Wonderful Shopping@Amazon

Saturday, 30 March 2019

லூசிபர் (2019)

ஓடியன் படத்திற்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் லூசிபர்.  முரளி கோபியின் கதையில், பிரிதிவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில் வெளியாகும் முதல் படம்.  சரி படத்தைப் பற்றிப் பார்ப்போம்.

மாநில முதலமைச்சரின் மரணம். இரண்டாம் இடத்தில இருக்கும் நபர் (சாய் குமார் ) முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்.   அதைத் தொடர்ந்து வரும் குழப்பங்கள். முதல்வர் குடும்பத்தைச் சூழும் சூழ்ச்சிகள். அதை எப்படி மோகன்லால் முறியடித்து  முடித்துவைக்கிறார் என்பதே மீதி கதை.

நாம் பார்க்கும் அரசியல் முற்றிலும் வேறு. உள்ளே நடக்கும் விஷயங்கள் வேறு. வாரிசு அரசியல், அரசியல் கட்சிகளுக்குப் பணம் எப்படி வருகிறது. அரசியல் தொடர்பில்லாதவர்களின் ஆதிக்கம். ஆளும்கட்சியில் அவர்களுடைய தலையீடு என்பதையெல்லாம் இப்படத்தில் விரிவாகக் காணலாம்.  

லாலேட்டனின் அமைதியான, ஆர்பாட்டமில்லாத நடிப்பு.  வசனம் மொத்தமே இரண்டு பக்கங்களில் அடங்கிவிடும்.  மோகன்லால் நடித்த முந்தய சூப்பர்ஹிட் படங்களான இருபத்தியோராம் நூற்றாண்டு, நரசிம்ஹம் மற்றும் ராவணப்பிரபு வரிசையில் இப்படம் சேரும். இடைவேளைக்கு முந்தய ஆக்ஷன் பிளாக் மற்றும் சிறையில் நடக்கும் ஆக்ஷன் பிளாக் மாஸ்.

முதலைச்சரின் வாரிசாக வரும் டொவினோ தாமஸ், மகளாக மஞ்சுவாரியர், இயக்குனர் பாசில், வில்லன்கள் விவேக் ஓப்ராய் மற்றும் சாய் குமார் என அனைவரும் தம் பங்கினை அழகாகச் செய்திருக்கிறார்கள்.

கடைசி இருபது நிமிடம் இழுவை. தெலுங்கு மசாலா படத்தை நினைவூட்டுகிறது. ஒருவேளை தெலுங்கு ரசிகர்களைத் திருப்திப்படுத்தவோ என்னவோ. பிரிதிவிராஜுக்கு முதல் படம் போன்று தெரியவில்லை. அனுபவம் வாய்ந்த இயக்குனர் இயக்கியது போல இருக்கிறது லூசிபர் படம்.

கொசுறு: லூசிபர் என்ற பெயரில் அமெரிக்க ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் பாண்டஸி- நகைசுவை-திகில் கலந்த நாடக தொடர் 25.1.2016 முதல் மூன்று சீசன்களாக ஒளிபரப்பானது. இப்பொது நெட்பிலிக்ஸ் தொலைக்காட்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகவிருக்கிறது.    

இது மோகன்லால் ரசிகர்ளுக்கான படம்!!!

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Friday, 1 March 2019

சிறந்த யுடியூப் சேனல் (பகுதி - 1)

பதினைந்து வருடங்களுக்கு முன்பு நம்முடைய திறமையை வெளிப்படுத்த எந்த மேடையும் கிடையாது ஆனால் இப்போது யுடியூப் தளம் அதற்கான சிறந்த பொது மேடையாக உள்ளது.  சமீபகாலமாக நான் சில சேனல்களை பார்த்து வருகிறேன். அதில் குறிப்பிடத்தக்க சில சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதை பற்றி இப்போது  பேசுவோம்.

ஒரு யுடியூப்  சேனல் ஆரம்பிப்பதும், அதை தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குறையாமல்,  திறம்பட நடத்துவதும் சாதாரண விஷயம் இல்லை.   நல்ல கமெண்டுகளையும், நாராசமான கமெண்டுகளையும் ஏற்றுக்கொள்ள கூடிய பக்குவம் வேண்டும்.

சரி விசயத்துக்கு வருவோம்........

எபிக் லைப் (Epic Life):
ரோண்டா பைரன் எழுதிய ரகசியம் (The Secret) என்ற புத்தகத்தைக் கண்டிப்பாக முழுசாகப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அப்படிப் படிக்காதவர்கள், பாதியில்  நிறுத்தியவர்கள். எபிக் லைப் சேனலில் தி செகிரெட் புத்தகத்தின் அத்தனை பாடங்களையும் கேட்கலாம் / பார்க்கலாம். நல்ல குரல் வளம். confident - ஆன பேச்சு நம்மை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.

As a Man Thinketh, Think and Grow Rich, Science of Getting Rich போன்ற புகழ் பெற்ற சுயமுன்னேற்ற நூல்களிலுருந்து பல சுவாரஸ்யமான விஷயங்களை எளிய தமிழில் சொல்லும் விதம் அருமை. அதுமட்டுமல்ல சமகாலத் தொழில்முனைவோர் பற்றிய அறிய தகவல்கள், அவர்கள் எப்படி ஜெயித்தார்கள், அவர்களுடைய தினசரி பழக்கவழக்கங்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் பேசுகிறார் இந்த நண்பர்.

யார் இவர்? எப்படி இருப்பார்? எனத் தெரிந்துகொள்ள ஆவலாயிருந்தபோது, இப்பொது நேரிடையாக வீடியோவில் தோன்றி பேசுகிறார் திரு.குமார் அவர்கள். அதிகம் சொன்னால் சுவாரஸ்யமாகப் போய்விடும்.....நீங்களே பார்த்து / கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான ஏதோ ஒன்று நிச்சயம் இந்தச் சேனலில் கிடைக்கும்.

ஸ்பிரிட்யுவல் வேர்ல்ட் (Spiritual World):
நம்முடைய தினசரி பூஜை முறைகளில் செய்யவேண்டிய சின்ன, சின்ன மாற்றங்கள். குலதெய்வ வழிபாட்டின் அவசியம், குலதெய்வ வழிபாட்டு முறைகள், குலதெய்வத்தைக் கண்டுபிடிக்க எளிய வழிகள், குலதெய்வத்தை வீட்டினுள் வரழைக்கச் செய்யவேண்டிய பூஜைகள், விநாயகர் வழிபாட்டு முறைகள், அதன் மேன்மையும், மஹாலக்ஷ்மி பூஜையும், முறைகளும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஏற்ற தொன்மையான படையல் முறைகள், பூஜையில் இடம்பெறும் மஞ்சள், குங்குமம், வாழையிலை, வெற்றிலை, பாக்கு, பழம், பத்தி, சூடம், அவல், பொரிகடலை, அத்தர், வாசனை பூக்கள் போன்றைவைகளின் அவசியம். கடல் குளித்தளின் நன்மை. வியாபாரம் செழிக்கச் செய்யவேண்டிய பூஜைகள், மார்வாடிகள் பின்பற்றும் பூஜை முறைகள். ஒரு ரூபாயை பயன்படுத்தி உங்கள் கஷ்டங்களைத் தீர்ப்பது எப்படி? திருநங்கை கையால் வாங்கும் முனைமுறியாத மஞ்சளின் மகிமை. நாஞ்சில் தமிழில், புரியும்படியாக எடுத்துரைக்கும் பாங்கு அருமை. வேறு பல விஷயங்களும் உண்டு, அதையெல்லாம் விடுத்து, உங்கள் பூஜை முறைகளைச் செம்மைப்படுத்த இந்தச் சேனலை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சரண்யா பிரமோத்:
ஓடிய பெண்மணி அழகான தமிழில் தொகுத்து வழக்கும் ஆரோக்கியமான வட இந்திய, தென் இந்திய சமையல் குறிப்புக்கள் / செய்முறைகள் மற்றும் குழந்தைகள் உடல் எடை கூட, குழந்தைகளுக்குத் தேவையான வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே செய்யக்கூடிய உணவு / கஞ்சி / சிற்றுண்டி வகைகள், எண்ணெய் இல்லாமல் பொறிக்கக்கூடிய சிற்றுண்டி வகைகள், தொப்பையைக் குறைக்க / உடல் இளைக்க எளிய கஷாய வகைகள் செய்முறை விளக்கத்துடன் உள்ள விடியோக்களைப் பார்த்து / கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பாக உடலில் உள்ள கெட்டக்கொழுப்பை கரைக்கக்கூடிய கஷாயத்தைத் தினமும் காலையில் பருகிவருகிறேன். Good Result. நீங்களும் Try பண்ணலாம்.

குழந்தைகளுக்கு பிடித்த/ தேவையான உணவு வகைகளைப் பற்றி அதிக விடியோக்களை  இந்தப் பெண்மணி போட்டுள்ளார். பார்த்து / கேட்டுப் பயன்பெறலாம்.

சாணக்கியன்:
ஈரோட்டைச் சேர்ந்த திருமதி ஜான்சி என்பவர். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் வாய்ப்புகள் பற்றி விலாவரியாக (முதலீடு தொகை, எந்திரம் வாங்கும் செலவு,  எங்கே கிடைக்கும், உற்பத்தி செய்யும் பொருட்களை அழகாகப் பேக் செய்வது எப்படி, சந்தைப்படுத்துவது எப்படிப் போன்ற தகவல்கள்) விளக்கி வீடியோ பதிவு போடுகிறார். அதுமட்டுமல்ல ஆங்கிலம் சரளமாகப் பேச, சரக்கு சேவை வரி என்றால் என்ன, சரக்கு மற்றும் சேவை வரி எண் பெறுவது எப்படி, சரக்கு மற்றும் சேவை வரி தாக்கல் செய்வது எப்படி? - எளிய தமிழில் உதாரண விளக்கத்துடன் சொல்லிக்கொடுக்கிறார்.

இவர் Ask Jhansi என்ற இன்னொரு சேனலில் தென்னிந்திய சமையல், சுவையான ஊறுகாய் வகைகள் பற்றிய செய்முறை மற்றும் பல விடியோக்கள் போட்டுள்ளார் பார்த்து / கேட்டுப் பயன்பெறலாம்,.

ஆலயம் செல்வீர்:
 இதுவும் ஒரு சுவாரஸ்யமான ஆன்மிக சேனல்.  சித்தர்கள் பற்றிய தகவல்கள், அவர்கள் அருளிய பாசுரங்கள், மருத்துவக் குறிப்புகள், ஒவ்வொரு நட்சத்திரகாரர்களும் வழிபட வேண்டிய சித்தர்கள்.  (என்னுடைய நட்சத்திரக்குரிய சித்தரை சமீபத்தில் வழிபட்டேன்), பூஜை முறைகள், குளிகை கால பலன்கள், சோடகக்கலை, நட்சத்திர நாள், பௌர்ணமி, அமாவாசை  வழிபாட்டின் நன்மைகள் போன்ற ஏராளமான விடியோக்கள் உள்ளன. உங்களுக்கு தேவையானதை கேட்டு / பார்த்து தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.    

இரண்டாம் பகுதியில் இன்னும் சில  சேனல்களை பற்றி பேசுவோம்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Thursday, 28 February 2019

மியூசிக்கல் ஹிட் மற்றும் பின்னணியிசை

எங்கள் அலுவலகம் வங்கியை போல.. இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை.  வீட்டு வேலைகள் போக அவ்வப்போது
பழைய படங்களை பார்ப்பதுண்டு.

சமீபத்தில் சங்கராபரணம், சலங்கை ஓலி, சிப்பிக்குள்முத்து என தொடர்ச்சியாக பழய கிளாசிக் மியூசிக்கல் ஹிட்டான படங்களை பார்க்க நேர்ந்தது.  மின்சாரத்துக்கு (சம்சாரம்) பிடித்த படங்கள் அவை. பாடல்கள் இன்றும் கேட்க இனிமையானவை. சென்னையில் 100-200 நாட்களுக்கு மேல் கடந்து மேல் ஓடிய படங்கள்.  ஆனால் மியூசிக்கல் ஹிட் படங்கள் வந்தே நீண்ட நாட்கள் ஆனது போல தோன்றுகிறது. மியூசிக்கல் ஹிட் படங்கள் அபூர்வமாகிவிட்டது.

1975 முதல் 2000 வரை இசை மழையில் மூழ்கி திளைத்த தலைமுறை நாங்கள். இசை விருந்து, இசைமழை,  மியூசிக்கல் ஹிட் என்ற சொற்றொடர், சொற்பதம் கேட்டு நீண்ட நாட்கள் ஆகிறது.

சென்ற வாரம் வீடு சுத்தம் செய்யும்போது பழுதான டேப் ரிகார்டர், 300 மேற்பட்ட பழைய சினிமா மற்றும் பக்தி பாடல் அத்தனையும் கேட்டு தேய்ந்து போன கேசட்டுகள். முந்தானை முடிச்சு முதல் கரகாட்டக்காரன் வரையிலான  ராஜா சார் இசையமைத்த படங்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை, தூக்கி போடவும் மனசு வரவில்லை, முழுவதும் சேதம் அடைந்ததால்  காயலான் கடையில் போட்டோம். காலமாற்றத்தால் காலாவதியான தொழில்நுட்பம். எங்கள் மாமா தீவிர ராஜா ரசிகர். அவர் சேர்த்து வாய்த்த கேசட்டுகள் அவை. எங்களை ராஜாவின் ரசனைக்கு மாற்றியதில் அவர் பங்கு உண்டு.

இப்போதைய திரைப்பட இயக்குனர்களும் இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ தோன்றுகிறது. படங்களின் ஓட்டமும் குறுகிவிட்டது. 

மக்களின் ரசனை மாறிவிட்டது, புதிய இயக்குனர்களின் வரவால் மியூசிக்கல் ஹிட்  படங்கள் அரிதாகிவிட்டது.  சில படங்களின், சில பாடல்கள் தான் கேட்க நன்றாயிருக்கிறது.

பாடல் மூலம்  கதை சொன்ன இயக்குனர்கள் உண்டு, பாடலை வைத்து கதை நகர்த்திய இயக்குனர்கள் உண்டு.  பாடல்களுக்காக எடுத்த படமும் உண்டு.  பாடல்களுக்காக ஓடின படங்களும் உண்டு.

ஐம்பது பாடல்களுடைய  படங்களையும் நாம் பார்த்தோம். ஐம்பது, இருப்பது, பதினைந்து, பத்து, ஏழு, ஒன்பது ஆறு, ஐந்து, மூன்று, இரண்டு என பாடல்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போய் இப்பொது மான்டேஜ்  பாடலில் வந்து நிற்கிறது.

பாடல்கள் இல்லாத இந்திய சினிமாவை நினைத்து பார்க்கவே முடியவில்லை

சில பாடல்கள்  கேட்க நன்றாக இருக்கும், ஆனால் காட்சிப்படுத்துதல் மோசமாக இருக்கும், சில பாடல்கள் கேட்க சுமாராக இருக்கும் அனால் காட்சிப்படுத்துதல் நன்றாக இருக்கும்

பாடல்களே இல்லாத படம் எடுக்க வேண்டுமென்றால் இயக்குனர் அதிக சிரத்தை எடுத்து ரசிகனுக்கு அயர்ச்சி ஏற்படாதவாறு காட்சிகளை அமைக்க வேண்டும்.

ஞாயிறு மதியவேளை தெருவே 'வெறிச்'. ஊரே தொலைக்காட்சிப்பெட்டி முன் உட்கார்ந்திருக்கும். நாங்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்போம். மாநில மொழி திரைப்பட வரிசையில் சில தமிழ் படங்கள் (ஒரே ஒரு கிராமத்திலே, பூந்தளிர், அன்னக்கிளி, உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், சலங்கை ஓலி, கிழக்கே போகும் ரயில்) ஒளிபரப்பாகும்.

