Wonderful Shopping@Amazon

Tuesday 30 June 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61

திருப்பாவை
சூடி கொடுத்த சுடர்க்கொடி, கோதை நாச்சியார், ஸ்ரீ ஆண்டாள் தமிழை ஆண்டாள். பன்னிரு ஆழ்வார்களில் முதலாம் பெண் கவி / ஆழ்வார். இறைவனுடன் இரண்டற கலந்தவள்.

காலை வேளை அப்பா குளித்துவிட்டுப் பூஜையில் அமர்வார், நாங்கள் அரைத்தூக்கத்தில்....

''சிற்றஞ் சிறுகாலே....." என்ற பாசுரம் காதில் ஒலிக்கும். அப்போது அது திருப்பாவை என்று தெரியாது. கொஞ்ச நாள் கழித்து எனக்கும் அப்பாசுரம் மனப்பாடமானது.

அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன் ''கூடாரை வள்ளி, இன்னைக்குச் சக்கரைப்பொங்கல் செய்யணும்...'' என்ன அது, ஒரு வேலை கிருத்திகை போன்று அதுவும் ஒரு நாள் போல என்று நினைத்திருந்தேன். பிறகு தெரிந்தது மார்கழி 27- ஆம் நாள் பாசுரம் வரும் அந்த நாளில் அம்மா சர்க்கரை பொங்கல் செய்து சாமிக்குப் படைத்தது.

மாமா கடையில் ஸ்ரீவில்லிபுத்தூலிருந்து தயாராகி வரும் ஸ்ரீ ஆண்டாள் படம் போட்ட மஞ்சள் நெகிழி போர்த்தப்பட்ட அட்டைப்பெட்டியில் நறுமணமிக்க ஆண்டாள் ஸ்நான பவுடர் என்ற குளியல் பொடிக்குக் கணிசமான வாடிக்கையாளர்கள் உண்டு.

'திருமால் பெருமை' படத்தில் வரும் 'ஸ்ரீ ஆண்டாள்' எபிசோட் என் நினைவில் பதிந்துவிட்டது.

இப்படித்தான் ஸ்ரீ ஆண்டாள் மற்றும் 'திருப்பாவை' எனக்கு அறிமுகமானது. பிறகு பன்னிரண்டாம் வகுப்போ அல்லது பட்டப்படிப்போ தமிழ்ப் பாடத்தில் திருப்பாவை படிக்க வாய்த்தது.

திருப்பாவை பாசுரம் மார்கழி மாதம் தினமும் ஒரு பாசுரம் வசிக்கும் பழக்க மேற்பட்டது. அதுமட்டுமல்ல எப்போதெல்லாம் தோன்றுகிறதோ  அப்போதெல்லாம் திருப்பாவை வாசிப்பேன்.

திருப்பதி திருமலை கோயிலில் அதிகாலை இரண்டு மணிக்கு அங்கப்ரதிக்ஷணம் செல்லுகையில் திருப்பாவை வாசிப்பது பரவசமான அனுபவம். அதிலும் 'ஒருத்தி மகனாய் பிறந்து என்ற பாசுரத்தைத் திரும்பத் திரும்ப வாசிப்பேன். கிருஷ்ணலீலையை இந்த பாசுரத்தில் அழகாக விளக்கயிருப்பார் ஸ்ரீ ஆண்டாள்.

ஒரு முறை சுற்றுலா செல்லுகையில் அதிகாலை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது மறக்க முடியாத அனுபவம். தேரடி அருகே உள்ள உணவகத்தில் சுடச் சுட இட்லி -சாம்பார் - வடை சாப்பிட்டது, அதிலும் உணவாக ஊழியர் வாஞ்சையாகக் கேட்டு, கேட்டுப் பரிமாறியது இன்னும் நினைவிருக்கிறது.

திருப்பாவையின் முப்பது பாசுரங்களில் எனக்குப் பிடித்த மேலே சொன்ன இரண்டு பாசுரங்கள் மற்றும் "வையத்து வாழ்வீர்காள்!", "ஓங்கி உலகளந்த உத்தமன்", "புள்ளும் சிலம்பின காண்", "உங்கள் புழக்கடைத் தோட்டத்து", போன்றவை எனக்குப் பிடித்தவை. உங்களுக்குப் பிடித்த ஸ்ரீஆண்டாள் பாசுரம் என்ன ? பின்னுட்டதில் தெரிவிக்கவும்.

இதோ எம் எஸ் அம்மா பாடிய திருப்பாவை பாசுரத்தைக் கேட்டு மகிழுங்கள்



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி     


2 comments:

  1. Sri Andal as often known as "Soodi kodutha sudar kodi" Has given the two greatest parasum . .thirupavai and Nachiyar thirumozhi.. Proved that the true love (faith)always reach success.(Divine) .All the quoted pasuram from thirupavai by the author is really well explained.. Conquered the readers mind and imparted spiritual feelings to the core.

    ReplyDelete