Wonderful Shopping@Amazon

Friday, 26 April 2019

மூளையின் போதை

ன் அலுவலகத்தில் நடக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களை நகைச்சுவை கட்டுரைகளாக முகநூலில் பதிவிடுவது வழக்கம். அதைப் படிக்கும் நண்பர்கள் "நீ ஏன் எழுதக்கூடாது" என்பார்கள், என் தோழியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
என் மாமாவிடம் ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தேன். அவர் அதை அவர் தன்னுடைய ப்ளாகில் வெளியிட்டார். “ஒரு பேனாவின் முடி திறக்கப்பட்டது, ஒரு படைப்பாளியின் கற்பனை சிறகுகள் விரிந்தது” என்ற தோழியின் புகழாரம் மூலையில் போதை ஏற்றியது. இரவு முழுக்க என் பதிவை நானே திரும்பத் திரும்பப் படித்தேன். நான் எழுத்தாளன் ஆனேன் என்ற எண்ணம் நெஞ்சில் நிழலாடியது. அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு மனது துடித்தது.
 
ஒருநாள், காலை தினசரியில் ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது (போதை மூளை கண்ணில்பட வைத்தது) “படைப்பாளிகளே, உங்கள் புத்தகத்தை நீங்களே வெளியிடலாம்” . ஒரு நாள் பயிற்சிப் பட்டறை. இன்றே முன்பதிவு செய்யுங்கள். நுழைவு கட்டணம் ரூபாய் ஐந்நூறு" என்றிருந்தது. ஆசை அதிகமானது நாமும் புத்தகம் எழுதுவோம் என்று . மனம் மட்டும் பொறுமை என்றது, மூளை அதைக் கேட்கவே இல்லை. முன்பதிவு செய்து அங்குச் சென்றேன்.  
 
அழகான பெண்கள் வரவேற்றார்கள், ரூபாய் 500ஐ பெற்றுக் கொண்டு அரங்கினுள் அனுமதித்தார்கள், மனதை வருடும் இசை, இதமான மெல்லிய வாசனை அந்த அரங்கை நிறைத்தது. என்னைப் போல் சிலர் வந்திருந்தார்கள். சில நிமிடங்கள் கழித்து, மேடையில் ஒருவர் தோன்றினார். தன்னை இவ்விதம் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
 
"நான் இன்று புத்தகம் எழுதுகிறேன், பல விருதுகள் வாங்கியிருக்கிறேன், பல படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறேன், நான் தான் உங்கள் கோச்.... எப்போதும் என் வகுப்பு நிரம்பி வழியும், இன்று சிறப்பு வகுப்பு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அழைப்பு, ஐந்து பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். என் மூளை விழித்தது. ஐந்து பேர் வந்ததும் வகுப்புத் தொடங்கியது.
 
தன்னைத் தானே பெருமையாக ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு. பவர்பாய்ண்ட் விளக்கக்காட்சி மூலம் ஒரு சைக்கிளைக் காண்பித்து “10 வருடங்கள் முன்பு ஒருவர் இதில் பொருட்கள் விற்று தான் வாழ்க்கை நடத்தினார், இன்று அவர் நூறு கோடிக்கு வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார், இப்போது அவரிடம் மூன்று ஆடி வாகனங்கள் இருக்கிறது, வியாபாரத்தில் கவனம் செலுத்தியதால் அவரிடமிருந்த படைப்பாற்றல் ஒளிந்து கொண்டது. ஆனால் அவருடைய ஆசை, தன்னுடைய அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட வேண்டுமென்று, அவர் இந்த வகுப்பிற்கு நான்கு மாதங்களுக்கு முன் வந்தார், அவரை ஒரு படைப்பாளியாக உருமாற்றினேன். ஒரு மாதத்திற்கு முன்பு அவர் எழுதிய புத்தகம் வெளிவந்து, இன்று அது சக்கை போடு போடுகிறது" என்றார்.  
 
பிறகு மாமேதைகள் கதைகள், கடின உழைப்பின் கதைகள், விடாமுயற்சி கதைகள் என்று ஸ்லைடு மேல் ஸ்லைடு போட்டு வெறியேற்றினார். நீங்களும் இவர் போல் ஆகலாம், அவர் போல் ஆகலாம், உங்களால் முடியும், உங்களால் முடியாதது ஏதுமில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை, நேரம் ஒதுக்கி வந்திருக்கும் நீங்கள் தான் நிஜப் படைப்பாளி. நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றப் பிறந்தவர்கள். மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் என்னுடைய எட்டு நாள் பயிற்சி வகுப்பிற்கு வந்து பயன்பெறுங்கள் என்று கூறி இடைவேளை விட்டார் . மூளையின் மொத்த போதையும் இறங்கியது.

அடுத்து, ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொன்னார். பிறகு, "நீங்கள் எழுதும் சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து என்
அடுத்த புத்தகத்தில் வெளியிடுவேன், இது தான் அந்தப் புத்தகத்தின் அட்டை மற்றும் அதன் தலைப்பு என்று வண்ணமயமான அட்டையைக் காட்டினார். அட்டை தான் புத்தகத்தின் முகம், இதற்கான செலவு மட்டும் ரூபாய் 30,000. என் வகுப்பில் சேர்ந்தால் இரண்டாவது நாள் உங்கள் புத்தக

தலைப்பு, மூன்றாவது நாள் இதுபோல் உங்கள் புத்தக அட்டை கிடைத்துவிடும். முற்றிலும் இலவசம் என்றார். மூளை சிந்திக்கத் தொடங்கியது “மவுண்டு ரோடு DTP நிலையத்தில் கொடுத்தால் வெறும் 300 ரூபாய்க்குக் கிடைக்கும்" என்றது. அட்டையை வீட்டில் மாற்றி வைத்து (உந்து சக்தியாம்!), தினமும் அதைப் பார்க்க வேண்டுமாம், அப்போதுதான் 40

நாளில் புத்தகத்தை நிறைவு செய்ய முடியுமாம். 41வது நாள் உங்கள் படைப்பில் ஒரு புத்தகம் தயார். புத்தகம் சந்தைப்படுத்துதல் செலவு ரூபாய் ஒரு லட்சம் முதல் ஆறு லட்சம் வரை செலவு ஆகுமாம். 3 மொழிகள், 8 நாடுகளில் உங்கள் புத்தகத்தை விற்றுத் தருகிறோம் அதுவும் இலவசம், வகுப்பில் சேர்வோருக்கு என்றார்.

வகுப்பு தேதியைக் கூறிவிட்டு. நட்சத்திர விடுதியில் முழு நாள் பயிற்சி வகுப்பு, காலை சிற்றுண்டி, சுவையான மதிய உணவு, என்றும், அத்தனையும் சேர்த்து வெறும் ஒரு லட்சம் +GST என்றார். இன்றே ரூபாய் 10000 கட்டி பதிவு செய்தால் 35% தள்ளுபடி வேறு. “உங்கள் கற்பனை, உங்கள் எழுத்து, நான் ஒரு வழிகாட்டியே ” என்று முடித்தார் . நின்ற பேருந்தைத் தள்ளாமல் “ஏ தள்ளு தள்ளு தள்ளு” என்று ABCD படத்தில் வரும் வடிவேல் நகைச்சுவை தான் மூலையில் ஓடியது. சிரித்தும்விட்டேன், அவரும் அதைக் கவனித்தார் நால்வரில் ஒருவர் பண அட்டையை மூலம் கட்டண முன்பதிவு செய்தார்.

நான் பிறகு பார்க்கலாம் என்று கிளம்பினேன். அவர் என்னை ஒரு மந்திர புன்னகையோடு வழியனுப்பினார். பின்னர், தூண்டிலில் சிக்காத மீனைப் போல நழுவினேன்.

என் மனசு சொன்னது “நான் அப்பவே சொன்னேன் கேட்டியா". என் மூளையோ “நம் மூளையை வைத்துச் சம்பாதிக்கப் பார்த்த அவன் மூளையின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தது" .

தோழி சொன்ன வார்த்தைகளை மனது புரிந்துகொண்டு. நடந்தவற்றை அதை ஒரு கதையாக்கி உங்கள் முன் சமர்ப்பித்தது.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி தளத்திற்காக இரா.லோகேஷ் 🙏 

Wednesday, 17 April 2019

வெள்ளித்திரை - இன்றே கடைசி


சென்னை புரசைவாக்கம் கெல்லிஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் அடிப்ரதிக்ஷணம் செய்தன. பிறகு காரணம் புரிந்தது ரஜினிகாந்த் நடித்த ஒரு படம் 50வது நாளை முன்னிட்டு அபிராமி திரை வளாகத்தில் ஏற்பட்ட நெரிசல். இதெல்லாம் இருபது வருடங்களுக்கு முந்தைய கதை. பிறகு அபிராமி திரையரங்கம், அபிராமி மெகா மாலாகி இப்போது அதுவும் இல்லை.
இன்றைய தலைமுறை ரசிகர்கள் திரைப்படங்களைத் தங்கள் அலைபேசியில் கண்டுகளிக்கிறார்கள், திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் அந்த சுகானுபவத்தை இழக்கிறார்கள்.
சென்னை மட்டைப்பந்து மற்றும் திரைத்துறையால் ஆனது. ஒவ்வொரு சென்னை வாசிக்கும் தேவி, சத்யம் மற்றும் சங்கம் திரையரங்கில் திரைப்படம் பார்ப்பது பெருமைக்குரிய விஷயம். சங்கம் திரையரங்க வாயில் படிகள் கல்லூரி மாணவ குழுக்களின் புகலிடமென்றால், காதலர்களுக்குப் பொழுதைக் கழிக்கச் சங்கம் திரையரங்கம் ஏற்றது.

ஆயிரம் இருக்கைகள் கொண்ட தேவி பாரடைஸ் திரையரங்க பெரிய வெண்திரையைப் பார்த்தவுடன் ஒரு கணம் மிரண்டு தான் போவீர்கள். ஆரவாரத்துடன் மக்களுடன் மக்களாக திரைப்படம் பார்க்க ஏற்றது. பெயருக்கேற்றாற்போல் உருண்டையான வளைவான சருக்குப் பாதையில் நீங்கள் சொர்க்கத்தில் நடந்து செல்வது போல நடந்து சென்று திரையரங்கை அடையலாம். ஆச்சரியம் என்னவென்றால், 49 வருடப் பாரம்பரிய கொண்ட திரை வளாகம், இன்றும் பெருநிறுவன சங்கிலித் தொடர் திரையரங்குகளுக்கு ஈடுகொடுத்து விளங்கிவருகிறது. நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படங்களுடைய கோப்பைகளைக் இங்குக் காணலாம்.

இஃது இப்படி என்றால் சத்யம் திரையரங்க பின்புறத்தில் உள்ள சின்ன அறையில் வைத்து முதல் இரண்டு வரிசைக்கு, பத்து ரூபாய் டிக்கெட் கொடுப்பார்கள், ஒருவருக்கு ஒரு டிக்கெட், அதை வாங்கக் கூட்டம் முண்டியடிக்கும். டைட்டானிக் கப்பலில் நுழையும் ஜாக் போல ஒரு பெருமித உணர்வு டிக்கெட் கிடைத்தவுடன் ஏற்படும். அப்பவே புதிய தொழிற்நுட்பங்களைச் சத்யம் திரையரங்கம் தான் முதலில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும்.

பெரிய நட்சத்திரங்களுக்கென்றே சில திரையரங்கங்கள் உண்டு. ஆல்பர்ட் மற்றும் காசி. முதல் நாள் முதல் காட்சி தீபாவளி கொண்டாட்டம் போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள். விசேஷ நாட்களில் பதினைந்து திரைப்படங்கள் வெளியாகும், பெரும்பாலான படங்கள் வெற்றிப் படமாக அமையும். மொழிவாரியாக வெளியாகும் படங்களுக்கென்றே சில திரையரங்குகள் உண்டு. மோட்சம் மற்றும் பைலட் (ஆங்கிலம்), கேசினோ (ஆங்கிலம் & தெலுங்கு), ஈகா மற்றும் மெலடி (ஹிந்தி) சஃபையர் (ஆங்கிலம் & மலையாளம்). கெயிட்டி (பருவ வயதை எட்டியவர்களுக்கு, மொழியா முக்கியம்?).

கடந்த பத்து வருடங்களாக ஒற்றைத் திரையரங்கங்கள் மெல்ல மறைந்து, பெருநிறுவன திரைப் பூங்காவாகப் பெருகி வருகிறது பெருகி வருகிறது.  இது ஒரு நல்ல மாற்றம்பல மொழி படங்கள் ஒரே இடத்தில். நமக்குப் பிடித்த படங்களை தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். ஆனால் நுழைவு கட்டணம், திரையரங்கினில் உள்ளே விற்கப்படும் தின்பண்டங்கள் விலை, வாகன நிறுத்துமிடத்தில் கட்டண போன்ற காரணங்களுக்காகப் படம் வெளியான அன்றே, சுமாரான பதிப்பாக இருந்தாலும் சரி மக்கள் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து பார்க்கிறார்கள். இதனால் கணிசமான மக்கள் திரையரங்கம் பக்கம் வருவதே இல்லை. பிறகு பார்க்கலாம் என்று நினைக்கையில், சில நல்ல படங்கள் திரையரங்கிலிருந்து எடுக்கப்படுகிறது. படம் வந்த சில மாதங்களிலோ அல்லது ஓடிக்கொண்டிருக்கும்போதோ புத்தம் புதிய பிரதி பிரபல இனணயத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

திரைப்படங்களை திரையரங்கில் தான் காண வேண்டும் என்ற கட்டாயம் இப்போது இல்லை, நெட்ஃபிக்ஸ், அமேசான் வூட், ஆல்ட் பாலாஜி, ஹாட்ஸ்டார் என ஏகப்பட்ட இணையத் தொலைக்காட்சிகள் இப்போது சந்தையில். முதல் 36 நாள் சந்தா இல்லாமல் இலவசமாக அனைத்து திரைப்படங்களையும் / தொடர்களையும் பார்க்கலாம். அப்போது ஓரளவுக்கு அடிமையாகியிருப்பீர்கள், இலவச நாட்கள் முடிந்தவுடன் சந்தா கட்டி பார்க்கும் அளவுக்கு மாறியிருப்பீர்கள்.



எதிர்காலத்தில் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த புதிய திரைப்படங்களை நேரடியாக இத்தகைய தளங்களில் வெளியாகும், சிறிய தொகை செலுத்தினால் போதும் குடும்பத்தோடு பார்க்கலாம். நெரிசல், கூச்சல், குழப்பம், பாலபிஷேகம், கட்டவுட், வாகன நிறுத்துமிடம் பல தொல்லைகள் இல்லை. சில நடிகர்கள் நடித்த படம் மட்டும் திரையரங்கில் வெளியாகும், அவர்களே பணம் கட்டி திரையரங்கில் வெளியிடும் நிலைமை கூட வரலாம், அதற்குப் பெருநிறுவன திரையரங்க உரிமையாளர் ஒரு தொகை நிர்ணயிப்பார். அதற்கேற்றாற்போல், நடிகர்களின் ஊதியமும் நிர்ணயிக்கப்படும். இப்போது இல்லையென்றாலும், சில வருடங்கள் கழித்து நடக்கலாம்.

அதனால் நிலைமை மாறுவதற்குள் அருகில் உள்ள வெள்ளித்திரையில் திரைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி தளத்திற்காக இராம.லோகேஷ் 🙏


Monday, 8 April 2019

சிறந்த யுடியூப் சேனல் (பகுதி - 2)



சிறந்த யுடியூப் சேனல்கள் பகுதி ஒன்றின் தொடர்ச்சி...............!

டெல்லி ஃபுட் வாக்

திரு அனுபவ் சாப்ரா என்பவர் தொகுத்து வழங்கும் உணவு நடை சேனல். நீங்கள் உணவு பிரியராகவோ அல்லது பல்வேறு நகரங்களுக்குச் சுற்றுலா / வேலை விஷயமாகப் பயணம் செய்பவராகவோ இருந்தால், இவருடைய சேனலை ஒரு முறை பார்த்துவிட்டு செல்வது நலம் நல்லது. எங்குச் சென்றாலும் நாவுக்கு ருசியான நல்ல தரமான உணவு முக்கியமல்லவா. முக்கிய இந்திய நகரங்களில் உள்ள எல்லா இடங்களிலும் கிடைக்கும் / புழங்கும், மக்களுக்கு விருப்பமான, புகழ் பெற்ற சைவம் / அசைவம் உணவு வகைகள், சாலை உணவு வகைகள், பழங்குடி உணவு வகைகள், சிற்றுண்டி, குளிர்பானம் என மனுஷன் அத்தனையும் ருசித்திருக்கிறார். அநேகமாக இவர் போகாத நகரம் இல்லை எனலாம்.

மெட்ராஸ் ஸ்ட்ரீட் ஃபுட்

மேலே சொன்னது இந்திய நகரங்களென்றால், மெட்ராஸ் ஸ்ட்ரீட் ஃபுட் தமிழக நகரங்களில் உள்ள முக்கிய உணவகங்கங்கள் / சாலை உணவு வகைகளைப் பற்றிப் பேசும் சேனல். தோசைக்கல் பிரியாணி, Rs.150/- க்கு அளவில்லா பிரியாணி, 99 வகை விறகு அடுப்புத் தோசை, விறகு அடுப்பு பிஸ்சா, மெரினா கடற்கரையில் வருடம் முழுதும் கிடைக்கும் நோன்பு கஞ்சி, 35 வகையான நூடுல்ஸ், விதவிதமான பரோட்டா பரிமாறும் உணவகம், பெட்டி சோறு பல பல காணொளி பதிவுகளை இங்குக் காணலாம்.

எபிக் ரிகேப்

ரோண்டா பைரன் எழுதிய ரகசியம் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சேனல். திரு ஜெய் என்பவர் ஈர்ப்பு விதி, நன்றி எழுதுதல், 55x5 முறை, ஆழ்மனதை நோக்கி ஓர் உள்ளொளி பயணம், சுயமுன்னேற்றத்துக்கு தேவையான விஷயங்களைப் படிப்படியாக விளக்கும் காணொளிகளை இந்தச் சேனலில் காணாலாம்.


குலதீப் எம் பை
டாக்டர் குலதீப் எம் பை என்பவர் நடத்தும் சேனல். இளம் திறமையலகர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கர்நாடக சங்கீத பயிற்சி அளித்து, பல அறியக் கீர்த்தனைகளை பாட வைத்து உலகறிய செய்யும் அந்த மகத்தான பணியை டாக்டர் குலதீப் எம் பை செய்து வருகிறார். இன்னும் ஐந்து ஆண்டுகளில் குமாரி. சூர்யகாயத்ரிமாஸ்டர். ராகுல் வெளாள், குமாரி பவ்ய கணபதி, ரகுராம் மணிகண்டன் மற்றும் இன்னும் பலர் இந்திய அளவில் புகழ் பெறப்போவது திண்ணம்

தாலப்பக்கம் அன்னமாச்சார்யா கீர்த்தனையான "ஜோ அச்சுதானந்தா..........."
தாலாட்டு பாடலை குமாரி. சூர்யகாயத்ரி பாடுவதை கேளுங்கள், நீங்கள் அப்படியே உருகிவிடுவீர்கள். இதோ அந்தப் பாடல்


நவீன உழவன்

நீங்கள் விவசாயியா அல்லது (நவீன) விவசாயம் சார்ந்த தொழில்களை (Agricultural and Allied Businesses) பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா.  இந்த சேனல் உங்களுக்கானது. ஆடு வளர்ப்பு, நாட்டு மாடு வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மீன் குட்டை அமைத்தல், காடை வளர்ப்பு, புறா வளர்ப்பு, சண்டை சேவல் வளர்ப்பு, நாட்டு நாய் வளர்ப்பு,  மாடி தோட்டம் , ஒருங்கிணைந்த பண்ணையம், மலை மேல் நெல் விவசாயம் என இன்னும் பல காணொளிகள் உண்டு இந்த சேனலில். கடினமான கேள்விகளை தொடுத்து, தெளிவான விளக்கங்கள் பெரும் உத்தி.  டீடைலிங் வீடியோ என இதன் Highlight. சுமார் 1,63,000   சந்தாதாரர்களை கொண்ட சேனல் இது

ஏதோ நாங்களும் சேனல் நடத்தினோம் என்றில்லாமல். ஒவ்வொருவருக்கும்  ஒரு concept. கொஞ்சம் மெனக்கெடல், நிறைய விஷயங்களை சின்ன சின்ன Capsule போல என ஒவ்வொரு காணொளியிலும் அவர்களின் உழைப்பு தெரிகிறது.

மூன்றாம் பகுதியில் இன்னும் சில  சேனல்களை பற்றி பேசுவோம்.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

வாசம் வீசும் நேரம்


"வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம்..."
 
"வாசமில்லா மலரிது. வசந்தத்தைத் தேடுது......"
 
வாசம், வாசனை, நறுமணம், மணம் என்றதும் உங்களுக்குச் சட்டென்று மனதில் தோன்றும் வாசம் எது?
 
நான் மாலை நேர டியூஷன் படிக்கச் சென்ற அந்த ஆசிரியை வீட்டின் பூஜையறையில் ஏற்றப்பட்ட ஊதுபத்தியின் நறுமணம்.

தஞ்சாவூர் உணவகங்களில் பூரிக்குப் பரிமாறப்படும் தண்ணீயான கிழங்கு மசாலா வாசம் உள்ளங்கையில்.

ஞாயிறன்று எங்கள் தெரு முழுக்க மீன் / கருவாடு வறுவல், பிரியாணி, மட்டன் குழம்பு தாளிப்பு எனக் கவிச்சு வாசம் வீசும். அதுவும் புரட்டாசி  மாசத்தில் அதையெல்லாம் மறந்து இருந்தால் இந்த வாசம் ஞாபகப்படுத்தும்.

குலதெய்வக் கோயில் கருவறையில் பத்தி, கற்பூரம், சந்தானம் கலந்த வாசம் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும்.

அம்மா குழம்பு தாளிக்கும்போது வரும் வடாம் வாசம் பசியைத் தூண்டும்.

மல்லிகை பூ நறுமணத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். திருமணமான புதிதில் மனைவி சூடிய ஜாதி மல்லிகைப்பூ வாசம் இன்றும் நினைவில்.

சனிக்கிழமை தோறும் வெட்டிவேர் மற்றும் மூளை கலந்த சீகைக்காய் வைத்து எண்ணெய் குளித்த பிறகு உடம்பிலிருந்து வெளிவரும் வெட்டிவேர் வாசம் மனசை நிரப்பும்.

சென்னை புரசைவாக்கம் மோட்சம் திரையரங்கில் (இப்போது இல்லை) சில படங்கள் பார்த்திருக்கிறேன், உள்ளே நுழையும்போது வரும் ஒரு மெல்லிய நறுமண வீசும், படம் பார்க்கும் சூழலை இனிதாக்கும்.

மாமாவுடன் கொத்தவால்சாவடி மாம்பழம் விற்கும் சந்திற்குள் செல்லும் போது பல ரக மாம்பழங்கள் சேர்ந்த ஒட்டுமொத்த வாசம் நினைவில் நிற்கிறது.

பள்ளியில் எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர், எப்போதும் குட்டிகூர வாசனைப் பொடி பூசிக்கொண்டு வருவார். அவர் வகுப்பில் நுழைந்ததும், வகுப்பறை முழுதும் குட்டிகூர வாசனை காற்றில் பரவியிருக்கும். யாராவது குட்டிகூர வாசனைப் பொடி பூசிக்கொண்டு எதிரில் வந்தால் அந்த ஆசிரியர் முகம் என் மனதில் வந்து போகிறது.

சில வீடுகளில் உள்ள பூஜையறையில் நறுமணம் கமழும் ஊதுவத்தி வாசனை மனதுக்கு இதமாக இருக்கும். "நீங்கள் என்ன ஊதுவத்தி உபயோகப்பத்துறீங்க", என்று கேட்கவா முடியும்? நானும் நிறைய ஊதுவத்தியெல்லாம் வாங்கி உபயோகபடுத்தியாச்சு, ஆனால் அதுபோல ஒரு வாசனை இல்லை.

சமீபத்தில் சைக்கிள் ப்ராண்ட் தயாரிப்பான "WOODS" என்ற சந்தன ஊதுவத்தியை வாங்கி உபயோகப்படுத்தினேன். அடடா என்ன நறுமணம். இதே நறுமணத்தைச் சாதாரணச் சந்தனம் கலந்த சாம்பிராணி தூப் தருகிறது.

திருவையாறு ஐயாறப்பர் கோவில் தென்கோபுர வாசலில் எப்போதும் குங்கிலியம் மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் அருகில் உள்ள கடையில் ஐந்து ரூபாய் கொடுத்துக் குங்கிலியம் பொட்டலம் வாங்கி இங்குள்ள குண்டத்தில் அர்ப்பணிப்பார்கள். இதனால் விஷ ஜந்து கடியிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம்

கோவில்களில் அபிஷேகம்,அலங்காரம் முடிந்து, காண்பிக்கபடும் குங்கிலியம் தூபம் மனதுக்கு ரம்மியமாக இருக்கும்.
 
பொதுவாகச் சாம்பிராணி புகை வாசம் நல்லது. விசேஷ நாட்களிலோ அல்லது வெள்ளிதோறும் சாம்பிராணி தூபம் காண்பித்தால் கண் திருஷ்டி விலகும் என்பார்கள். காதி வஸ்திராலயம் அல்லது பாரிமுனை கந்தசாமி தெருவில் உள்ள கடைகளில் ஏகப்பட்ட சாம்பிராணி வகைகள் கிடைக்கிறது. வாங்கிப் பயன்படுத்தலாம்.

வீடு முழுதும் வாசம் கமழ ரூம்ஸ் ஸ்பிரே மிதமாக அடித்துவிட்டால் போதும். சந்தையில் ஏகப்பட்ட நறுமணங்களில் ரூம்ஸ் ஸ்பிரே கிடைக்கிறது. தானியங்கி கருவியும் விற்கிறது, குறிப்பிட்ட இடைவெளியில் 'விசுக்', 'விசுக்' என்று நறுமணத்தைத் தெளிக்கும்.

நாட்டு மருந்து-குங்குமம்-மஞ்சள் கடையில் வேலை செய்தபோது, போட்டிருக்கும் சட்டை எப்போதும் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். குளித்த பிறகும் அந்த வாசம் விடாது. இப்போது பாரிமுனை கந்தசாமி கோவில் தெரு நாட்டு மருந்து-குங்குமம்-மஞ்சள் கடைப் பக்கம் போனால் பழைய ஞாபகம் எல்லாம் வருகிறது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னூஜ் என்னும் ஊரில் கடந்த நானூறு வருடங்களுக்கு மேலாக இயற்கைப் பொருட்கள் கொண்டு வாசனைத் திரவியங்கள் தயாரித்து வருகிறார்கள். இங்கிருந்து உலக நாடுகளுக்கு வாசனை பொருட்கள் ஏற்றுமதியாகிறது. ஆக்ராவிலிருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கன்னூஜ். வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள்.
சமீபத்தில் தி ஹிந்து தமிழ் நாளிதழில் தஞ்சாவூர் கவிராயர் எழுதிய கட்டுரையில் தஞ்சாவூரில் இன்றும் செயல்படும் நூறு ஆண்டுகள் பழமையான அப்துல் ரஹீம் அத்தர் கடை பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
 
எனது நண்பர் ஒருவருக்குத் தலையில் ஏற்பட்ட காயத்தால் வாசனையை உணர முடியவில்லை.  இப்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார்.  நறுமணம் இல்லா வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

மறந்துவிட்டேன், முதல் மழை பூமியை நனைக்கும் போது வரும் அந்தக் கதகதப்பான மண் வாசனையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

நறுமணம் நல்ல மனநிலையை (Mood) தூண்டும். நம் மூலையில் பதிவாயிருக்கும் ஒவ்வொரு வாசனைக்கும் ஒரு கதை உண்டு. பழைய ஞாபகங்களைக் கிளறி விடும் சக்தி வாசத்துக்கு உண்டு.

உங்களுக்குப் பிடித்த வாசனை எது? ஏன் என்பதைப் பின்னூட்டதில் குறிப்பிடவும்.

வாசம் முற்றிய நிலையே நாற்றமோ?.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி

Friday, 5 April 2019

பரத் அனி நேனு (2018)

பரத் அனி நேனு (பரத் எனும் நான்) - எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்த படம்.  சமகால அரசியலை மிகத் தீவிரமாகவும் /அழகாகச் சொன்ன படம்.

மெத்தப் படித்தவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாநில முதல்வராகிறான், மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் போது, கெட்ட அரசியல்வாதி பிரகாஷ்ராஜ் ஏற்படுத்தும் இடையூறுகள், வீண் அவதூறுகளை எப்படி முறியடித்து மீண்டும் முதல்வராகிறான் என்பது மீதி கதை.

திரைப்படம் என்பது முழுக்க முழுக்க இயக்குநர் மீடியம்.  இயக்குநரின் குமுறல்களை நாயகன் வாயிலாக வெளிப்படுவதை அங்கங்கே சில இடங்களில் பளிச்.

கட்சித் தலைமை யாரை முதல்வராக நிறுத்தினாலும். தலைமைக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவேண்டும். தலைமையை மீறி யார் மீதும் கை வைக்க முடியாது.  அப்படி கை வைத்தால் வீண் அவதூற்றுக்கு ஆளாக வேண்டிவரும். கெட்ட அரசியல்வாதி பிரகாஷ்ராஜ் ஊடகத்தை வைத்து நாயகன் பெயரை டேமேஜ் செய்ய, அதனால் பதவி இழக்கிறான்.  பிறகு நாயகன் விளக்கம் தரும் அந்த பிரஸ் மீட் காட்சி அருமை.

போக்குவரத்து விதிகளை மதிக்காத மக்கள் மீது விதிக்கப்படும் அபராதத் தொகையாகட்டும், கல்வி, மருத்துவத்துறையில் உள்ள சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டவும் இயக்குநர் தவறவில்லை. அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார்  இயக்குநர் கொரட்டால சிவா.

தலைநகரத்தில் போடும் நலத்திட்டங்கள் குக்கிராமங்கள் வரை போய்ச் சேர்வதில்லை.  சாலை அமைப்பதாக இருந்தாலும் சரி, குழாய் பதிப்பதாக இருந்தாலும் சரி தலைநகரிலிருந்து அனுமதி வந்தால் தான் விடிவு என்ற நிலைமையை மாற்ற எல்லா கிராம பஞ்சாயத்துக்கும் கோடி ரூபாய் என்ற திட்டத்தை முதல்வர் கொண்டுவர, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர்கள், அதற்கு முதல்வர் முன்வைக்கும் காரணங்கள் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

தொகுதியை பற்றி முழுசா தெரிந்தவன் போட்டியிட முடியாத நிலைமை தான் இன்றும் நீடிக்கிறது. அதன் பின்னணியில் உள்ள அரசியலைப் புரிந்து, தனிப்பட்ட முறையில் முதல்வர் தலையிட்டு ஒரு சாமானியனைச் சட்டமன்றத்துக்குத் தெரிந்தெடுக்க உதவுவார்.  

துர்கா மஹாலில் நடக்கும் ஆக்ஷன் பிளாக் அருமை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்துக்கு பலம்.  சட்டமன்ற அரங்க வடிவமைப்பு அட்டகாசம், நிஜ சட்டமன்றத்தையே கண்முன் கொண்டுவந்திருப்பர் கலை இயக்குநர் திரு சுரேஷ் செல்வராஜன்.

தேவையற்ற ட்விஸ்டுகள், திணிக்கப்பட்ட நகைசுவைக்காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் போன்ற அலப்பறைகள் இல்லாமல், படம் நேர்கோட்டில் சீராகப் பயணிக்கிறது.

சமீபத்தில் வந்த லூசிபர் மலையாள படமும் சமகால அரசியலைப் பேசுகிறது. ஆனால் தீர்வை முன் வைக்கவில்லை. மலையாளத்தில் வந்த தெலுங்கு படம் போல கமர்ஷியலாக இருக்க, பரத் அனி நேனு - தெலுங்கில் வந்த மலையாள படம் போல சீரியசாக இருக்கிறது.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Wednesday, 3 April 2019

மரபு கட்டுமான வீடு - ஒரு பார்வை


லார்ரி பேக்கர் - பிரிட்டனில் கட்டிடக் கலை பயின்று இந்தியாவில் வாழ்ந்த ஒப்பற்ற அறிஞர். காந்தியுடனான சந்திப்பு, அவர் வாழ்க்கையை மாற்றியது. கடைசி வரை அதில் உறுதியாக நின்றார். அவருடைய கொள்கை வெகு எளிது "நாம் இருக்கும் இடத்தை சுற்றி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கிடைக்கும் கட்டுமான பொருட்களை வைத்தே உறுதியான வீட்டைக் கட்டலாம். இதனால் பெருமளவு செலவு குறையும், பணத்தை மிச்சப்படுத்தலாம். கட்டிடமும் காலத்துக்கும் வரும்"

சமீபத்தில் நண்பர் ஒருவர், கவுதம் பாட்டியா எழுதிய லார்ரி பேக்கர் (பென்குவின் பதிப்பு) - படிக்கக் கொடுத்த புத்தகத்தில் உள்ளது மேலே சொன்னது.

என்னுடைய கிராமத்தில் எனக்குச் சிறிய இடம் உள்ளது. வீடு கட்டலாம் என்ற எண்ணம். ஆடம்பரமாக இல்லாமல் என் கிராமத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து லார்ரி பேக்கர் பாணியில் வீடு கட்டலாம் என்றுமுயற்சித்த போது கிடைத்த தகவல்கள் கீழே:

லார்ரி பேக்கர் முறையைப் பின்பற்றி வீடு கட்டும் வல்லுநர்கள் அங்கங்கே இருக்கிறார்கள். மரபு கட்டுமானம் என்ற பெயரில் சிலர் இயங்கி வருகிறார்கள். அவர்களிடம் விசாரித்ததில் மரபு கட்டுமானம் முறையை மக்கள் இன்னும் சந்தேகத்துடன் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். 

நாங்கள் இருந்த பழைய வீடு முழுக்க முழுக்க மண்ணால் கட்டப்பட்ட ஒட்டு வீடு. சிமெண்ட் தரை, வெளியில் இரண்டு பக்கமும் திண்ணை.  காலி இடத்தில் செடி கொடிகள் நட்டு அந்த இடத்தை அழகாக வைத்துக்கொண்டோம். அப்போது நிறையக் கோழிகள் வளர்த்தோம். வெய்யிலாக இருந்தாலும் சரி மழையாக இருந்தாலும் சரி எந்தவித பாதிப்பும் இல்லாமல், இருபது வருடங்கள் எந்தச் செலவும் வைக்கவில்லை.
மரபு கட்டுமான வீடு

புதிதாக வீடு கட்டிய போது பழைய வீட்டை இடிக்க முடிவில்லை, மண் வீடு அவ்வளவு உறுதி.

லார்ரி பேக்கர் முறையில் கட்டப்பட்ட எத்தனையோ வீடுகள் இணையத்தில் காணக் கிடைக்கிறது.

கேரளா மாநில மக்கள் இன்றும் பின்பற்றும் லார்ரி பேக்கர் முறையிலான வீடு அழகாக இருக்கிறது. லார்ரி பேக்கர் பாணியிலான கட்டுமான முறைகள் / நுணுக்கங்கள் கேரளா மாநில கலாச்சாரத்தில் இரண்டறக்கலந்தது. இயல்பாகவே பின்பற்றப்படுகிறது.

கேரளா மாநிலத்தில் முக்கிய அரசு கட்டிடங்கள் லார்ரி பேக்கர்  வடிவமைத்து, குறைந்த செலவில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அவரிடம் பயின்றவர்கள் / அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் /
திருவனந்தபுரத்தில் உள்ள லார்ரி பேக்கர் ஹாபிடேட் மையம் அல்லது பாண்டிச்சேரி ஆரோவில்லில் கட்டிட ஆராய்ச்சி பள்ளியில் நடத்தப்படும் லார்ரி பேக்கர் கட்டுமான முறைகள் - பயிற்சி முகாம் வகுப்பில் சேர்ந்து தங்களை மேம்படுத்திக்கொண்டவர்கள் என ஆங்காங்கே தங்கள் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பது தான் முக்கியம்.  அவர்களுடைய முந்தைய திட்டப்பணிகளை நேரில் சென்று விசாரித்துக் கண்டு வரவேண்டும். 

இன்னும் சொல்லப்போனால் மரபு கட்டுமான முறையில் கட்டப்படும் வீடு குறைந்த செலவு தான் பிடிக்கும் என்று தோன்றுகிறது.  காரணம் சிமெண்ட், மணல் மற்றும் செங்கல் பயன்பாடு குறைவது. அதற்குப் பதில் சுண்ணாம்பு கலவை, புளித்த மண் சுட்ட செங்கல் அல்லது அழுத்தப்பட்ட மண் கற்கள் (CSEB Blocks), மற்றும் பல பொருட்கள் தேவை. அதை கட்டுனரே ஏற்பாடு செய்து விடுவார்.

எங்களூரில் சுண்ணாம்பு கிளிஞ்சில்கள் விற்கும் கடை இருந்தது.  பொங்கல் பண்டிகை வரும் சில வாரங்களுக்கு முன்பு சுண்ணாம்பு கிளிஞ்சில்களை வாங்கி வந்து, தண்ணீரில் ஊறவைத்து, சுண்ணாம்பு அடிப்போம்.  அந்த பாத்திரம் அடியில் கை வைத்தால் சூடாக இருக்கும்.  வெய்யில் காலத்தில் வீடு குளுமை குளுமை கூல் கூல். இப்போது  சுண்ணாம்பு கிளிஞ்சில்கள்  விற்கும் கடையை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

மொசைக் தரை அல்லது சிவப்பு ஆக்சைடு தரை கால் பாதங்களுக்கு நல்லது மற்றும் வீட்டை குளுமையாக வைத்திருக்கும். ஆனால் மொசைக் தரை / சிவப்பு ஆக்சைடு தரை போட முன்பு ஆட்கள் இருந்தார்கள். இப்போது அவர்களும் இல்லை. வெளி மாவட்டங்களிருந்து தான் கூடி வர வேண்டும்.  அதற்காகும் செலவுகள் தனி. அதையும் கட்டுனரே ஏற்பாடு செய்து தருகிறார்.

மரபு கட்டுமான முறையில் கட்டப்பட்ட வீடுகளைப் பார்த்தால், மற்ற வீடுகள் மீது உங்கள் மனம் செல்லாது. காரணம் நேர்த்தியாகவும், அழகாகவும், எளிமையாகவும் அதே சமயத்தில் ஆடம்பரமாகவும் இருக்கும்.

நீங்கள் கோடி ரூபாய் கொட்டி வீடு கட்டியிருந்தாலும், சில லட்சங்கள் செலவழித்துக் கட்டிய மரபு மட்டுமான வீடு உங்களுக்குப் பிடிக்கும் காரணம் மேலே சொன்னது தான்.

லார்ரி பேக்கர் பாணி அல்லது மரபு கட்டுமான முறையில் கட்டப்படும் வீடு தான் உங்கள் கனவு இல்லமெனில்.  மரபு வீடு கட்டுநரைச் சுதந்திரமாக இயங்க விட வேண்டும்.  அவர் கேட்பதை வாங்கி கொடுக்க வேண்டும்.  இறுதி வடிவம் பெறும்வரை பொறுமையாக காத்திருக்கவேண்டும்.

இத்தகைய வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் வசதி உண்டா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்

உங்களுக்கும் லார்ரி பேக்கர் பாணி அல்லது மரபு கட்டுமானம் பற்றிய புரிதல் இருக்கவேண்டும் (அடிப்படை விஷயங்கள்).  இணையத்தில் பார்த்து / கேட்டு / படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு http://agriwiki.in / http://www.vernarch.com போன்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் அல்லது கவுதம் பாட்டியா எழுதிய Laurie Baker: Life, Work, Writings என்ற புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

விரைவில் என்னுடைய லார்ரி பேக்கர் பாணியிலான மரபு கட்டுமான வீட்டு வேலை முடிந்ததும் புகைப்படங்களைப் பதிவிடுகிறேன்.

மரபு கட்டுமான வீடு கட்ட தேவையான தகவல்களை பெற கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் :


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி