Wonderful Shopping@Amazon

Friday, 5 June 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-51

கிழக்கே போகு ரயில் (1978)

யாரவது (90s கிட்ஸ்) என்னிடம் வந்து உலகத் திரைப்படப் பற்றிப் பேசினால் எனக்குக் கோபமாக வரும். அவர்களைப் பழைய படங்களைப் பார்க்கச் சொல்வேன். சமீபத்தில் ஜீ திரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய 'பதினாறு வயதினிலே' மற்றும் 'கிழக்கே போகு ரயில்' படம் பார்க்கையில் கிராமத்துச் சிறுகதைகள் படிப்பது போல வெகு சுவாரஸ்யமாகவும், இயல்பாகவும் இருந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் கிராமத்துப் படங்கள் (முதல் மரியாதை, கருத்தம்மா வரை) உலகத் திரைப்படங்கள் தான் என்று அடித்துச் சொல்வேன். கிராமத்து வாழ்வியலை இதுபோலச் சொல்ல இனி ஒரு இயக்குநர் வரப்போவதில்லை. கதைக்குள் ஆழமாகப் பயணித்து இறங்கி அடிக்க இப்போது ஒருவரும் இல்லை. ''கருத்தம்மா'' படத்தில் வரும் முதல் இருபது நிமிட காட்சிகள் உலகத் தரம். சுமாராக ஓடிய ''காதல் ஓவியம்'' படம் கூட இப்போது பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. பிரபல கதாநாயகனை நடித்திருந்தால் படம் ஓடியிருக்குமோ என்னவோ. 'வேதம் புதிது' போன்ற படத்தை இன்றைய காலகட்டத்தில் எடுக்கமுடியுமா என்றே தெரியவில்லை.

மேற்சொன்ன இரண்டு படங்களும் ('பதினாறு வயதினிலே' மற்றும் 'கிழக்கே போகு ரயில்') முப்பது வருடங்களுக்கு முன்பு சென்னை தொலைக்காட்சியில் முதல்முறையாக ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியானபோதே எதிர்பார்ப்பு எகிறியது. அப்போதைய நடுத்தர வயதுடையவர்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் ஸ்ரீதேவியின் அழகைப் பற்றி வர்ணிக்காதவர்கள் குறைவு. சிறுவர்களான நாங்களும் கொஞ்சம் Exite-ஆனோம். இதில் தினத்தந்தியில் இரண்டு நாளுக்கு முன்பே 'ஞாயிறன்று .....ஒளிபரப்பாகும்' என்ற செய்தி வேறு.
மாலை நாலு மணிக்கே ஊர் வெறிச்சோடியது. சரியாக மாலை ஐந்தரைமணிக்குப் படத்தை ஒளிபரப்பினார்கள். ஊரே தொலைக்காட்சி முன் உட்கார்ந்து பார்த்தது நினைவிருக்கிறது. பரவலாகத் தொலைக்காட்சி பேட்டி இல்லாத அந்தக் காலத்தில், நாலைந்து குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து படம் பார்ப்பார்கள். வெளியே நடமாடும் மக்களுக்குப் படத்தின் பாடல், வசனம், பின்னணி இசை என அத்தனையும் தெள்ள தெளிவாகக் கேட்கும்.

''ஆட்டுகுட்டி முட்டையிட்டு..." , "பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு’ போன்ற பாடல்கள் சிறுவர்களான எங்கள் மனதில் பதிந்துவிட்டது.

அப்போது அது புதிய படம். திரையரங்கில் பார்ப்பதோடு சரி. அடுத்துத் தொலைக்காட்சியில் பார்க்க வருடங்கள் காத்திருக்கவேண்டும். பாடல்களும் சரி, வானொலி, கல்யாணம், காதுகுத்து, திருவிழா, போன்றவற்றில் கேட்டால் தான் உண்டு. மறுபடியும் எப்போது கேட்போமென்று தெரியாது. அப்போது வசதியுள்ளவன் வீட்டில் தான் டேப் ரெகார்டர் எல்லாம் இருக்கும்.

சரி, நிகழ்காலத்துக்கு வருவோம், 'கிழக்கே போகும் ரயில்' அந்தக் கிளைமாக்ஸ் காட்சி, வாய்ப்பே இல்லை, இப்போது அது போல ஒரு காட்சி வைக்க முடியுமா என்று தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் போராட்டம், புகார் என்று இருக்கும் இப்போதைய சூழலில் படைப்பாளியின் படைப்புச் சுதந்திரம் பறி போய் நீண்ட நாட்கள் ஆகிறது என்பதைத் தான் இன்றைய படங்கள் நமக்கு உணர்த்துகிறது.




நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     


2 comments:

  1. Great movies quality music by illayaraja sir and well directed by Bharathi raja this article takes me back to those golden days of my life well done

    ReplyDelete
  2. தூது போ ரயிலே ரயிலே...
    துடிக்குதொரு குயிலே குயிலே...
    என்னேன்வோ என் நெஞ்சிலே...

    ReplyDelete