்.

ரயில் நிலையம் பக்கத்திலேயே கோவில் என்று நினைத்து இறங்கினால், கோயில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அது திருவலன்சுழி என்ற ஊர்.  அருகிலிருப்பவர்களிடம் வழி கேட்டு, பிரதான சாலையை  கடந்து போது. சுவாமிமலை வளைவு தெரிந்தது. அங்கிருந்து  2 .கிலோ மீட்டர் என்று எழுதியிருந்தது.

சுவாமிமலை வளைவு அருகே வெள்ளை பிள்ளையார் கோயில் என்றழைக்கப்படும் திருவலன்சுழி  ஸ்வேதா விநாயகர் கோயிலில், திருவலன்சுழிநாதர், அம்பாள் மற்றும் பைரவர் தரிசனம் செய்தேன்.  பாற்கடலில் உண்டான நுரையால்  உருவானவர் ஸ்வேத விநாயகர்.  அவருக்கு அபிஷேகம் இல்லை. கை படாமல் பச்சைகற்பூரம் மட்டுமே சாற்றப்படுகிறது.

பின்பு வெளியே வந்து பஸ் / ஆட்டோ எதாவது கிடைக்கும் என்று காத்திருந்தேன். எதுவும் வருவது போல் தெரியவில்லை.  ஒரு அன்பர் தனது வாகனத்தில் ஏற்றிகொண்டு சுவாமிமலை கோயில் வாசலில் விட்டார். மூலவரை அருகிலிருந்து தரிசிக்கும் சிறப்பு தரிசன கட்டண ரூபாய் 50 /- . நிறைவான தரிசனம். கோவிலில் நெய் விளக்கு ஏற்றிவிட்டு வெளியே வந்தேன். மினி பஸ் ஒன்று ரயில் நிலையம் செல்ல காத்திருந்தது. அதில் ஏறி ரயில் நிலையம் வந்தடைந்தேன்.



அடுத்த இரண்டு மணி நேரத்தில் கும்பகோணம் வழியாக திருச்சிக்கு வந்து சேர்த்தேன். அதற்குள் மதியம் ஆகிருந்தது.  அங்கிருந்து மத்திய பேருந்து நிலையம் வந்து மதுரை செல்லும் இரண்டு நிறுத்தங்கள் மட்டுமே நிற்கும் விரைவு பேருந்தில் ஏறி விராலிமலை கோவில் வாசலில் இறங்கினேன்.

சிறிய மலை, படிக்கெட்டு வழியாக கோயிலை அடைந்தேன்.  கோயில் நடை திறந்தவுடன்,  நெய் விளக்குகள் ஏற்றி, ரூபாய் 10 /- சிறப்பு தரிசன கட்டண சீட்டு பெற்று சுவாமி தரிசனம் செய்து கிளம்பினேன். கோயிலை விட்டு படியிறங்கி திருச்சி செல்ல பேருந்து நிறுத்தம் வந்தேன். சிறுது நேரம் கழித்து மதுரைலுருந்து திருச்சி செல்லும் பேருந்து ஏறி, சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்தேன். 


வீட்டுக்கு போகலாமா அல்லது வயலூர் முருகன் கோயிலுக்கு போகலாமா என்ற குழப்பம் நீடித்தது... சரி போகலாம்....என்று வயலூர் செல்லும் பேருந்தில் ஏறினேன். சுமார் 50  நிமிட பயணம். கடைசி நிறுத்தம் வயலூர் முருகன் கோயில்.  நெய் விளக்குகள் ஏற்றி, ரூபாய் 25 /- சிறப்பு தரிசன கட்டண சீட்டு பெற்று சுவாமி தரிசனம் செய்து விட்டு  வெளியே வந்தால் லேசாக மழை தூறல். அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வந்து, நான் திங்கியிருக்கும் இடமான பாய்லர் தொழிற்சாலை டவுன்ஷிப் வந்தடைந்தேன்.  அப்போது நேரம் இரவு 9.00  மணி.

ஏனோ அன்று காலை, மதியம் உணவு எடுத்து கொள்ளவில்லை.  வேர்க்கடலை, கடலை உருண்டை மற்றும் ஒரு பில்டர் காப்பி மட்டுமே சாப்பிட்டேன்.

டவுன்ஷிப்பில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Friday, 15 December 2017

திருப்பதி திருமலை தரிசனம்

சென்னைக்கு அடுத்தபடியாக நான் விரும்பும் ஊர் திருப்பதி திருமலை. ஒவ்வொரு முறை திருமலை செல்லும் போதும் புதிதாக ஏதாவது ஒரு வளர்ச்சி / மாற்றத்தை காணலாம். 

இரண்டு மாதத்திற்கொருமுறை போய் பெருமாளை தரிசித்துவிட்டு வருவது வழக்கம். குடும்பத்துடன் (வருடம் இரண்டுமுறை) யுகாதி மாற்றும் புரட்டாசி மாத தரிசனம்.  

உண்மையான ராமாராஜ்யம் நடப்பது அங்கே தான்.  ஓர் அரசுக்கு உள்ள கடமைகள் என்ன. அது எப்படி செயல்படவேண்டும். பிரச்சனைகளை போர்க்கள அடிப்படையில் எப்படி தீர்க்க பட வேண்டும் என்பதை திருமலை தேவஸ்தானம் நிர்வாகத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  அப்படி ஒரு கட்டுக்கோப்பு.  Team Work பற்றி இன்று நாம் நிறைய பேசுகிறோம், அவர்கள் கடந்த 1932 முதல் சாதித்து வருகிறார்கள்.

ஓர் அரசிடம் உள்ள எல்லா துறைகளும் இங்கும் உண்டு. கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, பொதுப்பணி, போக்குவரத்து, தகவல் தொழிற்நுட்பம், பேரிடர் மேலாண்மை மற்றும் பல. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மாற்றும் சேவர்த்திகளின் அர்ப்பணிப்பு.

எல்லோரையும் இயங்க வைப்பது அந்த பெருமாள் தான்.

அங்கப்ரதக்ஷணம்:

அங்கப்ரதக்ஷணம் நடைமுறையையை ஒரு நண்பர் எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பல முறை செய்திருக்கிறேன்.  அதிகாலை ஒரு மணி அளவில்  குளத்தில் குளித்துவிட்டு, ஈர வேட்டியுடன் வரிசையில் நிற்க வேண்டும். முதலில் பெண்கள் பிறகு ஆண்களை விடுவார்கள். அதற்குள் சுப்ரபாதம் சேவை தொடங்கி இருக்கும்.  சுவாமி சந்நிதியிலுருந்து சுற்று ஆரம்பமாகி  குபேரன் சிலையுடன் முடியும். பல மகானுபவர்கள் பாதம் பட்ட சந்நிதி.  நமது சரீரம் பட்டவுடன் நமக்கு ஏற்படும் சிலிர்ப்பு, அதை அனுபவித்தால் தான் தெரியும்.  

மார்கழி மாத குளிரில்  அங்கப்ரதக்ஷணம் செய்வது அற்புத அனுபவம். போன மாதம் கொட்டும்  மழையில் அங்கப்ரதக்ஷணம் செய்தது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

சுப்ரபாத சேவை முடிந்தவுடன் அங்கபிரதக்ஷணம்  செய்த பக்தர்களை ஸ்வாமியை தரிசிக்க விடுவார்கள்.

அங்கப்ரதக்ஷணம்  செய்த பக்தர்களை சுவாமி காண வரிசையில் காத்திருக்கும்போது  நிசப்தமான அந்த காலை வேளையில் சுப்ரபாத பாடல் ஒலிக்கும்.  அன்று முழுதும் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.

அன்னதானம்பிரசாதம்:

எப்போது போனாலும் அன்னதானம்பிரசாதம் உணவை தவறாமல் சாப்பிடுவதுண்டு.  எளிய உணவு சாம்பார், ரசம், மோர், துவையல் மற்றும் கூட்டு. இது தான் மெனு. எல்லாம் சுட சுட. அதிலும் மோர் மற்றும் புளி துவையல்  சேர்ந்த கடைசி பிடி / கவளம் உணவின் சுவை அற்புதமாக இருக்கும்.

தங்கும் வசதி :

சில நேரங்களில் போனவுடன் ரூம் கிடைக்கும், சில நேரங்களில் ரூம் கிடைக்காது. அப்போது லாக்கர் எடுத்து, அதில் எங்கள் உடமைகளை வைத்து விட்டு, சுவாமி தரிசனம் செய்ய கிளம்புவோம்.
அப்படி எதுவுமே கிடைக்காவிட்டால், லாக்கர் அறை/ சுவாமி சந்நிதி கோபுர வாசலில் படுத்துவிட்டு மறுநாள் கிளம்பி வீடு வந்து சேர்வோம்.


குடும்பத்துடன் சென்றால் சீக்கிர தரிசனம் அல்லது சேவா தரிசனம். தனியாக சென்றால் அங்கப்ரதக்ஷணம்  தரிசனம் அல்லது தர்ம தரிசனம். ஒரு முறை அங்கப்ரதக்ஷணம் அனுமதி சீட்டு வாங்கும்போது. பக்கத்து கவுண்டரில் சுப்ரபாத சேவைக்கான குலுக்கல் முறை தேர்வில் பெயர் கொடுத்திருந்தேன். மாலை ஆறு மணி குலுக்கல் தேர்வில் என் பெயர் தேர்வாயிருந்தது.  அப்புறம் என்ன, பெருமாளின் விருப்பம் இதுவே என்றெண்ணி ரூபாய் 120 /- செலுத்தி  சுப்ராபாத தரிசனத்தில் கலந்து கொண்டேன்.  அதற்கு பிறகு எப்போது சென்றாலும் சுப்ரபாத சேவைக்கான குலுக்கல் முறை தேர்வில் பெயர் கொடுப்பது வழக்கமாயிற்று.

சென்றமாதம் அப்பாவுக்கு சுப்ரபாத சேவைக்கான குலுக்கல் தேர்வில் பெயர் தேர்வாயிருந்தது. ஸ்வாமியை அருகிலிருந்து பார்த்தது அப்பாவுக்கு மிகுந்த சந்தோஷம். அதே போல் எப்போது சென்றாலும் வராஹ சுவாமி தரிசனம் செய்துவிட்டு தான்  பெருமாளை தரிசிக்க செல்வது வழக்கம்.  இது என் அப்பா எனக்கு சொல்லி கொடுத்த வழிபாட்டு முறை.

பல முறை 8  மணி நேரம் வெளியே, 8  மணி நேரம் வைக்குண்டம் அறையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த்திருக்கிறோம்.  காத்திருப்பு - பொறுமை, சகிப்புத்தன்மையை கற்றுதந்திருக்கிறது.  எல்லா மாநில மக்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரூபாய் 300 சீக்கிரம் தரிசனம் /  அலிபிரி வழியாகவும் /ஸ்ரீவாரி மெட்டு வழியாகவும் நடந்து சென்று சுவாமி தரிசனம்
செய்ததுண்டு மற்றும் என் குழந்தைகளுக்கு எடைக்கு எடை பிரார்த்தனை நிறைவு செய்ததுண்டு.

ஓம் நமோ வெங்கடேசாய !

கோவிந்தா!! கோவிந்தா!!



- காளிகபாலி

Wednesday, 13 December 2017

தூக்கத்தை மீட்போம்


"தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்"
                                   - கவிஞர் கண்ணதாசன்
நாங்கள் சிறுவர்களாயிருந்த போது மாலை 7.30 மணிக்கு இரவு உணவு முடித்துவிட்டு வானொலி ஒளிபரப்பாகும் விவிதபாரதி வர்த்தக நிகழ்ச்சியில் 'வண்ணச்சுடறில் இன்றுநாடகத்தை கேட்டுக்கொண்டே தூங்கிவிடுவோம்.

பள்ளி / கல்லூரி படிக்கும் போது கூட 9.30 மணிக்கு படுக்கைக்கு சென்று விடுவோம். வயது ஆக ஆக தூக்கம் குறைந்து விழித்திருக்கும் நேரம் அதிகரித்துக்கொண்டே போகிறது.
அதிகரிக்கும் மன அழுத்தத்தால் தூக்கம் கெடுகிறது /தடைபடுகிறது.  மன அழுத்தம் / மன உளைச்சலால் எத்தனையோ இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.
சில பேருக்கு புதிய இடம், புதிய சூழலில் படுத்தால் தூக்கம் வருவதில்லை.
பயணம் செய்யும்போது தூங்குபவர்கள் அனேகம் கார், பஸ், ரயில், விமானம் என எதிலும் உட்கார்ந்த உடன் தூங்கி விடுவார்கள், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
பஸ், ரெயிலில் பயணிக்கும்போது உடன் பயணம் செய்யும் சக பயணி நம் மேல் தூங்கி விழுவதையும் பார்க்கலாம். கொஞ்சம் நேராக கழித்து  நம்மை அறியாமல் நாமும் தூங்கி வழிய ஆரம்பிப்போம்.
தூங்குவதற்காகவே பயணம் செய்பவர்களும் உண்டு.  ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்யும்போது தூக்க வருவதேயில்லை. அதே மூன்றாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் பயணம் செய்யும் போது படுத்த உடன் தூங்கிவிடுவேன், அதோடு சென்னையில் எழுவேன். 

புறநகர் ரயிலில் பயணம் செய்யும்போது இடம் கிடைத்தால் தூங்குவது உண்டு. சில சமயம் இறங்கவேண்டிய ரயில் நிலையத்தை தவறவிட்டு அடுத்த நிலையத்தில் இறங்கி பஸ் படித்து வீடு வந்து சேர்வதுண்டு.


பள்ளி / கல்லூரி கோடை விடுமுறையில் மொட்டை மாடியில் நண்பர்களுடன் தூங்குவோம். வீட்டை சுற்றி தென்னை மரங்கள். நல்ல காற்று வரும். அதோடு நல்ல உறக்கமும் வரும்.  காலையில் சூரியன் முகத்தில் விழும் வரை தூங்குவோம். திருட்டு பயம் காரணமாக இப்போதை மொட்டைமாடியில் படுக்க பயமாயிருக்கிறது.

ஒரு நாள் லீவு போட்டு நாள் முழுவதும் தூங்க வேண்டும் என்ற ஆசை, ஆனால் இன்னும் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை காரணம் அப்பொழுதும் வீட்டில் ஏதாவது  வேலை இருக்கும்.

சினிமா தியேட்டரில் காசு கொடுத்து வந்து தூங்குபவர்களும் உண்டு.

திருப்பதி திருமலையில் வாடகை அறை / லாக்கர் கிடைக்காவிட்டால் கிடைத்த இடத்தில தூங்குவதுண்டு. எப்பேர்ப்பட்ட தூக்கம் வரும் தெரியுமா. கனவே வராது.

பாராளுமன்றத்தில் முக்கிய விவாதத்தின் / அலுவலின் போது தூங்கி வழியும உறுப்பினர்கள் காணலாம். அறிவியல் மாநாட்டில் தூங்கி வழியும் விஞ்ஞானிகளை அவ்வபோது தினசரி ஏடுகளில் செய்தி/படம் காணலாம்.

அலுவலக நாட்களில் காலை படுக்கையை விட்டு  எழமுடிவதில்லை ஆனால் ஞாயிறு காலை சீக்கிரமே தூக்கம் கலைந்துவிடுகிறது.


மருத்துவமனையில் பணிபுரிந்தபோது தூங்காமல் இரவு நேரப்பணி செய்த அனுபவம் எனக்குண்டு.  நோயாளிகள் வரவில்லையென்றால் சற்று நேரம் கண் அயரலாம். பெரும்பாலும் மழை கால இரவுகள் இன்னும் கூடுதல்
நேரம் தூங்கலாம்.

காலை சீக்கிரம் எழவேண்டும் என்று நினைத்து படுத்தால், சரியான நேரத்துக்கு எழமுடியும் காரணம் மூலையில் உள்ள சர்க்காடியன் கடிகாரம்.

நல்லெண்ணெய் குளியல் போட்ட சனிக்கிழமை இரவு தூக்கம் ஆளை தள்ளும். மறுநாள் ஞாயிறு காலை ஆடுகால் வாங்கிவந்து சூப் செய்து அருந்துங்கள். உடலுக்கு புது தெம்பு கிடைக்கும்.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு தூக்க குறைபாடு அல்லது தூக்க மூச்சுத்திணறல் நோய் (Sleep Apnea) உள்ளது.  நம்மை போல் அவருக்கு படுத்த உடன் தூக்கம் வராது. அதற்கென்றே வெளிநாட்டிலிலுருந்து வரவழைத்த ஒரு நெபுலைஸர்  கருவியை அணிந்து கொண்டு தான் தூங்க வேண்டும். அதுவே இப்பொது வழக்கமாகி போனது. பலபேருடைய தூக்கத்தை கெடுத்தவர் ........பின்பு எப்படி தூக்கம் வரும்!


இன்னொரு நண்பருக்கு ராஜாவின் தாலாட்டு வரிசை பாடல்களை கேட்டுக்கொண்டே தூங்குவது தான் வழக்கமாம். சிலருக்கு ராஜா மற்றும் ஜிக்கி பாடல்கள் கேட்டால் தூக்கம் வரும்.

ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 6  முதல் 22 வரை உள்ள பாசுரங்கள் தூக்கம் மற்றும் துயிலெழுப்புதல் பற்றி பேசுகிறது.

வைகுண்ட ஏகாதசிக்கு  இரவு முதல் காலை வரை கண் விழித்து, பரமபதம் ஆடி, பிறகு குளித்து பெருமாளுக்கு பூஜை செய்து பகல் முழுதும் தூங்காமல் இரவு தூங்கும் வழக்கம் எங்கள் வீட்டு பெண்களிடம் இருந்தது.  ஆனால் எப்போது வயது ஆகிவிட்டதால் அந்த பழக்கம் மெல்ல மறைந்து வருகிறது.

வைகுண்ட ஏகாதசியன்று ஒரே டிக்கெட்டில் மூன்று படங்கள் போடுவார்கள் எங்கள் ஊர் திரையரங்கில். முதல் படம் வரை தான் தாக்குப்பிடிக்கமுடியும் அப்புறம் ரசிகர்கள் தூக்கத்திடம் சரண். இப்போது அதுபோல் ஒரே டிக்கெட்டில் மூன்று படங்கள் போடும் திரையரங்கம் உள்ளதா தெரியவில்லை.

- காளிகபாலி

Friday, 8 December 2017

எழுத்து பிச்சர் பாட்டு

 
 
எழுத்து பிச்சர் பாட்டு
 
பிலிம் டிவிசன் படம் முடிகிறது.
திரையரங்கில் பேரைமதி நிலவுகிறது. 
தணிக்கை சான்றிதழ் அறிவிப்பு.

முதலில் கோவில் கோபுரம்
பட பட வென்று பறக்கும் புறாக்கள்.
பின்பு இடம்பெறும் படத்தலைப்பு.
அதை தொடர்ந்து ஆரம்பமாகும் பாடல்.



80 -90 களில் எல்லா முன்னணி இயக்குனர்களும் பின்பற்றிய உத்தி இது அபாரமான படைப்பாளிகள் அவர்கள்.

எழுத்து பிச்சர் பாட்டு - படத்தின் பெயர் போட்டவுடன் தொடங்கும் தொடக்க பாடல் அல்லது பெயர்களோடு வரும் பாட்டு. 80  -90 களில் பெருபாலும் எல்லா படங்களிலும் தவறாமல் இடம் பெற்றது.

தொடக்க பாடலை தவறவிட்டவர்கள் மீண்டும் அடுத்த காட்சி முதலிலுருந்து பார்த்தவர்களும் உண்டு.

ரசிகனை முதல் பாடலிலியே இழுத்து உட்கார வைக்க பின்பற்றப்படும் நுட்பம் இது.

எழுத்து பிச்சர் பாடல்கள் மற்றும் பாடல் வரிகள் படத்தில் கதையையோ அல்லது கதாநாயக /நாயகி பற்றியதாக இருக்கும்.  இது தான் கதை / இது தான் நாயக / நாயகியின் இயல்பு என இயக்குனர் ரசிகனுக்கு புரியவைத்துவிடுவார்.  படம் பார்க்கும் ரசிகன் படத்தில் ஒன்றா ஏதுவாயிருக்கும் இப்பாடல்.

பெரும்பாலும் ராஜா சார் பாடிய பாடல்கள் தான் அதிகம் இடம்பெற்றன. "இப்பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் இசைஞானி இளையராஜா"  என்ற வரி கட்டாயம் இடம் பெரும்.  அவர் பாடிய அனைத்து எழுத்து பிச்சர் பாடல்களும் சூப்பர் ஹிட் மற்றும் வெள்ளி விழா படங்களாகும்.  ராஜா சார் எழுத்து பிச்சர் பாடலை பாடினால்  படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை நிலவிய காலமது.

இதோ சில எழுத்து பிச்சர் பாடல்களை கேட்டு பரவசமாகுங்கள்.








- காளிகபாலி







Thursday, 7 December 2017

வருட செயல் திட்டம் (Yearly Action Plan)

அலுவலகத்தில் துறை தலைவருக்கு தனி உதவியாளராக சேர்ந்த புதிது.
புதிய நடைமுறை கற்றுத்தரப்பட்டது அதாவது ஒவ்வொரு மாதமும் செயல் திட்ட அறிக்கை தயாரித்து நிர்வாக இயக்குனருக்கு அனுப்பவேண்டும். அதில் அந்த மாத இலக்குகள், சென்ற மாத இலக்குகளின் நிலை ஆகியவற்றை குறிப்பிடவேண்டும். சில நாட்கள் கழித்து நிர்வாக இயக்குனர் அதில் சில குறிப்புகளுடன் திருப்பி அனுப்புவார்.

விளையாட்டாக வருட செயல் திட்டம் எழுத ஆரம்பித்தேன், அது சரியாக வரவே, ஒவ்வொரு வருடம் டிசம்பர் 25  இரவு அன்று புதிய வருடத்திற்கான செயல் திட்டம் எழுதுவது வழக்கமாயிற்று. கடந்த 2012 முதல் பின்பற்றி வருகிறேன். நல்ல விஷயமாயிற்றே உங்களுக்கும் உபயோகமாக இருக்கட்டுமே....

திட்டம் போட்டு வாழவேண்டும், செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும், வாழ்க்கையில் ஒரு ஒழுங்கை கொண்டு வரவேண்டும் என நினைப்பவர்கள் மேலும்  தொடரலாம்.

உங்கள் வருட செயல் திட்டம் எப்படி இருக்க வேண்டும் ?

உங்கள் வருட செயல் திட்டம் 4 - 5  பதிகளாக  பிரித்து கொள்ளவேண்டும் அதாவது
1.  உங்களை பற்றி: கெட்ட பழக்க வழக்கங்களை விடுதல். புகைபிடித்தல், குடி, குட்கா, முன்கோபம் இத்தியாதி, இத்தியாதி நல்ல பழக்கங்களை கடைபிடிப்பது உ.ம் நடை பயிற்சி, அமைதியாக இருத்தல், யோகா, மாரத்தானில் பங்கேற்பது, உணவு கட்டுப்பாடு, சனி தோறும் நல்லெண்ணெய் குளியல்  போன்ற சில விஷயங்கள்.

2. குடும்பம்: பெற்றோர், மனைவி மக்களிடம் அன்பாக இருத்தல். அவர்களுடன் அதிக நேர செலவிடுதல்.

3. தொழில்/வேலை: தொழில் மேம்பாடு, அடைய வேண்டிய புதிய இலக்குகள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்க தயாராயிருப்பது போன்றவை, புதிய வேலை வாய்ப்புகளை கண்டறிவது.

4. ஆன்மிகம்: தரிசிக்க வேண்டிய புதிய திருக்கோயில்கள், குலதெய்வ வழிபாடு (மிக முக்கியம்).

5. பொதுவானவை: புதிய பொருட்கள் வாங்க வேண்டியவை, புதிய வீடு / மனை வாங்க முயற்சி செய்வது, பள்ளி கட்டண செலவுகளை சமாளிப்பது, கோடை சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்.

ஒரு நோட்டு புத்தகத்திலோ அல்லது பழைய டைரியிலையோ எழுதி வைக்க வேண்டும். டிசம்பர் 25  முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை தினமும் காலை, மாலை படித்து மனதில் ஏற்றி கொள்ளுங்கள்.  பிறகு  அதை எங்காவது ஒரு இடத்தில பத்திரமாக வைத்துவிட்டு வழக்கம் போல் உங்கள் வேலையை பாருங்கள்.

பிறகு வருட இறுதியில் அதாவது டிசம்பர் 25 ல் டைரியை எடுத்து எழுதி வைத்த வருட செயல் திட்டத்தை மீண்டும் படியுங்கள். இதில் சில இலக்குகளை நிச்சயம் அடைந்திருப்போம். நிறைவேறிய விஷயங்களை பச்சை நிற  பேனாவை கொண்டு அடித்துவிடவும்.  

நிறைவேறாததை அடுத்த வருட செயல் திட்டத்தில் சேர்க்கவும்.  இந்த வருடமோ அடுத்த வருடமோ உங்கள் கடினமான/ சின்ன சின்ன இலக்குகளை நிச்சயம் அடைவீர்கள்.

இந்த வருட செயல் திட்ட பயிற்ச்சியால் உங்கள் லட்சியம் தெளிவாகும், அது வலுவாகும். இதனுடைய பயன்களை காலப்போக்கில் நீங்களே உணர ஆரம்பித்துவிடுவீர்கள்.

- காளிகபாலி

Tuesday, 5 December 2017

கிணறு - ஒரு கால பொக்கிஷம்

இன்றைய காலத்தில் அதிசயமாக பார்க்கப்படும் வஸ்து.  சமீபத்தில் பெய்த மழையில் கிணறு நிரம்பியிருப்பதை பார்க்கும் போது மனது அடையும் சந்தோஷத்துக்கு அளவில்லை.

எப்போதுமே கிணற்று தண்ணிறில் குளிப்பது தான் வழக்கம். கோடை காலத்தில் தண்ணீர் குளுர்ச்சியாகவும். மழை காலத்தில் தண்ணீர் வெது வெதுப்பாக  இருக்கும்.  மாடியில்  விழும் மழை நீர்  கிணற்றில் சேரும்படி வீட்டில் வசதி செய்ப்பட்டுள்ளது அதனால் மழை நீர் வீணாவதில்லை.

கிணற்று நீர் தான் குடிக்க, சமையல் மற்ற செய்ய எல்லாவற்றுக்கும்.   கேன் தண்ணீர் இப்போது வரை வீட்டில் அனுமதி இல்லை.

ஒரு கோடை காலத்தில் கிணறு வற்றும் நிலைக்கு சென்றது.  பிறகு 10  அடிக்கு ஆழ படுத்தி உள்ளே உரை இறக்கினோம்.  அடுத்து வந்த மழை கிணற்றை நிரப்பியது.

எங்கள் வீட்டு (40 அடி) கிணறு அமைக்க / எடுக்க 30 நாட்கள் ஆனது  15  நாட்கள் உரைகள் செய்ய மற்றும் 15  நாட்கள் பள்ளம் தோண்டி உரைகள் இறக்க. 

சுற்று வட்டாரத்தில் எங்கள் வீட்டு கிணற்று நீர் தான் குடிக்க ஏற்றது. 25  மேற்பட்ட குடும்பங்களின் தாகத்தை தீர்த்தது.

அடிக்கடி நீர் இறைக்கும் வாளி அறுந்து விழுந்துவிடும். அதை எடுக்க பாதாள கொலுசு என்ற கருவியை கயிற்றில் பொருத்தி சுற்றுவோம். சிறிது நேரம் கழித்து பாதாள கொலுசு வாளியை லாவகமாக மேலே கொண்டு வரும்.

எப்போதும் நான் கிணற்றடியில் குளிப்பது  தான் வழக்கம். திரும்ப வராத சுகமான நாட்கள் அவை.

துணி துவைப்பது, சாமான் துலக்குவது எல்லாம் கிணற்றடியில் தான். அந்த  நீர் அருகில் உள்ள வாழை மரங்களுக்கு செல்லும்.  அவைகள் செழிப்பாக வளர்த்து நிற்கும்.

பள்ளிக்கு செல்லும் முன் வீட்டு தேவைகளுக்கு நீர் இறைத்து அண்டாவை   நிரப்பிவிட்டு செல்லவேண்டும். இது அம்மாவின் கட்டளை.

கிணற்றுக்கு அம்மா குங்குமம் மஞ்சள் பூசி அங்கே மாலையில் விளக்கேற்றுவாள். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் அதற்கும் ஒரு பூஜை உண்டு.

எங்கள் ஊர் வயக்காட்டில் உள்ள கல் கிணறு மிகப்பெரியது. பார்க்கும்போதே பயமாயிருக்கும்.  எப்போதும் தண்ணீர் நிரம்பியிருக்கும்.  என் வயதையுடையவர்கள் தொட்டி மேலே இருந்து குதிப்பார்கள்.  நடு ஆழதுக்கு  சென்று மேலே வருவார்கள். எனக்கு நீச்சல் தெரியாது  அதனால் நான் படிக்கட்டுலேயே உட்கார்ந்து குளித்துவிட்டு வருவேன்.
ஊரில் பெரிய முன்சீப் கிணறு இருந்தது. வற்றாத கிணறு.  மக்கள் எப்போதும் தண்ணீர் எடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவரவர் தங்கள் சொந்த ராட்டினம் கயிறு மற்றும் வாளியுடன் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்.  "கிரீச், கிரீச்" என்ற ராட்டினம் சத்தம் எப்போதும்  கேட்டு கொண்டே இருக்கும்.  இப்பொது அந்த இடத்தில கிணறு இல்லை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.  

இன்றைக்கு கிணற்றை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது.  கிணறெடுக்கும் ஆட்களும் கிடைப்பதில்லை. அந்த தொழிற்நுட்பம் கிட்டத்தட்ட மறைந்து விட்டது.  தண்ணீர் தேவைக்கு போர்வெல் தான் ஒரே தீர்வாகிவிட்டது,  சில மணி நேரத்தில் 300  முதல் 900 அடிகள் தோண்டி தண்ணீர் எடுத்துவிடும்.

எனக்கு தெரிந்த பெரும்பாலான கிணறு இருந்த வீடுகளில் இப்போது ஆழ் துளை கிணறு ஆக்கிரமித்துள்ளது.  கிணறுகள் மூடப்பட்டு விட்டன. 
ஆனால் கிணற்றின் இடத்தை எப்போதுமே போர்வெல் நிரப்பாது.

- காளிகபாலி