Wonderful Shopping@Amazon

Tuesday, 30 June 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61

திருப்பாவை
சூடி கொடுத்த சுடர்க்கொடி, கோதை நாச்சியார், ஸ்ரீ ஆண்டாள் தமிழை ஆண்டாள். பன்னிரு ஆழ்வார்களில் முதலாம் பெண் கவி / ஆழ்வார். இறைவனுடன் இரண்டற கலந்தவள்.

காலை வேளை அப்பா குளித்துவிட்டுப் பூஜையில் அமர்வார், நாங்கள் அரைத்தூக்கத்தில்....

''சிற்றஞ் சிறுகாலே....." என்ற பாசுரம் காதில் ஒலிக்கும். அப்போது அது திருப்பாவை என்று தெரியாது. கொஞ்ச நாள் கழித்து எனக்கும் அப்பாசுரம் மனப்பாடமானது.

அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன் ''கூடாரை வள்ளி, இன்னைக்குச் சக்கரைப்பொங்கல் செய்யணும்...'' என்ன அது, ஒரு வேலை கிருத்திகை போன்று அதுவும் ஒரு நாள் போல என்று நினைத்திருந்தேன். பிறகு தெரிந்தது மார்கழி 27- ஆம் நாள் பாசுரம் வரும் அந்த நாளில் அம்மா சர்க்கரை பொங்கல் செய்து சாமிக்குப் படைத்தது.

மாமா கடையில் ஸ்ரீவில்லிபுத்தூலிருந்து தயாராகி வரும் ஸ்ரீ ஆண்டாள் படம் போட்ட மஞ்சள் நெகிழி போர்த்தப்பட்ட அட்டைப்பெட்டியில் நறுமணமிக்க ஆண்டாள் ஸ்நான பவுடர் என்ற குளியல் பொடிக்குக் கணிசமான வாடிக்கையாளர்கள் உண்டு.

'திருமால் பெருமை' படத்தில் வரும் 'ஸ்ரீ ஆண்டாள்' எபிசோட் என் நினைவில் பதிந்துவிட்டது.

இப்படித்தான் ஸ்ரீ ஆண்டாள் மற்றும் 'திருப்பாவை' எனக்கு அறிமுகமானது. பிறகு பன்னிரண்டாம் வகுப்போ அல்லது பட்டப்படிப்போ தமிழ்ப் பாடத்தில் திருப்பாவை படிக்க வாய்த்தது.

திருப்பாவை பாசுரம் மார்கழி மாதம் தினமும் ஒரு பாசுரம் வசிக்கும் பழக்க மேற்பட்டது. அதுமட்டுமல்ல எப்போதெல்லாம் தோன்றுகிறதோ  அப்போதெல்லாம் திருப்பாவை வாசிப்பேன்.

திருப்பதி திருமலை கோயிலில் அதிகாலை இரண்டு மணிக்கு அங்கப்ரதிக்ஷணம் செல்லுகையில் திருப்பாவை வாசிப்பது பரவசமான அனுபவம். அதிலும் 'ஒருத்தி மகனாய் பிறந்து என்ற பாசுரத்தைத் திரும்பத் திரும்ப வாசிப்பேன். கிருஷ்ணலீலையை இந்த பாசுரத்தில் அழகாக விளக்கயிருப்பார் ஸ்ரீ ஆண்டாள்.

ஒரு முறை சுற்றுலா செல்லுகையில் அதிகாலை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது மறக்க முடியாத அனுபவம். தேரடி அருகே உள்ள உணவகத்தில் சுடச் சுட இட்லி -சாம்பார் - வடை சாப்பிட்டது, அதிலும் உணவாக ஊழியர் வாஞ்சையாகக் கேட்டு, கேட்டுப் பரிமாறியது இன்னும் நினைவிருக்கிறது.

திருப்பாவையின் முப்பது பாசுரங்களில் எனக்குப் பிடித்த மேலே சொன்ன இரண்டு பாசுரங்கள் மற்றும் "வையத்து வாழ்வீர்காள்!", "ஓங்கி உலகளந்த உத்தமன்", "புள்ளும் சிலம்பின காண்", "உங்கள் புழக்கடைத் தோட்டத்து", போன்றவை எனக்குப் பிடித்தவை. உங்களுக்குப் பிடித்த ஸ்ரீஆண்டாள் பாசுரம் என்ன ? பின்னுட்டதில் தெரிவிக்கவும்.

இதோ எம் எஸ் அம்மா பாடிய திருப்பாவை பாசுரத்தைக் கேட்டு மகிழுங்கள்



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி     


Monday, 29 June 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60

127 ஆண்டுகள்


ஊரடங்கு தொடங்கும் முன்பு மயிலாடுதுறை வழியாகக் கும்பகோணம் சென்று வந்தேன்.

பாரத மாதாவின் தவப்புதல்வன் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சொற்பொழிவாற்றிவிட்டு ராமேஸ்வரம் வழியாக சென்னைக்குத் திரும்புகையில் நள்ளிரவில் மயிலாடுதுறை ரயில் நிலைய சந்திப்பில் அவரை வரவேற்றதன் நினைவாக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கீழ்க்கண்ட நினைவுச் சின்னத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
எங்கள் அலுவலகத்தில் அனைவருக்கும் யோகா பயிற்சி ஒரு தனியார் அமைப்பால் அளிக்கப்பட்டது. நானும் தினமும் செய்து வருகிறேன். பெரும்பாலான யோகா உடற் பயிற்சிகள் விவேகானந்தா யோகா மையம் அடியொற்றியே இருந்தது.

1893-ஆம் ஆண்டுச் செப்டம்பர் பதினோராம் நாள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு உரையைச் சமீபத்தில் கேட்க நேர்ந்தது."அமெரிக்க நாட்டின் சகோதரிகளே, சகோதரர்களே" எனும் தொடக்கத்திற்கு இரண்டு நிமிட இடைவிடாத கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. நல்ல கம்பீரமான குரல். குரல் பதிவு முப்பது நிமிடங்கள் வரை நீடித்தது. ஆனால் உண்மை யாதெனில் அன்றைய காலகட்டத்தில் சொற்பொழிவைப் பதிவு செய்யும் எந்தத் தொழினுட்ப வசதியும் இல்லை. அதனால் அது சுவாமி விவேகானந்தரின் குரலும் அல்ல என்று தெரிந்தது. தகவல் களஞ்சியமாம் இணையத்தில் இது போன்ற போலி பதிவுகளும் /தகவல்களும் உலா வருகிறது

சரி அவரின் பேச்சின் சாராம்சம் தெரியவேண்டுமா? இந்தச் சுட்டியை அழுத்தித் தெரிந்துகொள்ளுங்கள்.



நன்றி: bbc.com


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     




ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59


'மூடுபனி' (1980)

ளையராஜா சார் இசையமைத்த நிலா பாடல்களில் இதுவும் ஒன்று. நாற்பது
வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தப் பாடலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம், ஒவ்வொரு முறை கேட்கும்போது புதிதாகக் கேட்பது போல இருக்கும்.'நடபைரவி' ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் பேஸ் கிட்டாரில் தொடங்கி, தசேட்டனின் குரலில் இணைந்து கோரசோடு பயணித்து மெல்ல நம்மை ஆக்கிரமிக்கும்.

1980-ஆம் ஆண்டுத் தீபாவளி அன்று வெளியான 'மூடுபனி' படத்தில் இடம்பெற்ற ''என் இனிய பொன் நிலாவே..." தான் மேலே சொன்ன பாடல். 'மூடுபனி' படத்திலிருந்து தான் தமிழ் சினிமாவின் மேஜிக்கல் காம்போ இயக்குநர் பாலுமகேந்திரா- இளையராஜா இணை ஆரம்பமானது.

நானும் நினைத்திருந்தேன் இந்தப் பாடலை பெண் குரலில் கேட்டல் எப்படி இருக்குமென்று? சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாவின் இன்னிசை கச்சேரியில் இந்தப் பாடலை பெண் பாடகர்கள் கோரஸாகப் பாடி கேட்டது இன்னொரு பரவசமான அனுபவமாக இருந்தது.

நீங்களும் அந்த பாடலை ஒரு முறை கேளுங்களேன்:





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     





Thursday, 25 June 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-58

'கிக்' (2009)

தெலுங்கு தேசத்தில் ரசிகர்களால் 'மாஸ் மகாராஜா' என்றழைக்கப்படும் நடிகர் ரவி தேஜாவுக்குக் கணிசமான ரசிகர் பட்டாளம் உண்டு. அவருடைய படங்கள் நகைச்சுவை, பாடல்கள், ஆக்ஷன் என முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தது. நானும் அவருடைய படங்களை விரும்பி பார்ப்பதுண்டு. அவருடைய படத்தில் நகைச்சுவை நடிகர்கள் பிரம்மானந்தம், ஆலி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி கட்டாயம் இடம்பெறுவர்.

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடித்து, இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கிய 'கிக்' திரைப்படம் 2009-ஆம் ஆண்டு வசூல் சாதனைபுரிந்த படம். பின்பு பல மொழிகளில் ரீமேக்கானது. தமிழில் 'ஜெயம்' ரவி நடித்துத் 'தில்லாலங்கடி' என்ற பெயரில் வெளிவந்து சொதப்பியது. வேறு ஒருவர் நடித்திருந்தால் ஓடியிருக்குமோ என்னவோ? கதை உங்களுக்குத் தெரியும் நான் சொல்ல வேண்டியதில்லை.

சாதாரணமாக மசாலா படங்களில் கதாநாயகனுக்கு நடிக்க அவ்வளவாக வாய்ப்பு குறைவாகவே இருக்கும். இயக்குநர் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் அல்லவா. ஆனால் கதாநாயகன் ஏன் கொள்ளையனாக மாறினான் என்ற காரணத்தை வலுவாக இடைவேளைக்கு முந்திய ஒரு காட்சி வைத்திருப்பார் இயக்குநர், அதில் ரவி தேஜா வெகு இயல்பாக, அருமையாக நடித்திருப்பார். அந்த காட்சியைப் பார்க்கும் பார்வையாளர்களும் Convince ஆவார்கள். ரவி தேஜாவின் Magical Moment கீழே உள்ள காணொளியில்:






நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-57

சுமைதாங்கி (1962)
காலஞ்சென்ற பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கி, 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன் நடித்த  'சுமைதாங்கி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் எனக்கு நிரம்பப் பிடிக்கும். கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இசையரசர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் எளிய இசை கட்டமைப்பு என இந்தப் பாடலை இன்றும் கேட்கத் தூண்டும்.  இவர்களுடைய மாயாஜால இணை காலம் கடந்து நிற்கிறது.

ஒரு நாள் நிசப்தமான அதிகாலை வேளையில் அலுவலகம் செல்லுகையில் எதிரே என்னைக் கடந்து போன காய்கனிகளை ஏற்றி சென்ற காய்கனி குட்டியானை வண்டியில் இந்தப் பாடலை கேட்டேன். அப்புறமென்ன அன்று முழுதும் இந்தப் பாடலை தான் மனது பாடிக்கொண்டிருந்தது.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவிக்கொண்டிருந்த இந்த நேரத்திலும் மக்களுக்காகத் தொண்டாற்றி மறைந்த தி நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு அன்பழகன் அவர்களைப் பற்றிய செய்தி என்னைக் கவர்ந்தது. அதாவது உதவி என்று அவரது அலுவலகத்தை நாடி வரும் தனது தொகுதி மக்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கல்விக் கட்டணம் மற்றும் மருத்துவச் சிகிச்சை செலவுகளுக்கு உதவியிருக்கிறார். அவரால் பயனடைந்தவர்கள் ஏராளம். ஜெயித்துத் தொகுதி பக்கமே வராமல் இருக்கும் உறுப்பினர்கள் மத்தியில், எப்போதும் தனது தொகுதி மக்களுடன் தொடர்பில் இருக்கும் திரு அன்பழகன் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்..
வாழை போலத் தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம், தெய்வமாகலாம்"



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி     




Wednesday, 24 June 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-56

தி கிரேட் எஸ்கேப் (1963)

ள்ளிப் பருவத்தில் நான் பார்த்த 'தி கிரேட் எஸ்கேப்' (1963) என்ற ஆங்கிலப் படம் இன்றும் பசுமையாக நினைவில். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் உங்களை அசையாமல் கட்டிப்போடவைக்கும். கடைசி முப்பது நிமிடங்கள் நமது கதாநாயகர்கள் தப்பிக்க முயற்சி செய்த திட்டங்கள் அத்தனையும் வீணாகி, ஒவ்வொருவராகப் பிடிபட்டு /கொல்லப்படும்போது நாமும் கலங்கித்தான் போவோம்.

ஸ்டீவ் மெக்குயூன், ஜேமஸ் கார்னெர், ரிச்சர்ட் அட்டேன்பரோ (அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கையைப் படமாக எடுத்தவர் இவர்) மற்றும் பலர் நடித்த 'தி கிரேட் எஸ்கேப்' எழுத்தாளர் பால் பிரிக்ஹில் எழுதிய "தி கிரேட் எஸ்கேப்" என்ற அதே பெயருடைய புத்தகத்தைத் தழுவி இயக்குநர் ஜான் ஸ்டுருகஸ் இயக்கினார்.

இரண்டாம் உலகப் போரில் பிடிபடும் பிரிட்டிஷ் நேச படை வீரர்கள், ஜெர்மனிய போர் கைதி சிறையில் அடைக்கப்பட. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து, துளைபோட்டு, சுரங்கம் அமைத்து நூதன முறையில் முகாமிலிருந்து தப்பிப்பது தான் கதை. எதைக் கொண்டு, எப்படிச் சுரங்கம் அமைக்கிறார்கள் என்பதை மிகச் சுவாரசியமாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் ஜான் ஸ்டுருகஸ்.  படம் பாருங்கள் புரியும்.

1963 -ஆண்டில் நாம் குடும்பப் படங்களாக எடுத்துத் தள்ளி கொண்டிருந்த காலத்தில், ஹாலிவுட்டில் உலகப் போர் சம்பவங்களை மையமாக வைத்துப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். 'தி கிரேட் எஸ்கேப்' (1963) உலகமெங்கும் உள்ள ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

'தி ஷாவ்ஷாங்க் ரிடிம்க்ஷன்(1994)' மற்றும் 'எஸ்கேப் ஃபரம் அல்காட்ரஸ்(1979)' போன்ற படங்களுக்கெல்லாம் முன்னோடி.

தவறவிடக்கூடாத சிறந்த ஆங்கிலத் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி     


Monday, 22 June 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-55


7G ரெயின்போ காலனி (2004)

'சத்திரியன்' படத்தில் ஸ்வர்ணலதா பாடிய "அடடா நானும் மீனைப் போலக் கடலில் வாழக்கூடுமோ..........." என்ற கவிஞர் வாலியின் வரிகளுக்குச் சற்றும் குறைவில்லாத வரி மறைந்த கவிஞர் நா முத்துக்குமார் எழுதி ஹரிஷ்-மதுமிதா பாடிய "கானா காணும் காலங்கள் .."பாடலில் வரும் இந்த வைர வரிகள் "தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே.." படத்தின் மொத்த கதையையுமே இந்த வரிகள் சொல்லிவிடும். பாடலின் இடையே வரும் ஆலாபனை அருமை.

இயக்குநர் செல்வராகவன்-இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் சேர்ந்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதில் '7G ரெயின்போ காலனி' என் மனதுக்கு நெருக்கமான படம். பதின்பருவ காதலை மனதுக்கு மிக நெருக்கமாகச் சொன்ன படம் '7G ரெயின்போ காலனி'. அனிதா-கதிர் கதாபாத்திரங்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது, இந்தக் கதாபாத்திரங்கள் என்னை மிகவும் பாதித்தது. காரணம் கதிர் போல எனக்கும் ஒரு நண்பன் இருந்தான். அவனுடைய வலிகளையும் வேதனைகளையும் அருகிலிருந்து பார்த்தவன் நான். காலம் அவனுக்கு ஒரு மிகப்பெரிய மாறுதலைக் கொடுத்தது எனக்குச் சந்தோசம்.

இயக்குநர் செல்வராகவன் - யுவன் - மறைந்த கவிஞர் நா முத்துக்குமார் கூட்டணி பல நல்ல பாடல்களைத் தந்துள்ளது '7G ரெயின்போ காலனி' படத்தில் அவர்கள் நிகழ்த்திய அந்த மாயாஜாலம் இதோ:





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-54


மொஹர (1994)
க்ஷய்குமார் ஆரம்பக் காலங்களில் சில மொக்கை படங்களில் நடித்திருக்கிறார். பிறகு 'கி(ல்)லாடி' வகையறா படங்கள் அவருக்கு வெற்றியைத் தந்தது. பின்பு வந்த 1994-ஆம் ஆண்டு வெளிவந்த 'மொஹர' திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து, அந்த ஆண்டு அக்ஷய்குமாருக்கு முன்னணி நாயகன் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது

சென்னை அண்ணாசாலையில் உள்ள தொழிற்நுட்பபைலகத்தில் படிக்கும்போது, எங்கள் குழு நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மெலோடி திரையரங்கில் இந்தப் படம் பார்த்தோம். அதர்சபழமான கதை தான். "து சீஸ் படி ஹை மஸ்த மஸ்த" என்ற இந்தப் பாட்டுக்காக நண்பர்கள் குழு இன்னொரு முறை படம் பார்க்கச் சென்றார்கள்.

விஜூ ஷா இசையமைத்துக் கவிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் 'காதல் பிசாசே' என்ற பாடலை பாடிய உதித் நாராயணன் பாடிய இந்தப் பாடல் ஒரு மாதிரியாக ஆரம்பித்து மெல்ல உங்கள் மனதில் இடம் பிடிக்கும். அப்போது இந்தப் படத்தின் பாடல் ஒலிநாடாக்கள் அதிக அளவில் விற்றுத்தீர்ந்தது.

பாகிஸ்தான் பாடகர் நுஸ்ரத் பதேஹ் அலிகான் பாடிய "தம் மஸ்த கலந்தர் மஸ்த மஸ்த" என்ற இஸ்லாமிய குவ்வாளி வகைப் பாடலை தழுவி இந்தப் பாடல் உருவாக்கப்பட்டது.

நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன் இதோ காணொளி :





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     



Friday, 5 June 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-53


கல்நாயக் (1993)

1988-ஆம் ஆண்டு இறுதியில் நடிகை மாதுரி தீக்ஷித்-க்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. 'தேஜாப்' என்ற படம். 'ஏக் தோ தீன்' என்ற பாடல் இந்திய முழுதும் புயலைக் கிளப்பிப் பிரபலமடைந்து ஓய்ந்திருந்த நிலையில், 1993-ஆம் ஆண்டு இயக்குநர் சுபாஷ் கை இயக்கத்தில் வெளியான 'கல்நாயக்' என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் மற்றும் மாதுரி தீக்ஷித்தின் நடனம் இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கியது. படமும் பாக்ஸ்ஆஃபிஸில் மாபெரும் வசூல் வேட்டையை நிகழ்த்தியது. மாதுரியின் நடனத்தைக் கண்டு இந்தியாவே வியந்தது.

இந்தப் பாடலில் இடம்பெற்ற தொடக்க வரிகளுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பு மற்றும் கடும் சர்சையையை கிளப்பியது, பல இடங்களில் போராட்டம் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியானது. எதிர்ப்பே படத்துக்கு இலவச விளம்பரமாக அமைந்து, படம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

சரோஜ்கான் அமைத்த நடனத்துக்கு மாதுரி தீக்ஷித் மற்றும் நீனா குப்தா ஆட, அனந்த பக்ஷியின் வரிகளை அல்கா யாக்னிக் மற்றும் இலா அருண் சொக்க வைக்கும் குரலில் பாட, இரட்டை இசையமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் இப்பாடலுக்குப் பிரம்மாண்டமாய் இசையமைத்திருப்பார்கள்.




நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-52


காலஞ்சென்ற திரு விசு - நடிகர், இயக்குனர்

A tribute to Actor / Director Late Mr Visu..........

உங்களுக்கு இயக்குநர் விசு பிடிக்குமா ? நடிகர் விசு பிடிக்குமா ?

விசு அவர்கள் இயக்கி நடித்த படங்கள் எனக்குப் பிடிக்கும். பள்ளி நாட்களில் விசு படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தவன் நான். எப்போது படப்பிடிப்பு ஆரம்பிக்கிறார் எப்போது முடிக்கிறார் என்று தெரியாது. ஆனால் ஒரு படம் ஓடி முடிந்த பிறகு இன்னொரு படம் வரும் இதற்கிடையில் அவர் நடித்த சில படங்களும் வெளிவரும்.

இயக்குநர் இமயம் கே பாலசந்தர் பள்ளியிலிருந்து வந்த நடிகர் /இயக்குநர் விசுவின் பலமே அவரது திரைக்கதை மற்றும் அவருடைய குரல். (A Voice with Conviction). ஒரு திரையரங்கில் பெரும் ஆக்ஷன் ஹீரோக்கள் படங்கள் ஆர்ப்பாட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில், இவரின் படம் இன்னொரு திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடிக்கொண்டிருக்கும். குடும்பங்கள் விசு படங்கள் பார்க்கப் படையெடுத்த காலமது. 'குடும்ப' இயக்குநர் கே எஸ் கோபாலக்ரிஷ்ணனுக்குப் பிறகு தொடர்ச்சியாகக் குடும்பப்படங்கள் எடுத்த இயக்குநர் விசு. ஒரு இயக்குநருக்கு எந்த விஷயம் பாதிக்கிறதோ, அதைத் தான் அவர் படமாக எடுப்பார், கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்த விசு குடும்பப் படங்கள் எடுத்தது ஆசிரியமில்லை தான். பெரிய முன்னணி நடிகர் இருக்கமாட்டார்கள், ஆனால் செறிவான கதை இருக்கும். துணை கதாபாத்திரங்கள் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். படத்தினூடே வரும் நகைச்சுவை காட்சிகள் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்கும். குடும்பச் சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் தான் விசு படங்கள்.

'குடும்பம் ஒரு கதம்பம்', 'மணல் கயிறு', 'டௌரி கல்யாணம்', 'ஊருக்கு உபதேசம்', 'சம்சாரம் அது மின்சாரம்', 'திருமதி ஒரு வெகுமதி', 'பெண்மணி அவள் கண்மணி', 'வீடு மனைவி மக்கள்','வரவு நல்ல உறவு','வேடிக்கை அது வாடிக்கை', போன்ற படங்கள் விசுவின் மேதைமைக்கு ஒரு சாட்சி.

இப்போது கூடத் தொலைக்காட்சியில் இயக்குநர் விசுவின் படம் ஒளிபரப்பானால் சேனல் மாற்றாமல் பார்க்கலாம். எந்த இயக்குநருக்குக் கிடைக்கும் இந்தப் பாக்கியம்.  'மணல் கயிறு' படத்தில் வரும் நகைசுவை காட்சி, இதோ:







நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-51

கிழக்கே போகு ரயில் (1978)

யாரவது (90s கிட்ஸ்) என்னிடம் வந்து உலகத் திரைப்படப் பற்றிப் பேசினால் எனக்குக் கோபமாக வரும். அவர்களைப் பழைய படங்களைப் பார்க்கச் சொல்வேன். சமீபத்தில் ஜீ திரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய 'பதினாறு வயதினிலே' மற்றும் 'கிழக்கே போகு ரயில்' படம் பார்க்கையில் கிராமத்துச் சிறுகதைகள் படிப்பது போல வெகு சுவாரஸ்யமாகவும், இயல்பாகவும் இருந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் கிராமத்துப் படங்கள் (முதல் மரியாதை, கருத்தம்மா வரை) உலகத் திரைப்படங்கள் தான் என்று அடித்துச் சொல்வேன். கிராமத்து வாழ்வியலை இதுபோலச் சொல்ல இனி ஒரு இயக்குநர் வரப்போவதில்லை. கதைக்குள் ஆழமாகப் பயணித்து இறங்கி அடிக்க இப்போது ஒருவரும் இல்லை. ''கருத்தம்மா'' படத்தில் வரும் முதல் இருபது நிமிட காட்சிகள் உலகத் தரம். சுமாராக ஓடிய ''காதல் ஓவியம்'' படம் கூட இப்போது பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. பிரபல கதாநாயகனை நடித்திருந்தால் படம் ஓடியிருக்குமோ என்னவோ. 'வேதம் புதிது' போன்ற படத்தை இன்றைய காலகட்டத்தில் எடுக்கமுடியுமா என்றே தெரியவில்லை.

மேற்சொன்ன இரண்டு படங்களும் ('பதினாறு வயதினிலே' மற்றும் 'கிழக்கே போகு ரயில்') முப்பது வருடங்களுக்கு முன்பு சென்னை தொலைக்காட்சியில் முதல்முறையாக ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியானபோதே எதிர்பார்ப்பு எகிறியது. அப்போதைய நடுத்தர வயதுடையவர்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் ஸ்ரீதேவியின் அழகைப் பற்றி வர்ணிக்காதவர்கள் குறைவு. சிறுவர்களான நாங்களும் கொஞ்சம் Exite-ஆனோம். இதில் தினத்தந்தியில் இரண்டு நாளுக்கு முன்பே 'ஞாயிறன்று .....ஒளிபரப்பாகும்' என்ற செய்தி வேறு.
மாலை நாலு மணிக்கே ஊர் வெறிச்சோடியது. சரியாக மாலை ஐந்தரைமணிக்குப் படத்தை ஒளிபரப்பினார்கள். ஊரே தொலைக்காட்சி முன் உட்கார்ந்து பார்த்தது நினைவிருக்கிறது. பரவலாகத் தொலைக்காட்சி பேட்டி இல்லாத அந்தக் காலத்தில், நாலைந்து குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து படம் பார்ப்பார்கள். வெளியே நடமாடும் மக்களுக்குப் படத்தின் பாடல், வசனம், பின்னணி இசை என அத்தனையும் தெள்ள தெளிவாகக் கேட்கும்.

''ஆட்டுகுட்டி முட்டையிட்டு..." , "பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு’ போன்ற பாடல்கள் சிறுவர்களான எங்கள் மனதில் பதிந்துவிட்டது.

அப்போது அது புதிய படம். திரையரங்கில் பார்ப்பதோடு சரி. அடுத்துத் தொலைக்காட்சியில் பார்க்க வருடங்கள் காத்திருக்கவேண்டும். பாடல்களும் சரி, வானொலி, கல்யாணம், காதுகுத்து, திருவிழா, போன்றவற்றில் கேட்டால் தான் உண்டு. மறுபடியும் எப்போது கேட்போமென்று தெரியாது. அப்போது வசதியுள்ளவன் வீட்டில் தான் டேப் ரெகார்டர் எல்லாம் இருக்கும்.

சரி, நிகழ்காலத்துக்கு வருவோம், 'கிழக்கே போகும் ரயில்' அந்தக் கிளைமாக்ஸ் காட்சி, வாய்ப்பே இல்லை, இப்போது அது போல ஒரு காட்சி வைக்க முடியுமா என்று தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் போராட்டம், புகார் என்று இருக்கும் இப்போதைய சூழலில் படைப்பாளியின் படைப்புச் சுதந்திரம் பறி போய் நீண்ட நாட்கள் ஆகிறது என்பதைத் தான் இன்றைய படங்கள் நமக்கு உணர்த்துகிறது.




நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-50

பயணங்கள் முடிவதில்லை (1982)

'லொக்கு, லொக்கு-வென்று இருமல் சத்தம் கைப்பேசி வழியே கேட்ட போது நமக்கே கொரோனா வந்துவிடும் போலிருந்தது.

எனக்கு இரண்டு விஷயங்கள் ஞாபகம் வருகிறது. ஒன்று. இயக்குநர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'எதிர்நீச்சல்' படத்தில் வரும் 'இருமல்' தாத்தா என்ற கதாபாத்திரம். கடைசி வரை அக்கதாபாத்திரத்தை கண்ணிலேயே காண்பிக்கமாட்டார் இயக்குநர். இருமல் சத்தத்தைக் கேட்டு நாமே புரிந்துகொள்ளவேண்டும். இது இயக்குநர் கே பாலசந்தர் 'டச்'.

இரண்டு: இந்த இருமல் சத்தம் தமிழ்நாட்டு பட்டிதொட்டியெங்கும் சினிமா / சென்னை வானொலி / சென்னை தொலைக்காட்சி 'ஒளியும் ஒலியும்' வழியே ஒலித்தது. ஞாயிறு அன்று மாலை நான்கு மணிக்குச் சென்னை வானொலியில் ஒளிபரப்பான 'நேயர் விருப்பம்' நிகழ்ச்சியில் இப்பாடல் கடைசிப் பாடலாக வரும்.
 
என்ன பாடல் அது: 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் வரும் 'மணியோசை கேட்டு' என்ற பாடலை கதாநாயகன் மோகன் இருமிக்கொண்டே பாடுவார். பாடுவது SPBயா அல்லது கதாநாயகன் மோகனா? யார் பாடுகிறார்கள் என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்குப் பாலுவின் குரலுக்கு மோகன் தத்ரூபமாக இருமிக்கொண்டே வாயசைத்து, பாடி நடித்திருப்பார்.

இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன், ராஜ சார் இணைந்த முதல் மாயாஜால வெற்றி, பல வெற்றிப் படங்களுக்கு அச்சாரமாக அமைந்தது 'பயணங்கள் முடிவதில்லை' கூட்டணி.

இந்தப் பாடல் மட்டுமில்லை 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் வரும் எல்லாப் பாடல்களும் மக்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டாடித் தீர்த்தார்கள். சரி நீங்களும் கீழே உள்ள பாடலை முழுமையாகக் கேளுங்கள் :







நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி     


Monday, 1 June 2020

சென்னையில் பாட்டு கச்சேரி

சென்னையில் வருடந்தோறும் நடக்கும் மார்கழி கர்நாடக இசை கச்சேரி பற்றிய கட்டுரை அல்ல.

"இன்னைக்கு கச்சேரி எங்கே.. ?"

"இன்னைக்கு நைட் கச்சேரிக்கு போகலாமா ...."

"கச்சேரி அருமையாக இருந்தது தெரியுமா ... நீ தான் வரல.."

மேற்சொன்ன உரையாடல் இருபது வருடங்களுக்கு முன் அன்றாடம்  காதில் விழும், அதுவும் ஆடிமாசம் என்றால் சொல்லவே வேண்டாம். ஊரே பாட்டு கச்சேரி களைகட்டும். பெருமாள் அண்ணனுடன் சேர்ந்து ஏராளமான பாட்டு கச்சேரிக்கு போய் கேட்டிருக்கிறேன்.

முக்கியமான இசைக்கருவிகள் மேடையை ஆக்கிரமித்திருக்கும், அதுவரை திரைக்கு பின் கேட்டிருந்த இசை /பார்த்திருந்த இசைக்கருவிகளை நேரில் பார்க்கமுடிந்தது.

"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" , "ஆயர்பாடி மாளிகையில் .." சங்கராபரணம் படத்தில்இடம்பெற்ற தெலுங்கு பாடல் என்று தொடங்கும் கச்சேரி பிறகு சூடுபிடிக்கும்.  பழைய பாடல்கள், அப்போது வந்த புதிய பாடல்கள் என கலந்துகட்டி பாடுவார்கள்.

நன்றாக நினைவிருக்கிறது கோவை சௌந்தரராஜன் என்பவர்  "பச்சை கிளி, முத்துசரம் முல்லை கொடி யாரோ.." என ஹஸ்கி டிஎம்எஸ் போலவே  பாடுவார்.

அடுத்து 'சொர்கம் மதுவிலே...' என பாட தொடங்குவர் ஒருவர், இன்னொருவர்  சிறப்பு சபதம் எழுப்புவார். கேட்கவே ஜோராக இருக்கும்

'சொர்கம் மதுவிலே...', "எங்கேயும் எப்போதும்" , "இளமையெனும் பூங்காற்றே", "சங்கீத மேகம்" , "வா வெண்ணிலா... ", "அடியே மனம்  நில்லுன்னா.." போன்ற பாடல்கள் அனைத்து கச்சேரிகளிலும் தவறாமல் இடம் பெரும் பாடல்கள். 
பிடித்த பாடலை மீண்டுமொருமுறை பாட சொல்லி ரசிகர்கள் கேட்பதெல்லாம் உண்டு.

ரசிகர்கள் / மக்கள் கட்டுக்குலையாமல் அப்படியே கடைசி வரை கச்சேரி முழுதும் கேட்டு விட்டு தான் நகர்வார்கள்.

அப்போது சினிமாவுக்கு அடுத்து இசை கச்சேரி முக்கிய இடம் பிடித்தது.
'சாதகப்பறவைகள்', 'யு கே முரளி', 'லக்ஷ்மன் சுருதி' குழுக்கள் பரவலாக கச்சேரி செய்தாலும். "சுருதி" என்ற பெயரை போட்டுகொண்டு நிறையபேர் கச்சேரி செய்தார்கள்.
வடபழனி-அசோக் நகர் சாலையில் உள்ள அம்மன் கோயிலில் ஆடிமாசம் நடக்கும் கச்சேரிக்கு பாதி சாலையை மறித்து, பிரமாண்ட மேடை அமைத்து பாட்டு கச்சேரி நடக்கும்.

பெரிய அம்மன் கோயில்களில் பாடகி எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கும். எங்கள் ஊர் சின்னம்மன் கோயில் கச்சேரியில் பாடகி எல் ஆர் ஈஸ்வரி பாடியிருக்கிறார்.


ஒரு கட்டத்தில் கச்சேரிகள் திருமண வீடு வரவேற்பு நிகழ்ச்சியில் இடம்பிடித்தது. என்னுடைய திருமணத்திலும் எங்கள் ஊரில் உள்ள இசை குழு பாட்டு கச்சேரி நடத்தினார்கள்.  பெரும்பாலும் கச்சேரிகளில் இசை சத்தமாக மாறி பாடல் வரிகளை விழுங்கி இரைச்சலானது. பிறகு 'கரோக்கி' எனப்படும் வெறும் இசையை பின்பற்றி பாடி வந்தார்கள். இப்போது அதுவும் வழக்கொழிந்து பெரிய இசைக்கருவியை பாடல்களை ஒலிக்கவிடுகிறார்கள்.

தொன்னூறுகளுக்கு பிறகு பாட்டு கச்சேரிகள் குறைய ஆரம்பித்தது. ஆனால் இப்போதும் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கம், ராஜா அண்ணாமலை அரங்கம் போன்றவற்றில் அவ்வப்போது இசை கச்சேரிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

ஏனோ இசை கச்சேரிகளில் பாடியவர்கள் பலர் சினிமாவில் பாடி புகழ் பெறவில்லை.ஆனால் விதிவிலக்காக தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் தமன் சென்னையில் நடைபெற்ற பல கச்சேரிகளில் வாசித்த அனுபவம் தான் இன்று முன்னணியில் உள்ளதாக சமீபத்தில் ஒரு நாளிதழ் பேட்டியில் தெரிவித்திருந்தார்.


நன்றி: தி இந்து தமிழ் பதிப்பகம் வெளியிட்ட 'அண்ணா - மாபெரும் தமிழ் கனவு' புத்தகத்திலிருந்து..


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     





மூன்றாவது சென்னை சுயாதீன திரைப்பட விழா 2020

மூன்றாவது சென்னை சுயாதீன திரைப்பட விழாவிற்குச் செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த விகடனுக்கு நன்றி. திரைப்பட விழாவில் திரையிட்ட சில படங்களைப் பற்றிப் பேசுவோம்:

'ஃபாகுன் ஹவாய்'  (Fagun Haway)"

இயக்குநர் திரு டாக்கிர் அஹ்மத் இயக்கிய 'ஃபாகுன் ஹவாய்'  (தமிழில் : வசந்த காற்று) என்ற பெங்காலி மொழி படம் திரையிட்டார்கள். நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் 1952.ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் நடைபெற்ற மொழி கிளர்ச்சி பற்றிய படம்.  உண்மையை மிக நெருக்கமாகச் சொல்லும் படம். 

இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் இல்லாத பெருமை நம் தமிழகத்திற்கு உண்டு. அது மொழிப்போர். வேற்று மொழி திணிக்கப்படுவதை எதிர்த்தோம். அதே போன்று வரலாறு பங்களாதேஷ் நாட்டிற்கும் உண்டு என்பதை இந்த படம் பார்க்கும்போது தெரிந்து கொள்ளமுடிந்தது.

ஒரு மொழி திணிப்பு எப்படி மனிதனை வெறியனாக்குகிறது, நாட்டை / பூர்வகுடி மக்களை மொழி திணிப்பு எப்படி பிளவு ஏற்படுத்துகிறது என்பதை இயக்குநர் மிக அழகாக நமக்குள் கடத்துகிறார். படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்கினை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாகக் காவலராக வரும் யஷ்பால் சர்மாவின் நடிப்பு மிரட்டல்.

'நில மோசடி' - ஆவணப்படம்:

மறைந்த இயக்குநர் அருண்மொழி, தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளி. அவருடைய மாணவர்கள் கொணர்ந்த ஆவணப்படம் 'நில மோசடி'.  டெல்டா மாவட்டங்களில் யாருக்கு அதிக நிலம் இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதற்குப்பின் உள்ள மோசடிகள், உழைப்பு சுரண்டல்கள், அடிமைத்தனம், வன்கொடுமை என எல்லாவற்றையும் இயக்குனர் புட்டு புட்டு வைக்கிறார்

இவ்வளவு நாட்களாக நாம் யாரை நல்லவர்களாக நினைத்திருந்தோமோ அவர்களுடைய  இருட்டு பக்கங்களை அறியும் போது நமக்குப் பேரதிர்ச்சியாகத்  தான் இருக்கிறது. தேசிய கட்சியிலேயே இருந்துகொண்டு தன்னுடைய அரசியல் பலம், செல்வாக்கு இவை மூலம் ஒரு தலைமுறையையே சுரண்டி வாழ்ந்த பலர் நாம் நாட்டில் உண்டு. அதுவும் சுதந்திரத்துக்குப் பிறகு நடந்தது தான் கொடுமை. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒட்டு அரசியலுக்காக சில பிரதான கட்சிகளும் அமைதி காத்ததுதான் அவலத்தின் உச்சம். இந்த படத்தை பார்க்கும்போது 'கீழ்வெண்மணிப் படுகொலைகள்' எப்படி நடந்தது என்பதை ஊகித்துக்கொள்ளலாம். பாதகத்தை நிகழ்த்தியவர்கள் கடைசி வரை பிடிபடாமல் போனது ஒன்றும் ஆச்சரியமில்லை.

இந்த கொடுமை எல்லாம் நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில் வட தமிழகத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சென்னையில் பல ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தினார்கள். எதற்காக ? தொழிற்கூடங்களை அமைக்க.  அவர்கள் எண்ணம் போலவே பல்வேறு தொழிற்கூடங்களை அமைத்துப் பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்கள். இன்று அந்த குழுமத்தின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிக்கு மேல்.

சென்னை சுற்றிப் பல தொழிற்சாலைகள், அந்த குழுமத்திற்கு உண்டு. பள்ளிக்கூடங்கள், தொண்டு மருத்துவமனை, தொழிற்பயிற்சி கல்லூரி என ஆல்போல் தழைத்தோங்கி நிற்கிறது.
 
சனி, ஞாயிறு இரண்டு நாள் நடந்த விழாவில் ஏகப்பட்ட குறும்படங்களைத் திரையிட்டாலும் எனக்குப் பிடித்த மேற்சொன்ன இரண்டு படங்கள் உங்களுடன் பகிர்ந்தேன்.


நன்றி: தி இந்து தமிழ் பதிப்பகம் வெளியிட்ட 'அண்ணா - மாபெரும் தமிழ் கனவு' புத்தகத்திலிருந்து..


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி