Wonderful Shopping@Amazon

Showing posts with label #லாரிபேக்கர் #மரபு ட்டுமானம் #மண்வீடு #லேட்டரைட்கற்கள் #COSTFORD. Show all posts
Showing posts with label #லாரிபேக்கர் #மரபு ட்டுமானம் #மண்வீடு #லேட்டரைட்கற்கள் #COSTFORD. Show all posts

Thursday, 25 July 2019

மரபு கட்டுமான வீடு - ஒரு பார்வை - பகுதி -2

மண் வீடு
ரபு கட்டுமான வீடு தான் எனது கனவு.  அதற்கான தேடுதலில் இறங்கியபோது. எனக்குக் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

750 சதுர அடியில் இரண்டு படுக்கையறை, பெரிய கூடம், சமையலறை, பூஜையறை  மற்றும் வாகன நிறுத்தத்துடன் கூடிய முற்றம். இது தான் எனது வீட்டுக் கட்டுமானம் திட்டம்.

மரபு கட்டுமான பொருட்களான மண்னழுத்த கற்கள், செம்மண், பின்னிப்பூட்டல் கற்கள், (Interlocking Bricks) லேட்டரைட் (பாறை) மண் மற்றும் லேட்டரைட் கற்கள் மேலும் சில பொருட்கள் சென்னையில் கிடைக்ககாணோம். வெளி மாவட்டங்கள், பெங்களூர் மற்றும் கேரளா நகரங்களிலிருந்து தருவிக்க வேண்டும். போக்குவரத்து செலவுகள் தனி.

லேட்டரைட் கற்கள் உபயோகப்படுத்தி கட்டப்பட்ட வீடு
சென்னையில் சாதாரண வீடு கட்டுமான செலவு சதுர அடிக்கு ரூபாய் 2500/- முதல் 3000/- வரை ஆகிறது. மரபு கட்டுமான செலவு ரூபாய் 1500/- முதல்  தொடங்குகிறது. சிலர் கட்டுமானம் வேலை மட்டுமே செய்கிறார்கள்,ஒரு நிறுவனம் (சதுர அடிக்கு ரூபாய் 2200/- முதல் 2500/-) மொத்த வேலையையும் முடித்து வீட்டுச் சாவியைக் கொடுப்பதாய் சொல்கிறார்கள்.

புதியதலைமுறை மற்றும் மலையாள மனோரமாவில் ஒளிபரப்பாகும் வீடு நிகழ்ச்சியில் குறைத்த செலவில் (வெறும் ரூபாய் ஒன்பது முதல் பத்து லட்சம் வரை) அழகாக, நேர்த்தியாக கட்டப்பட்ட வீடுகள் காட்டப்படுகிறது.  அந்த வீடுகளைக் கட்டிய கட்டுநரை அணுகினால். கேரளாவுக்கு வெளியே வேலை செய்ய உத்தேசமில்லை என்று பதில் வருகிறது.  சில நிறுவனங்கள் மேற்பார்வை மட்டுமே செய்யும் மொத்த செலவில் ஆறு சதவீத கட்டணம் செலுத்தவேண்டும்.

COSTFORD: The Centre of Science and Technology for Rural Development: லார்ரி பேக்கர் கட்டுமான முறைகளைப் பின்பற்றும் நிறுவனம். கேரளா முழுதும் இவர்களுக்குக் கிளை அலுவலகங்கள் உள்ளது. இவர்களுடைய வீட்டுத் திட்டங்கள் அத்தனையும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்.  அத்தனை நேர்த்தி, அத்தனை அழகு.. என்ன சொல்ல...!

COSTFORD-ஐ தொடர்புகொண்டு பேசியபோது அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "நீங்கள் வீடு கட்டும் பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கிடைக்கும் கட்டுமான பொருட்கள் என்ன? - இவர்கள் அல்லவோ உண்மையான லார்ரி பேக்கர் சிஷ்யர்கள்.  சதுர அடிக்கு ரூபாய் 1500/- (கேரளா) மற்றும் சதுர அடிக்கு ரூபாய் 1750/- (கேரளாவுக்கு வெளியே) கட்டணம்.

சரி, மரபு கட்டுமான கட்டுநர்களைத் தேடி கேரளாவுக்குத் தான் சொல்ல வேண்டுமா என்ன? தேவையில்லை இருக்கவே இருக்கிறது.... விழுப்புரம் அருகே உள்ள ஆரோவில் மரபு கட்டுமான நிறுவனம். கட்டட வடிவமைப்பாளர் குழு, வரைபட வசதி, தச்சு வேலை, மின் வேலை, பிளம்பிங் போன்ற வேலைகளுக்கு ஆட்கள் பலம், மண்னழுத்த செங்கல் பட்டறை மேலும் பல வசதிகள் இவர்களிடம் உள்ளது. வீடு கட்ட சதுர அடிக்கு ரூபாய் 2200/- முதல் 2600/- வரை கட்டணம். இவர்களுடைய வீட்டுத் திட்டங்களை இணையதள முகவரி: Auroyali.com அறியலாம்.

ஆரோவில்லில் மரபு கட்டுமான தொழினுட்பங்களை கற்று எத்தனையோ பேர் இந்தியா முழுதும் விரவி இருக்கிறார்கள். ஆரோவில்லில் பணிபுரிந்து, வெளியே வந்து தனியாக Auroshivas Good Earth Institute (Katral Koodam) என்ற பெயரில் மரபு கட்டுமான வீடுகளைக் கட்டி தரும் கட்டுநர்  திரு அய்யனார் சிவா அவர்கள்.  வீடு கட்ட சதுர அடிக்கு ரூபாய் 1800/- முதல் 2000/- வரை கட்டணம். பல பலக்கும் சிகப்பு ஆக்சைடு தரை இவரது ஸ்பெஷலாலிட்டி. இதுவரை 700 மேற்பட்ட வீடு மற்றும் பல்வேறு ப்ரொஜெக்ட்கள் மேற்கொண்டிருக்கிறார் என்று அவரது இணையதளம் auroshivasearthbuilders.com தெரிவிக்கிறது.

ஈரோட்டை சேர்ந்த திரு ஹரி பிரசாத் என்ற வளர்த்து வரும் மரபு கட்டட பொறியாளர் மரபு வீடுகளைக் கட்டி தருகிறார்.  லார்ரி பேக்கர் கட்டுமான முறைகளைப் பின்பற்றுபவர். Hari Prasath என்ற முகநூலில் அவருடைய வீட்டுத் திட்டங்களைக் காணலாம்.

சத்யபிரகாஷ் வாரணாசி என்ற என்ற மூத்த கட்டிடக்கலை அறிஞர், தீவிர லார்ரி பேக்கர் ஆதரவாளர். லார்ரி பேக்கர் மரபு கட்டுமானம் பற்றிய பல கட்டுரைகளைப் பிரபல ஆங்கிலப் பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார்.  அவருடைய Sathya Consultants என்ற நிறுவனம் பெங்களூரு மற்றும் பல பகுதிகளில் வீட்டுத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது.

பசுமை கட்டுமானம் அல்லது மரபு கட்டுமானம் என்றால் ஏதோ புதிதாகத் தோன்றியிருப்பதாக நினைக்க வேண்டாம் ஏற்கனவே நம்மூரில் பின்பற்றிய கட்டுமான முறை தான். (உதாரணம்: பழங்காலத்துக் கிராமத்து வீடு, பழங்கால கோயில் கட்டுமானம்) காலசூழல் மாற்றத்திற்கேற்ப வழக்கொழிந்து இப்போது மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கிறது.

மரபு கட்டுமானம் என்றவுடன் குறைந்த செலவில் வீடு கட்டலாம் என்றபோதிலும், அதற்குரிய மரபுசார் கட்டிடப் பொருட்கள் நம் அருகில் கிடைக்க வேண்டும்.  தேர்வு செய்யும் தொழினுட்பத்தைப் பொறுத்து கட்டுமான செலவு கூடலாம் குறையலாம்.

மிகுந்த ரசனையும், பழங்கால வீட்டில் வளர்ந்து தொலைந்துபோன நாட்களை மீட்க நினைப்பவர்கள், பிள்ளைகள் ரசனையான சூழ்நிலையில் வளர வேண்டும், வெளிச்சம், காற்றோட்டமான வீடு, வெறும் கட்டாந்தரையில் தரையில் படுத்துத் தூங்கவேண்டும், தனி பூஜையறை அதில் ஆத்மார்த்தமான பிரார்த்தனை - என இதில் ஏதாவது ஒன்று உங்களுக்குத் தோன்றினால் - நீங்கள் மரபு வீட்டிற்குச் சொந்தக்காரர் ஆகலாம்.

மரபு கட்டுமான வீடு என்பது ஒரு குட்டி அரண்மனை போல.. அதன் உரிமையாளரான நீங்கள் தான் ராஜா!

மரபு கட்டுமான வீடு பற்றிய அடிப்படை புரிதலுக்கு கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் :


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி