Wonderful Shopping@Amazon

Wednesday, 31 July 2019

நண்பர்கள் (1991)


 
சமீபத்தில் நாகேஷ் உற்சாகமாகப் பாடும் 'நண்பர்கள்' (1991.) படத்தில் வரும் "இந்த காதல் உலகம் இருக்கும் வரை வாழும் தெய்வீகம்.." யுடியூப்பில் கேட்டேன்.  நல்ல பாடல்.  1991. ஆம்  ஆண்டு கோடை விடுமுறையில் பார்த்த படம்.  பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வந்து வெற்றிகரமாக ஓடிய படம். சென்னையில் ஜெயப்பிரதா, ராஜ் திரையரங்கில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம்.

நகைச்சுவை, பாடல்கள் எனக் கலகலப்பாக நகரும் அதே பணக்கார வீட்டுப் பெண்ணை ஏழை பையன் காதலிக்கும் (நேர்கோட்டில் பயணிக்கும்) கதை தான். முடிவில் சுபம்.  மம்தா குல்கர்னி தமிழில் அறிமுகமான முதல் படம் (பிறகு இந்தியில் புகழ் பெற்றார்).  இதில் கதாநாயகனாக நடித்த நீரஜ், அடுத்து ஷோபா இயக்கத்தில் "இன்னிசை மழை" என்ற படத்திலும் நடித்தார்.  அதற்குப் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை?

இதோ அந்த பாட்டு, கேட்டு மகிழுங்கள்!
















குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி




Friday, 26 July 2019

நஞ்சில்லா உணவு - ஒரு பார்வை

ஞ்சில்லா உணவு என்ற பதம், சொற்றொடர் சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது. நஞ்சில்லா உணவுக் கலாச்சாரத்துக்கு வித்திட்ட அமரர்                 திரு நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு நன்றி.

சிக்கிம் மாநிலம் நூறு சதவீதம் இயற்கை விவசாயம் கொண்ட மாநிலமாக 19.01.2016 அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் இயற்கை விவசாயம் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்று நம்புவோம்.

முதலில் நம் வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் கை வைக்கவேண்டும். அதில் உள்ள சிந்தடிக் மசாலா பொருட்களை நீக்க வேண்டும்.

நாங்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரே வரிசையில் நான்கு இயற்கை உணவுப் பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளது. ஒரே பொருள் ஒவ்வொரு இயற்கை அங்காடியிலும் ஒரு விலை. ஆனால் மளிகைக் கடையில் எப்போதும் போலக் கூட்டம் இருக்கத் தான் செய்கிறது.

காலங்காலமாகச் சென்னை பாரிஸ் கந்தசாமி கோயில் தெருவில் உள்ள கடைகளில் சிறுதானியங்கள், மூலிகைகள் மற்றும் நாட்டு மருந்து பொருட்கள் கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது.

சிறுதானியங்கள், இன்ன பிற வஸ்துக்கள் சாப்பிட்டால் மட்டும் உடல் ஆரோக்கியம் வந்துவிடப்போவதில்லை. ஏற்கனவே நம் உடம்பு நஞ்சாக்கி வைத்திருக்கிறோம். உடலில் உள்ள நஞ்சை முதலில் நீக்க வேண்டும். எப்படிச் சாத்தியம் ? பழைய வழக்கத்தை நோக்கி நகர வேண்டும். இதோ எளிய வழிகள்:
  • கேழ்வரகு களியிலிருந்து தொடங்க வேண்டும், வாரம் இரண்டு முறை கேழ்வரகு களி சேர்த்துக் கொள்ளவேண்டும் கூடத் தொட்டுக்கொள்ள (மட்டன்) குழம்பு அல்லது வேர்க்கடலை சட்னி. 
  • காய்கனிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
  • ஆறு மணி நேரம் உறக்கம் கட்டாயம்.
  • வாரந்தோறும் சனிக்கிழமை நல்லெண்ணெய் குளியல்.
  • ஆறு மாதத்திற்கொரு முறை பேதி மருந்து சாப்பிட வேண்டும்.
  • காலை அல்லது மாலை நடைப் பயிற்சி அல்லது யோகா உடற்பயிற்சி.
  • வெளிநாட்டுத் துரித உணவுகள் மற்றும் குளிர் பானங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
  • வாரம் ஒரு நாள் உண்ணா நோன்பு அல்லது திரவ உணவை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வாழைப்பழத்தை உதாசினப்படுத்தாமல் நிறையச் சேர்த்துக்கொள்வது.
  • அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழவகைகளை உட்கொள்வது.
  • வாரம் ஒரு நாள் கைப்பேசி உபயோகப்படுத்தாமல் இருப்பது.
  • மூன்று மாதத்திற்கொரு முறை குறும்பயணம் (100 கிலோமீட்டர் தொலைவு) மேற்கொள்வது.
மேலே சொன்னவற்றை எதுவும் செய்யாமல் நானும் இயற்கை உணவு சாப்பிடுகிறேன் பேர்வழி என்று சாப்பிட்டு, வெளிநாட்டுத் துரித உணவு வகைகளையும் / குளிர் பானங்களை ஒரு பிடி பிடித்தால், என்னாகும் உடம்பு.

எல்லாவற்றுக்கும் மேல் கட்டுப்பாடும், வைராக்கியமும் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் நலமாக இருக்கும்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி

Thursday, 25 July 2019

மரபு கட்டுமான வீடு - ஒரு பார்வை - பகுதி -2

மண் வீடு
ரபு கட்டுமான வீடு தான் எனது கனவு.  அதற்கான தேடுதலில் இறங்கியபோது. எனக்குக் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

750 சதுர அடியில் இரண்டு படுக்கையறை, பெரிய கூடம், சமையலறை, பூஜையறை  மற்றும் வாகன நிறுத்தத்துடன் கூடிய முற்றம். இது தான் எனது வீட்டுக் கட்டுமானம் திட்டம்.

மரபு கட்டுமான பொருட்களான மண்னழுத்த கற்கள், செம்மண், பின்னிப்பூட்டல் கற்கள், (Interlocking Bricks) லேட்டரைட் (பாறை) மண் மற்றும் லேட்டரைட் கற்கள் மேலும் சில பொருட்கள் சென்னையில் கிடைக்ககாணோம். வெளி மாவட்டங்கள், பெங்களூர் மற்றும் கேரளா நகரங்களிலிருந்து தருவிக்க வேண்டும். போக்குவரத்து செலவுகள் தனி.

லேட்டரைட் கற்கள் உபயோகப்படுத்தி கட்டப்பட்ட வீடு
சென்னையில் சாதாரண வீடு கட்டுமான செலவு சதுர அடிக்கு ரூபாய் 2500/- முதல் 3000/- வரை ஆகிறது. மரபு கட்டுமான செலவு ரூபாய் 1500/- முதல்  தொடங்குகிறது. சிலர் கட்டுமானம் வேலை மட்டுமே செய்கிறார்கள்,ஒரு நிறுவனம் (சதுர அடிக்கு ரூபாய் 2200/- முதல் 2500/-) மொத்த வேலையையும் முடித்து வீட்டுச் சாவியைக் கொடுப்பதாய் சொல்கிறார்கள்.

புதியதலைமுறை மற்றும் மலையாள மனோரமாவில் ஒளிபரப்பாகும் வீடு நிகழ்ச்சியில் குறைத்த செலவில் (வெறும் ரூபாய் ஒன்பது முதல் பத்து லட்சம் வரை) அழகாக, நேர்த்தியாக கட்டப்பட்ட வீடுகள் காட்டப்படுகிறது.  அந்த வீடுகளைக் கட்டிய கட்டுநரை அணுகினால். கேரளாவுக்கு வெளியே வேலை செய்ய உத்தேசமில்லை என்று பதில் வருகிறது.  சில நிறுவனங்கள் மேற்பார்வை மட்டுமே செய்யும் மொத்த செலவில் ஆறு சதவீத கட்டணம் செலுத்தவேண்டும்.

COSTFORD: The Centre of Science and Technology for Rural Development: லார்ரி பேக்கர் கட்டுமான முறைகளைப் பின்பற்றும் நிறுவனம். கேரளா முழுதும் இவர்களுக்குக் கிளை அலுவலகங்கள் உள்ளது. இவர்களுடைய வீட்டுத் திட்டங்கள் அத்தனையும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்.  அத்தனை நேர்த்தி, அத்தனை அழகு.. என்ன சொல்ல...!

COSTFORD-ஐ தொடர்புகொண்டு பேசியபோது அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "நீங்கள் வீடு கட்டும் பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கிடைக்கும் கட்டுமான பொருட்கள் என்ன? - இவர்கள் அல்லவோ உண்மையான லார்ரி பேக்கர் சிஷ்யர்கள்.  சதுர அடிக்கு ரூபாய் 1500/- (கேரளா) மற்றும் சதுர அடிக்கு ரூபாய் 1750/- (கேரளாவுக்கு வெளியே) கட்டணம்.

சரி, மரபு கட்டுமான கட்டுநர்களைத் தேடி கேரளாவுக்குத் தான் சொல்ல வேண்டுமா என்ன? தேவையில்லை இருக்கவே இருக்கிறது.... விழுப்புரம் அருகே உள்ள ஆரோவில் மரபு கட்டுமான நிறுவனம். கட்டட வடிவமைப்பாளர் குழு, வரைபட வசதி, தச்சு வேலை, மின் வேலை, பிளம்பிங் போன்ற வேலைகளுக்கு ஆட்கள் பலம், மண்னழுத்த செங்கல் பட்டறை மேலும் பல வசதிகள் இவர்களிடம் உள்ளது. வீடு கட்ட சதுர அடிக்கு ரூபாய் 2200/- முதல் 2600/- வரை கட்டணம். இவர்களுடைய வீட்டுத் திட்டங்களை இணையதள முகவரி: Auroyali.com அறியலாம்.

ஆரோவில்லில் மரபு கட்டுமான தொழினுட்பங்களை கற்று எத்தனையோ பேர் இந்தியா முழுதும் விரவி இருக்கிறார்கள். ஆரோவில்லில் பணிபுரிந்து, வெளியே வந்து தனியாக Auroshivas Good Earth Institute (Katral Koodam) என்ற பெயரில் மரபு கட்டுமான வீடுகளைக் கட்டி தரும் கட்டுநர்  திரு அய்யனார் சிவா அவர்கள்.  வீடு கட்ட சதுர அடிக்கு ரூபாய் 1800/- முதல் 2000/- வரை கட்டணம். பல பலக்கும் சிகப்பு ஆக்சைடு தரை இவரது ஸ்பெஷலாலிட்டி. இதுவரை 700 மேற்பட்ட வீடு மற்றும் பல்வேறு ப்ரொஜெக்ட்கள் மேற்கொண்டிருக்கிறார் என்று அவரது இணையதளம் auroshivasearthbuilders.com தெரிவிக்கிறது.

ஈரோட்டை சேர்ந்த திரு ஹரி பிரசாத் என்ற வளர்த்து வரும் மரபு கட்டட பொறியாளர் மரபு வீடுகளைக் கட்டி தருகிறார்.  லார்ரி பேக்கர் கட்டுமான முறைகளைப் பின்பற்றுபவர். Hari Prasath என்ற முகநூலில் அவருடைய வீட்டுத் திட்டங்களைக் காணலாம்.

சத்யபிரகாஷ் வாரணாசி என்ற என்ற மூத்த கட்டிடக்கலை அறிஞர், தீவிர லார்ரி பேக்கர் ஆதரவாளர். லார்ரி பேக்கர் மரபு கட்டுமானம் பற்றிய பல கட்டுரைகளைப் பிரபல ஆங்கிலப் பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார்.  அவருடைய Sathya Consultants என்ற நிறுவனம் பெங்களூரு மற்றும் பல பகுதிகளில் வீட்டுத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது.

பசுமை கட்டுமானம் அல்லது மரபு கட்டுமானம் என்றால் ஏதோ புதிதாகத் தோன்றியிருப்பதாக நினைக்க வேண்டாம் ஏற்கனவே நம்மூரில் பின்பற்றிய கட்டுமான முறை தான். (உதாரணம்: பழங்காலத்துக் கிராமத்து வீடு, பழங்கால கோயில் கட்டுமானம்) காலசூழல் மாற்றத்திற்கேற்ப வழக்கொழிந்து இப்போது மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கிறது.

மரபு கட்டுமானம் என்றவுடன் குறைந்த செலவில் வீடு கட்டலாம் என்றபோதிலும், அதற்குரிய மரபுசார் கட்டிடப் பொருட்கள் நம் அருகில் கிடைக்க வேண்டும்.  தேர்வு செய்யும் தொழினுட்பத்தைப் பொறுத்து கட்டுமான செலவு கூடலாம் குறையலாம்.

மிகுந்த ரசனையும், பழங்கால வீட்டில் வளர்ந்து தொலைந்துபோன நாட்களை மீட்க நினைப்பவர்கள், பிள்ளைகள் ரசனையான சூழ்நிலையில் வளர வேண்டும், வெளிச்சம், காற்றோட்டமான வீடு, வெறும் கட்டாந்தரையில் தரையில் படுத்துத் தூங்கவேண்டும், தனி பூஜையறை அதில் ஆத்மார்த்தமான பிரார்த்தனை - என இதில் ஏதாவது ஒன்று உங்களுக்குத் தோன்றினால் - நீங்கள் மரபு வீட்டிற்குச் சொந்தக்காரர் ஆகலாம்.

மரபு கட்டுமான வீடு என்பது ஒரு குட்டி அரண்மனை போல.. அதன் உரிமையாளரான நீங்கள் தான் ராஜா!

மரபு கட்டுமான வீடு பற்றிய அடிப்படை புரிதலுக்கு கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் :


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி

Tuesday, 23 July 2019

காஞ்சி அத்தி வரதர் தரிசனம்


அனைத்து சாலைகளும் காஞ்சி நகரை நோக்கி..........

"அத்தி வரதர் தரிசனம் செய்தீர்களா?"
"எவ்வளவு நேரம் ஆயிற்று?"
"நீங்க எப்போ போறீங்க.."
"நான் இரண்டாவது நாளே போயிட்டு வந்துட்டேன்.."
"அத்தி வரதர் தரிசனம் செய்தோ.." - கொச்சியில் உள்ள அலுவலக ஊழியர் கேட்கும் கேள்வி.

இந்த வருடத்தின் பேசுபொருள்  அத்தி வரதர் தரிசனம் தான்.


குழுவாகச் செல்ல முயன்று யாரும் வராமல் போகவே, நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து கிளம்பினோம். காஞ்சிபுரத்தில் உள்ள எங்கள் உறவின்முறை திருமண மண்டபத்தில் தங்கினோம்.

அதிகாலை வெகு சீக்கிரம் எழுந்து கிளம்பி நான்கு மணிக்கு வரிசையில் நின்றோம். ஐந்து மணி வாக்கில் வரிசை மெல்ல நகர ஆரம்பித்தது, அதற்குள் மழை கொட்டி தீர்த்தது, மழையையும் பொருட்படுத்தாது மக்கள் வரிசை நகர்ந்தது. பொழுது விடிய ஆரம்பித்தது.

மாட வீதியில் உள்ள வரிசைக்குச் செல்ல காலை ஏழு மணி பிடித்தது. காரணமே இல்லாமல் ஒரு மணி நேரம் வரிசை நிறுத்தப்பட்டது. பிறகு மெல்ல, மெல்ல நகர்ந்து கோவில் கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால்..உள்ளே இருபது சுற்று.. சற்று அதிர்ச்சி தான்... இருந்தாலும் ..வந்தாயிற்று.. வரதரை இன்னும் ஒரு மணி நேரத்தில் கண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. கொண்டு சென்ற பிஸ்கட் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் தீர்ந்தது.

தென்னிந்திய மாநிலத்தைச் சேர்ந்த மக்களும் எங்களுடன் வரிசையில் நிற்பதைப் பார்க்கமுடிந்தது.  முதியோர் மற்றும் கைக்குழந்தையுடன் வருபவர்களுக்குத் தனி வரிசை இருந்தது. போதிய அறிவிப்பு இல்லாததால், அவர்களும் பொது வரிசையில் நின்றார்கள்.

மீண்டும் ஒருமுறை வரிசை நிறுத்தப்பட்டது. அப்படி நகர்ந்து, நகர்ந்து ஒரு வழியாக 11.30.மணிக்குத் தரிசனம் முடிந்து வெளியே வந்தோம்.

அங்கிருந்து ஆட்டோ பிடித்துத் திருமண மண்டபம் வர ஆளுக்கு ரூபாய் ஐம்பது, நாங்கள் அரசு பேருந்தில் 10 ரூபாய் செலவில் வந்து சேர்ந்தோம்.

பசி, சோர்வு வேறு. அடக்கி வைத்திருந்த இயற்கை கடன்களை முடித்துவிட்டு, நேராக உணவருந்தச் சென்றோம்.

ஒருமணி நேரம் சிறு தூக்கம். மாலை 3.30. மணிக்கு அரக்கோணம் வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

வரிசையில் பலமணி நேரம் நின்ற தாக்கம் இரண்டு நாள் வரை இருந்தது. நமக்கே இப்படி என்றால்.,. நம் பிள்ளைகளுக்கு?

1979. ஆண்டுச் சிறுவனான என்னைத் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றதாக அம்மா சொன்னாள்.  இப்போது நினைவு தெரிந்து இரண்டாவது முறை.

சரி அத்தி வரதர் தரிசனம் காண்பதற்கு வரும் மக்கள் ஏன் தள்ளு முள்ளிகளில் சிக்குகிறார்கள்?

மாவட்ட நிர்வாகம் போதிய வசதி செய்யவில்லை, இத்தியாதி இத்தியாதி பல காரணங்கள் சொன்னாலும். பின்னல் உளவியல் காரணமும் உண்டு.

நம் மக்கள் Emotion லாக Connect ஆகி விட்டார்கள். அடுத்தமுறை நாம் உயிரோடு இருப்போமோ இல்லையோ? நம் பிள்ளைகளுக்கு இவ்வாய்ப்பை வழங்கவேண்டும். வாய்ப்பை நழுவவிடக்கூடாது போன்ற மன அழுத்தங்களுக்கு ஆளானதால், மக்கள் பெருங்கூட்டமெனத் திரளுகிறார்கள். கூடவே சமூகவலைதங்களில் இது பற்றிய செய்திகள் ஒரு வருடம் முன்பே
வர ஆரம்பித்துவிட்டது.

ஒரு விஷயத்தை நாம் Emotion லாக அணுகும்போது இரண்டு விளைவுகள் ஏற்படும் ஓன்று வெற்றி அல்லது தாமத வெற்றி.

சாயனக் கோலத்தைக் கண்டது போலவே நின்ற கோலத்தையும்  காணவேண்டும் என்று மின்சாரம் (சம்சாரம்) வற்புறுத்துகிறாள். பார்ப்போம்...!

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி