Wonderful Shopping@Amazon

Tuesday 26 February 2019

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் தொலைக்காட்சி



புதிய வரவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் தொலைக்காட்சிப்பெட்டி தான் எங்கள் வீட்டின் இப்போதைய சென்சேஷன்.

நீண்ட நாட்களாக இருந்த பழைய வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி வெறும் ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது (நன்றி:olx.com). கிட்டத்தட்ட 10 வருடம் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன் வண்ண மறைந்து நிறம் மாறியதால், புதிய தொலைக்காட்சிப்பெட்டி வாங்க திட்டமிட்டோம். பிரபல அலைபேசி நிறுவன வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட் தொலைக்காட்சிப்பெட்டி நன்றாகயிருப்பதாக நண்பர் சொன்னார். விலை ரூபாய் 15000/-. ஜனவரி முதல் ஸ்மார்ட் தொலைக்காட்சிப்பெட்டிக்கான சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டதால் விலை ரூபாய் 13999/- விலையில் வாங்கினோம்.  பிராண்ட் ஸ்மார்ட் தொலைக்காட்சிப்பெட்டியில் உள்ள HD தரத்திலான ஒளி ஒலி அமைப்பு மற்றும் பல அம்சங்கள் இதிலும் உண்டு.

இன்று நம் பிள்ளைகளுக்கு கிடைத்த வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை.

நாங்கள் வளர்ந்துவந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச்சில வீட்டில் மட்டுமே தொலைக்காட்சிப்பெட்டி இருக்கும்.

அப்போது எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி இல்லை. ஒளியும் ஒலியும், ஞாயிறன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் மாநில மொழி திரைப்படம், ஞாயிறு மாலை நேர திரைப்படம் என எல்லாம் பக்கத்து வீட்டில் தான் பார்ப்போம்.
சில நாட்கள் கழித்து அப்பா கருப்பு வெள்ளை சாலிடர் தொலைக்காட்சிப்பெட்டி வாங்கினார். கதவெல்லாம் வைத்து அட்டகாசமாக இருக்கும். எங்க வீட்டிற்கு வந்த முதல் தொலைக்காட்சிப்பெட்டி. ரொம்ப வருடம் ஓடியது. திரைப்படம், ஒளியும் ஒலியும், வயலும் வாழ்வும், இளந்தென்றல், மனைமாட்சி, செவ்வாய் இரவு 8 மணி நாடகம், புதன் தோறும் ஒளிபரப்பாகும் சித்ரஹார், சனிக்கிழமை ஒளிபரப்பாகும் இந்தி திரைப்படம்  என விடாமல் பார்ப்போம். அந்த அளவுக்குத் தொலைக்காட்சிப்பெட்டி மீது எங்களுக்கு ஒரு கிரேஸ். பிறகு தொலைக்காட்சி சேனல்கள் பெருகப்பெருக அப்பா ஒரு கலர் டிவி வாங்கினார். அது இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது.

நாங்கள் வாடகை வீட்டில் வசித்தப்போது.  உரிமையாளர் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சிப்பெட்டி இருக்கும். காசுகொடுத்தெல்லாம் ஞாயிறு திரைப்படம் பார்க்க மக்கள் வருவார்கள். ஒளியும் ஒலியும் பார்க்க 25 பைசாவும், ஞாயிறு திரைப்படம் பார்க்க 50 பைசா வசூல் செய்த காலமும் உண்டு.

அதேபோல் நாங்கள் வாசித்த தெருவில் ஒருத்தர் வீட்டில் விசிஆர்-இல் சனிக்கிழமை தோறும் திரைப்படங்கள் போடுவார். நுழைவு கட்டணம் ஐம்பது பைசா.

இப்ப கூட என்ன மாறிவிட்டது.. காசு கொடுத்தால்தான் தொலைக்காட்சி சேனல்களை பார்க்க முடிகிறது.

எங்கள் ஊரில் விசிஆர்-இல் ஒரே இரவில் மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் போடுவார்கள். இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் திரைப்படம் பார்க்கச் செல்வோம். அதற்குக் கட்டணம் ரூபாய் இரண்டு அல்லது மூன்று நினைக்கிறன். ஆனால் மொத்த படமும் பார்க்க முடியாது முதல் படம் முழுசாகப் பார்ப்போம், இரண்டாவது படம் கஷ்டப்பட்டுப் பார்ப்போம், மூன்றாவது படம் தொடங்குவதற்குள் நாங்கள் ஆழ்ந்த நித்திரையில் இருப்போம். விடியற்காலையில் எழுந்து வீட்டுக்கு வருவோம். சிந்துபைரவி, முந்தானை முடிச்சு, கௌரவம், நான் சிகப்பு மனிதன், ஆண் பாவம் இது போல ஏகப்பட்ட படங்கள் இப்படிப் பார்த்தது தான். விலை அதிகம் என்பதாலோ என்னவோ அப்பா விசிஆர் வாங்கவில்லை.

மாமா வீட்டில் விசிஆர் இருந்தது. கோடை விடுமுறை முடியும் வரை தினமும் திரைப்படம் பார்ப்போம். புதிய திரைப்படக் காஸெட் வந்தால் தவறாமல் எங்களுக்கு ஒரு பிரதி அனுப்பிவிடுவார் காஸெட் கடைக்காரர். வாடகை ரூபாய் பத்து.

சரி Back to ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் தொலைக்காட்சிப். தொழிற்நுட்ப வசதிக்கேற்ப தொலைக்காட்சி பார்க்கும் அனுபவம் மாறிவிட்டது.

தொலைக்காட்சிப்பெட்டியை Idot Box என்று சொல்வார்கள். ஆனால் அச்சொல் மாறி நீண்ட நாட்கள் ஆகிறது. Entertainment ஆக இருந்த தொலைக்காட்சி Infotainment ஆக மாறிவிட்டது. டேட்டா கார்டை சொருகினால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் தொலைக்காட்சிப்பெட்டியில் Freeze ஆகியுள்ள ஏகப்பட்ட தொகுப்புகளான இணையநிகழ்ச்சிகள், திரைப்படங்கள், இணையத்தொடர்கள்,  இணையத்தொலைக்காட்சிகள் என எல்லாம் உயிர் பெறுகிறது. உரிய கட்டணம் செலுத்தினால் அனைத்தையும் பார்க்கலாம்.

கைபேசி வழியாகத்தான் இணையும் பழகி வந்தோம் ஆனால் இந்த ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி வந்தது முதல் இணையநிகழ்ச்சிகளை டிவியில் பார்ப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது என்று ஒரு சர்வே சொல்கிறது. மாநில மற்றும் NCRT பாடங்கள், அறிவியல் ப்ராஜெக்ட் செய்முறை, சுயமுன்னேற்ற வீடியோக்கள் போன்று இன்னும், இன்னும் ஏராளமான யூடியூப் வீடியோக்களைப் ஸ்மார்ட் தொலைக்காட்சி வழியாக பார்க்க முடிகிறது.

இந்தாண்டு மத்தியில் JIO DTH மற்றும் JIO GIGA FIBERNET வர இருக்கிறது.  குறைந்த கட்டணத்தில் ஏகப்பட்ட சானல்களை காணும் வசதி ஏற்படும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதனால் ஆண்ட்ராய்ட் டிவியில் இணையதள நிகழ்ச்சிகளை அளவுடன் பார்ப்பது நல்லது ஏனெனில் நம்முடைய நேரத்தை அது கபளீரம் செய்துவிடுகிறது.  தொலைக்காட்சி அழுகாச்சி தொடர்கள் நம்முடைய நேரத்தை வீணடிப்பது போல இதிலும் அந்த அபாயம் உண்டு. அதனால் கவனம் தேவை, அளவாகப் பயன்படுத்தி நிறைவாக வாழுங்கள்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

2 comments:

  1. During black and white tv days I used to watch full programs with family members . Now in android smart TV not able to watch even single program fully because of too much channels and myself not able to get remote with me

    ReplyDelete
  2. Nowadays people watch TV and See mobile

    ReplyDelete