Wonderful Shopping@Amazon

Tuesday, 26 February 2019

பெட்டி கேஷ்

நாம் பணிபுரியும் அலுவலகத்தில் திடீர் செலவுகளை எதிர்கொள்ள ஒரு சிறிய தொகையை கையிருப்பு பணமாக அலுவலர் வைத்திருப்பார். நகலெடுக்க, பூஜை பொருட்கள் வாங்க, மற்றும் சில அன்றாடத் தேவைகளுக்கு இச்சிறிய தொகை பயன்படும். "பெட்டி கேஷ்" என்று கூடச் சொல்லலாம்..

ஒவ்வொரு மாத முடிவிலும் அந்த மாதத்தில் ஏற்பட்ட செலவுகளைக் கணக்கிட்டு, அதற்குண்டான ரசீதுகளை இணைத்து, கணக்குப்பதிவுத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து நடப்பு மாதத்திற்கான தொகையை வாங்கி வைத்துக் கொள்வது ஒரு சிறந்த நடைமுறை.

நானும் கூட இந்த "பெட்டி கேஷ்" பணத்தைக் கையாண்டிருக்கிறேன். அதற்கென்று ஒரு நோட்டுப் புத்தகம் போட்டு, செலவுகளை விவரமாக எழுதி, ரசீதுகளைச் சேகரித்து கணக்குப் பதிவுத்துறை அலுவலகத்தில் சமர்பித்திருக்கிறேன். தொகை சிறியதோ பெரியதோ, பணத்தைக் கவனமாகக் கையாளவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். ரசீதுகளை இணைக்கத் தவறினாலோ அல்லது செலவுகளை எழுத மறந்தாலோ நம்முடைய சொந்த பணத்தைப் போட வேண்டி வரும்.

என் பையனும் அடிக்கடி தன்னுடைய கல்வி செலவுகளுக்கு (நகலெடுக்க, பேனா வாங்க, வகுப்பு தேர்வெழுத பேப்பர் வாங்க) பணம் வேண்டி வந்து நிற்பான்.

அவனுடைய செலவுகளுக்கு நான் மாதம் இருமுறை ஒரு சிறிய தொகையைக் கொடுத்து வருகிறேன். செலவுகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துவைத்து 15 நாட்களுக்கு ஒரு முறை செலவுகளைக் காண்பித்து என்னிடம் கையொப்பம் வாங்கிக் கொள்கிறான். அந்தக் கணக்கை முடித்து அடுத்த 15 நாட்களுக்கு ஒரு சிறிய தொகையைக் கொடுக்கிறேன்

சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல ஒரு சிறந்த பழக்கமாக இருக்கும் என நம்புகிறேன். பணத்தை எப்படிச் செலவு செய்யவேண்டும், எப்படிக் கணக்கு வைக்க வேண்டும், செலவு தலைப்பை எப்படி எழுதவேண்டும், அனாவசிய செலவு எது ? அதைத் தவிர்ப்பது எப்படி? அத்தியாவசிய செலவு எது ? ஒவ்வொரு பைசாவும் எங்கே போகிறது எதற்காகச் செலவாகிறது எனப் பணத்தைப் பற்றிய புரிதல் மற்றும் ஒழுங்கு முறையைக் கொண்டு வர  சிறந்த பயிற்சியாக அமையும்.

இப்போது செலவு கணக்குகளை அதற்கென உள்ள நோட்டுப் புத்தகத்தில் எழுதி கையப்பம் வாங்க என்னிடம் காண்பிக்கிறான்.  சின்ன, சின்னத் திருத்தங்களை அவ்வப்போது சொல்கிறேன். நாளை கல்லூரிக்குச் செல்லும்போதோ அல்லது விடுதியில் தங்கி படிக்கும்போதோ, படித்து முடித்த பின் வேலைக்குப் போகும்போதோ இதைப் பின்பற்றும் போது பணத்தை லகுவாகக் கையாள கற்றுக்கொண்டிருப்பான்.

இப்பொது இன்னும் ஒருபடி மேலே சென்று வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ரசீது வாங்க சொல்லி வலியுறுத்துகிறேன். எந்தக் கடையிலும் கொடுக்க மாட்டார்கள், இருந்தாலும் கேட்கச்சொல்லி இருக்கிறேன், அதையெல்லாம் இணைத்து செலவுகளைக் காண்பிக்கச் சொல்லி இருக்கேன்.

நீங்களும் இத்தகைய நடைமுறையை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.

பெரியவர்களாகி, நாளை சம்பாதித்து நம் கையில் கொடுக்கும்போது நம்மிடம்
கணக்கு கேட்காமல் இருந்தால் சரி தான்...

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

No comments:

Post a Comment