அப்போது படத்தினூடே ஒலிக்கும் தீம் இசை, பாடல்கள் / பின்னணியிசை எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். சில காட்சிகளில் இடையே வரும் அமைதி மற்றும் பின்னணி இசை நம்முடைய பதைபதைப்பை தூண்டும். அவ்வப்போது விளையாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டுப் போய்ப் பார்ப்பதுண்டு. ஒருகட்டத்தில் விளையாட்டை முழுதும் நிறுத்திவிட்டுத் தொலைக்காட்சி முன் உட்கார்ந்துவிடுவோம். படம் முடிந்ததும் மீண்டும் விளையாட செல்வோம்.

பின்னணியிசை ரசிகனுக்குச் சந்தோசத்தை ஏற்படுத்த வேண்டும், சுவாரஸ்யத்தைத் தூண்டவேண்டும், பதைபதைப்பை உண்டாக்கவேண்டும். இப்போதைய படங்களில் வரும் பின்னணி இசை பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஒரு வீரியமான காட்சி கூடச் சாதாரணமாகக் கடந்து போகிறது காரணம் அந்த இடத்தில பலமான பின்னணியிசை இல்லாததே.  Background Score Music is a vehicle to take a film to next level.  இத யாரும் சொல்லல நா சொல்றேன்..

ராஜாவின் ரசிகர் திரு நவீன் மொசார்ட் அவர்கள் தொகுத்துள்ள விடியோவை கேட்டுப்பாருங்கள், கேட்டவுடன் படம் பார்க்க தூண்டும்.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Wednesday, 27 February 2019

எம்ஜிஆர் பாடல்கள்


எம்ஜிஆர் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் நான் எம்ஜிஆர் பாடல்களை கேட்டு வளர்ந்த கடைசி தலைமுறையைச் சேர்ந்தவன்.

எம்ஜிஆர் நினைவு நாள் மற்றும் எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று அலுவலகம் செல்லும்போது ஊர் முழுவதும் அவர் பாடல்களை ஒலிபெருக்கியில் தெறிக்க விடுகிறார்கள் கழக கண்மணிகள்.

அமெரிக்கர்களின் வளர்ச்சிக்கு எப்படி சுயமுன்னேற்ற நூல்கள் உதவியாக இருந்தனவோ அதுபோல் முந்தய தலைமுறை தமிழர்களுக்கு எம்ஜிஆர் பாடல்கள் சுயமுன்னேற்ற ஊக்கியாக அமைந்தன.  தான் சார்ந்த திராவிட கொள்கைகளை தனது பாடல்கள் மூலம் தமிழகம் முழுதும் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க செய்தார்.  அதன் மூலம் நிறைய இளைஞர்கள் வந்தார்கள், வளர்ந்தார்கள், வென்றார்கள்.  அவருடைய சினிமா பாடல்களே சொந்தக்கட்சி பிரச்சார பாடல்களாக அமைந்தது தான் சிறப்பு.



"உன்னையறிந்தால்.."
"நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற.."
"என்னை தெரியுமா.." 
"நான் ஆணையிட்டால்..."
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..." 
"கண்ணை நம்பாதே.."
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.."
“கண்போன போக்கிலே கால் போகலாமா”
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி”
"திருடாதே பாப்பா திருடாதே..."
இது போல ஏராளமான பாடல்கள்.  பாடல்களை பாடியது என்னவோ டிஎம்எஸ் அல்லது சீர்காழி கோவிந்தராஜன் அவர்களாக இருந்தாலும் எம்ஜிஆர் முகம் தான் நமக்கு ஞாபகம் வரும். அது தான் 3D எபெக்ட்.

இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த நடிகரும் நிகழ்த்தாத சாதனை எதுவெனில் எம்ஜிஆர் தன் சினிமா பாடல்கள் மூலம் (திராவிட) கொள்கைகளை மக்கள் மனதில் பதிய செய்து அதன் மூலம் ஆட்சியை பிடித்தது.

ஆனால் இன்று அவருடைய சொந்த கட்சியே அவருடைய கொள்கைகளை பின்பற்றுகிறதா என்று தெரியவில்லை?

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி