Wonderful Shopping@Amazon

Wednesday, 4 March 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-49


எம் எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா கர்நாடக இசைவானில் ஒரு முறை நிகழ்ந்த மாயாஜாலம்.
 
தினமும் எம்எஸ் அம்மா பாடல்களுடன் என் காலைப் பொழுது தொடங்கும், சில வருடங்காக தொடர்வதில் சந்தோசம்.

"ஜோ அச்சுதானந்த.....ஜோ ஜோ முகுந்தா..........."

காபி ராகத்தில் எம்எஸ் அம்மா பாடிய இந்த அன்னமாச்சார்யா கீர்த்தனையைப் பற்றி தினமணி தீபாவளி மலரில் படித்ததாக ஞாபகம். செய்தி என்னவென்றால் ஆந்திர / தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டிலும், பிறந்த குழந்தையை தொட்டிலிலிடும் வைபவத்தில் பெண்கள் இந்த அன்னமாச்சார்யா கீர்த்தனை பாடலை பாடுவார்களாம். வெகு காலமாகப் புழக்கத்தில் உள்ள கீர்த்தனை.  உடனே இந்த பாடலை பதிவிறக்கம் செய்து கேட்க ஆரம்பித்தேன். கேட்கக் கேட்க பிடிக்கும் பாடல். சாதாரணமாகத் தொடங்கும் பாடல். "முனகிட்ட நாடாரா ...." என்ற வரியில் வரும் ஆலாபனை மெல்ல நம்மை வசீகரிக்கும்.

ஹனுமான் சாலிசா

எக்ஸ்பிரஸில் சேர்ந்த புதிதில் எனக்கு முன்பிருந்த ஊழியர் கணினியில் விட்டுச் சென்ற பக்தி பாடல்கள் தொகுப்பிலிருந்த பாடல்.  அதற்கு முன்பு இந்த கீர்த்தனையைக் கேள்விப்பட்டது இல்லை. நேரமும் காலமும் வரும் போது எல்லாம் நமக்குக் கிடைக்கும் என்பார்கள் அது போல..! சில வருடங்களாக இந்த கீர்த்தனை தினமும் கேட்கிறேன். சாதாரணமாக ஆரம்பிக்கும் பாடல் மெல்ல வேகமெடுக்கும். இடையில் "ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான.." என்ற வரி வரும்போது மனதிற்குத் தெளிவும், தைரியமும் கொடுக்கிறது.

விஷ்ணுசஹஸ்ரநாமம் கீர்த்தனை/பாடல்/ பாசுரம் : பல பேர் பாடியிருந்தாலும் எம்எஸ் அம்மா பாடியதை தான் திருப்பதி திருமலை கோவிலில் அதிகாலை ஒளிபரப்பப்படுகிறது. காலை வேளையில் என் வீட்டிலும் தினமும் ஒலிக்கவிடுகிறேன். போக வர, போக வர..சில வார்த்தைகள் காதில் விழும். நானும் அப்படியே அந்த வரிகளுடன் சேர்ந்து 'ஹம்' செய்வதுண்டு.  அடுத்தடுத்த வரிகளுக்கு மனது தாவும்.

எனது அலுவலக நண்பர் குடியிருக்கும் குரோம்பேட்டையில் உள்ள ராமர் கோயிலில் வருடந்தோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாள் முழுதும் விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெறுகிறது. ஒவ்வொரு முறை முயற்சி செய்தும் போகமுடியவில்லை. இந்த வருடம் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.

மதுரையில் பிறந்த எம்எஸ் அம்மாவுக்குத் திருப்பதி திருமலை தேவஸ்தானம் கீழ் திருப்பதி பூரணகும்ப வாயிலில் சிலை நிறுவிப் பராமரித்து வருகிறது. பெங்களூருவில் எம்எஸ் அம்மா அவர்களுக்குச் சிலை உள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் எம்எஸ் அம்மா அவர்களுக்குச் சிலை இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா ?

எம்எஸ் அம்மா எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும், மேற்சொன்ன இரண்டு பாடல்கள் என் மனதுக்குப் பிடித்தவை.  மேலும் இந்த பாடல் யாருக்குத்தான் பிடிக்காது, நீங்களும் கேளுங்கள்:
 


நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-48


'சிட்டுக்குருவி' (1978) - சுருளிராஜன் நகைச்சுவை

மிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் மறைந்த நடிகர் சுருளிராஜன் அவர்களுக்கு ஓர் இடம் உண்டு. அவ்வளவு எளிதில் கடந்து விடமுடியாத நகைச்சுவை ஆளுமை. 'முரட்டுக்காளை' படம் ரஜினி படமாக இருந்தாலும் சுருளிராஜனைச் சுற்றியே கதை நடக்கும். அந்த கர கர வெண்கல குரல் திரையில் கேட்டாலே ரசிகர்களுக்கு உற்சாகம் பிறக்கும். கஞ்சர்களின் சங்கத்தலைவன் நமது சுருளிராஜன் தான். எப்படி, எப்படி எல்லாம் கஞ்சத்தனம் செய்யவேண்டும் என்று 'மாந்தோப்பு கிளியே' படத்தில் பாடமே நடத்துவார். இயக்குநர் திலகம் கே எஸ் கோபாலகிருஷணன் இயக்கிய 'ஆதிபராசக்தி' படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை பகுதி எனக்குப் பிடிக்கும். 

நகைச்சுவை நடிகர்களுக்குக் குரலும் உடல்மொழியும் தான் பலம், இவை இரண்டுமே வாய்க்கப்பெற்ற நடிகர் சுருளிராஜன் அவர்கள்.  ஒரு வேளை  குடிப்பழக்கத்துக்கு அடிமையாகாமலிருந்திருந்தால், அவருடைய நகைச்சுவை ராஜாங்கம் இன்னும் தொடர்ந்திருக்கும். அவர் ஏற்காத வேடங்களே இல்லை எனலாம். இவர் போன்ற நடிகர் இனி பிறக்கப்போவதும் இல்லை, இவர் நிகழ்த்திய மாயாஜாலத்தை. இனி எவரும் நிகழ்த்தப்போவதும் இல்லை.

"யக்கோ....யக்கோ....யக்கோ".... என்று அவர் விளிக்கும் அந்த தோரணையை 'சிட்டுக்குருவி' படத்தில் சுருளிராஜன்-மனோரமா இணை நகைசுவை காட்சியில் கண்டு ரசியுங்கள்:

நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-47

மன்னன்(1992)
கிளைமாக்ஸ் உடை

லைவர் முதல் காட்சியில் தோன்றும் அந்த நிமிடம் உடலில் மின்சார பாய்ந்தது போல் இருக்கும். குறைந்தபட்சம் தலைவர் படத்தை முதல் வாரத்தில் பார்த்துவிடுவதுண்டு. 'மாப்பிள்ளை' வந்த புதிதில் தலைவர் இறுதிக்காட்சி  உடையுடன் தோன்றும் மிகப்பெரிய Blow-up படத்தை வீட்டில் ஒட்டி வைத்திருந்தேன். 'மாப்பிள்ளை' பட ஆரம்பத்தில் தலைவர் வித்தியாசமான ஒப்பனையில் தோன்றுவார். எனக்குத் தெரிந்து தலைவரின் அதிகபட்ச ஒப்பனை-மாற்றமே அது தான். அதில் பிரேக்-டான்ஸ். பாடல் ஒன்று வரும் தலைவரும்-அமலாவும் ஜோராக ஆடியிருப்பார்கள்.  அப்போது அது மிகப்பெரிய Sensation.

என்னடா இது 'மன்னன்' படத்தைப் பற்றிச் சொல்லாமல்  'மாப்பிள்ளை' படத்தைப் பற்றி சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியவுடன். நானும் நண்பனும் சேர்ந்து சென்னை அண்ணாசாலை சாந்தி திரையரங்கில் படம் பார்த்தது இன்னும் பசுமையாக நினைவில்.

சாதாரண கதையை எப்படி சுவாரஸ்யமாக எப்படி எடுக்கவேண்டும் என்பதை இயக்குநர் பி வாசு (He is the Best Craftsman in Tamil Film Industry) அவர்களிடமிருந்து இயக்குநர் முருகதாஸ் போன்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.  தொய்வே இல்லாமல் நகரும் கதை, கவுண்டமணி நகைச்சுவை, ராஜா சாரின் பாடல்கள் என அமர்க்களமாக எடுத்திருப்பார் இயக்குநர் பி வாசு. முக்கியமாக ராஜா சாரின் பின்னணி இசை படத்தின் டெம்போவை ஏற்றும்.  பாடகர் யேசுதாஸ் பாடிய அம்மா பாடலுக்கு இணையான இன்னொரு பாடல் இன்று வரை வர காணோம்.  அந்த பாடலை கேட்போம் வாருங்கள்:
 

நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-46

பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்

'பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்' இசைக் குழு பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை, இசையை விரும்பும் எல்லோர்க்கும் தெரியும், அவர்கள் யார் என்று.

முன்பு ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்தபோது, நண்பர்கள் குழு எல்லோரும் சேர்ந்து மகாபலிபுரம் கடற்கரை சென்றோம், அப்போது ஒரு நண்பர் அறிமுகப்படுத்திய பாடல் தான் இது.  பொதுவாக மேற்கத்தியப் பாடல்கள் எளிதில் புரியாது, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருக்கும் என்று நினைத்திருந்தபோது, இந்த பாடல் என்னை என்னமோ செய்தது.  சோகம், இழப்பு, பேரிழப்பு எல்லா மனிதருக்கும் ஒன்று தான். அதை அழகாக வெளிப்படுத்தும் பாடல். மேலும், இந்த பாடல் இன்றும் அதிக அளவில் ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகிறது. பேஸ் கிட்டார் இசையுடன் ஆரம்பிக்கும் பாடல், மெல்ல கோரஸ் உடன் எழும்பி, சோகத்தை நம்முள் கடத்தும்.  மேற்கத்திய இசை பற்றி எனக்கும் தெரியாது, ஆனால் இந்த பாடல் எனக்குப் பிடிக்கும்.  கீழே உள்ள பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்கள்:



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     

எள் அடையும் ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலும்

எள்ளு அடை

தட்டை, ஓட்டவடை, ராகி அடை, முருங்கை கீரை அடை, என எத்தனையோ அடை வகைகளை நீங்கள் சாப்பிட்டிருக்கலாம். மொறுமொறு எள் அடை சாப்பிட்டிருக்கிறீர்களா?

வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்க வளாகம் வெளியே உள்ள தேநீர்க் கடையில் விற்கப்படும் பெரிய அளவு வெங்காய சமோசா (இப்போது கோஸ் stuffing) பிரபலம், ஒரு சமோசா ஐந்து ரூபாயிலிருந்து ஏழு ரூபாய்-ஆகி, பின்பு இப்போது  பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் எனக்கு அங்கு விற்கப்படும் எள் அடை நிரம்பப் பிடிக்கும். ஒரு எள் அடை ரூபாய் 10/- நல்ல மொறு மொறுவென்று, ஒரு வடிவமே இல்லாமல், வாயில் வைத்து ஒரு கடி கடித்தால் அளவான இனிப்பு, காரம் நம் நாக்கை பதம் பார்க்கும். இன்னொரு எள் அடை வாங்கத் தோன்றும். இப்படியே.. மூன்று எள் அடை நமக்கே தெரியாமல் சாப்பிட்டிருப்போம், ஒரு டீயை உள்ளே விட்டு, எள் அடையை வீட்டுக்கு பார்சல் வாங்கியவுடன், அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்.

ஸ்ரீ வல்லப விநாயகர் கோவில்

ஸ்ரீ வல்லப விநாயகர் கோவில்
இக்கோயிலை எனக்கு ஒரு நண்பர் அறிமுகப்படுத்தினார். சென்னையில் எத்தனையோ விநாயகர் கோயில்கள் இருக்கையில், வில்லிவாக்கம் அருகே உள்ள ஸ்ரீ வல்லப விநாயகர் கோயில் சாந்நித்யம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மாதம் தோறும் வரும் தேய்பிறை சங்கட சதுர்த்தி அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  சென்னையின் பல பாகங்களிருந்தும் மக்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சிறப்பு என்னவென்றால் நமது கோரிக்கையை வைத்து, கோவிலில் விற்கப்படும் மட்டை தேங்காயைக் கட்ட வேண்டும், ஒவ்வொரு மாதமும் சங்கட சதுர்த்தி அன்று நம்மிடம் உள்ள டோக்கனை காண்பித்து, கட்டிய தேங்காயை எடுத்து அர்ச்சனை செய்யவேண்டும்.  பின்பு மீண்டும் புதிதாக மட்டை தேங்காய் வாங்கி கட்ட வேண்டும், நமது கோரிக்கை நிறைவேறும் வரை. கோயில் முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டை தேங்காய் கட்டிவைத்திருக்கிறார்கள்.

நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் ஸ்ரீ வல்லப விநாயகர் கோயிலுக்குச் சென்று, வரும் போது வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்க வளாக வெளியில் உள்ள தேநீர் கடையில் விற்கும் எள் அடையைச் சுவைத்துவிட்டு வாருங்கள்.


நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி