Wonderful Shopping@Amazon

Thursday, 25 June 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-57

சுமைதாங்கி (1962)
காலஞ்சென்ற பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கி, 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன் நடித்த  'சுமைதாங்கி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் எனக்கு நிரம்பப் பிடிக்கும். கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இசையரசர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் எளிய இசை கட்டமைப்பு என இந்தப் பாடலை இன்றும் கேட்கத் தூண்டும்.  இவர்களுடைய மாயாஜால இணை காலம் கடந்து நிற்கிறது.

ஒரு நாள் நிசப்தமான அதிகாலை வேளையில் அலுவலகம் செல்லுகையில் எதிரே என்னைக் கடந்து போன காய்கனிகளை ஏற்றி சென்ற காய்கனி குட்டியானை வண்டியில் இந்தப் பாடலை கேட்டேன். அப்புறமென்ன அன்று முழுதும் இந்தப் பாடலை தான் மனது பாடிக்கொண்டிருந்தது.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவிக்கொண்டிருந்த இந்த நேரத்திலும் மக்களுக்காகத் தொண்டாற்றி மறைந்த தி நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு அன்பழகன் அவர்களைப் பற்றிய செய்தி என்னைக் கவர்ந்தது. அதாவது உதவி என்று அவரது அலுவலகத்தை நாடி வரும் தனது தொகுதி மக்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கல்விக் கட்டணம் மற்றும் மருத்துவச் சிகிச்சை செலவுகளுக்கு உதவியிருக்கிறார். அவரால் பயனடைந்தவர்கள் ஏராளம். ஜெயித்துத் தொகுதி பக்கமே வராமல் இருக்கும் உறுப்பினர்கள் மத்தியில், எப்போதும் தனது தொகுதி மக்களுடன் தொடர்பில் இருக்கும் திரு அன்பழகன் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்..
வாழை போலத் தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம், தெய்வமாகலாம்"



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி     




No comments:

Post a Comment