Wonderful Shopping@Amazon

Tuesday, 26 February 2019

பெட்டி கேஷ்

நாம் பணிபுரியும் அலுவலகத்தில் திடீர் செலவுகளை எதிர்கொள்ள ஒரு சிறிய தொகையை கையிருப்பு பணமாக அலுவலர் வைத்திருப்பார். நகலெடுக்க, பூஜை பொருட்கள் வாங்க, மற்றும் சில அன்றாடத் தேவைகளுக்கு இச்சிறிய தொகை பயன்படும். "பெட்டி கேஷ்" என்று கூடச் சொல்லலாம்..

ஒவ்வொரு மாத முடிவிலும் அந்த மாதத்தில் ஏற்பட்ட செலவுகளைக் கணக்கிட்டு, அதற்குண்டான ரசீதுகளை இணைத்து, கணக்குப்பதிவுத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து நடப்பு மாதத்திற்கான தொகையை வாங்கி வைத்துக் கொள்வது ஒரு சிறந்த நடைமுறை.

நானும் கூட இந்த "பெட்டி கேஷ்" பணத்தைக் கையாண்டிருக்கிறேன். அதற்கென்று ஒரு நோட்டுப் புத்தகம் போட்டு, செலவுகளை விவரமாக எழுதி, ரசீதுகளைச் சேகரித்து கணக்குப் பதிவுத்துறை அலுவலகத்தில் சமர்பித்திருக்கிறேன். தொகை சிறியதோ பெரியதோ, பணத்தைக் கவனமாகக் கையாளவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். ரசீதுகளை இணைக்கத் தவறினாலோ அல்லது செலவுகளை எழுத மறந்தாலோ நம்முடைய சொந்த பணத்தைப் போட வேண்டி வரும்.

என் பையனும் அடிக்கடி தன்னுடைய கல்வி செலவுகளுக்கு (நகலெடுக்க, பேனா வாங்க, வகுப்பு தேர்வெழுத பேப்பர் வாங்க) பணம் வேண்டி வந்து நிற்பான்.

அவனுடைய செலவுகளுக்கு நான் மாதம் இருமுறை ஒரு சிறிய தொகையைக் கொடுத்து வருகிறேன். செலவுகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துவைத்து 15 நாட்களுக்கு ஒரு முறை செலவுகளைக் காண்பித்து என்னிடம் கையொப்பம் வாங்கிக் கொள்கிறான். அந்தக் கணக்கை முடித்து அடுத்த 15 நாட்களுக்கு ஒரு சிறிய தொகையைக் கொடுக்கிறேன்

சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல ஒரு சிறந்த பழக்கமாக இருக்கும் என நம்புகிறேன். பணத்தை எப்படிச் செலவு செய்யவேண்டும், எப்படிக் கணக்கு வைக்க வேண்டும், செலவு தலைப்பை எப்படி எழுதவேண்டும், அனாவசிய செலவு எது ? அதைத் தவிர்ப்பது எப்படி? அத்தியாவசிய செலவு எது ? ஒவ்வொரு பைசாவும் எங்கே போகிறது எதற்காகச் செலவாகிறது எனப் பணத்தைப் பற்றிய புரிதல் மற்றும் ஒழுங்கு முறையைக் கொண்டு வர  சிறந்த பயிற்சியாக அமையும்.

இப்போது செலவு கணக்குகளை அதற்கென உள்ள நோட்டுப் புத்தகத்தில் எழுதி கையப்பம் வாங்க என்னிடம் காண்பிக்கிறான்.  சின்ன, சின்னத் திருத்தங்களை அவ்வப்போது சொல்கிறேன். நாளை கல்லூரிக்குச் செல்லும்போதோ அல்லது விடுதியில் தங்கி படிக்கும்போதோ, படித்து முடித்த பின் வேலைக்குப் போகும்போதோ இதைப் பின்பற்றும் போது பணத்தை லகுவாகக் கையாள கற்றுக்கொண்டிருப்பான்.

இப்பொது இன்னும் ஒருபடி மேலே சென்று வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ரசீது வாங்க சொல்லி வலியுறுத்துகிறேன். எந்தக் கடையிலும் கொடுக்க மாட்டார்கள், இருந்தாலும் கேட்கச்சொல்லி இருக்கிறேன், அதையெல்லாம் இணைத்து செலவுகளைக் காண்பிக்கச் சொல்லி இருக்கேன்.

நீங்களும் இத்தகைய நடைமுறையை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.

பெரியவர்களாகி, நாளை சம்பாதித்து நம் கையில் கொடுக்கும்போது நம்மிடம்
கணக்கு கேட்காமல் இருந்தால் சரி தான்...

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் தொலைக்காட்சி



புதிய வரவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் தொலைக்காட்சிப்பெட்டி தான் எங்கள் வீட்டின் இப்போதைய சென்சேஷன்.

நீண்ட நாட்களாக இருந்த பழைய வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி வெறும் ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது (நன்றி:olx.com). கிட்டத்தட்ட 10 வருடம் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன் வண்ண மறைந்து நிறம் மாறியதால், புதிய தொலைக்காட்சிப்பெட்டி வாங்க திட்டமிட்டோம். பிரபல அலைபேசி நிறுவன வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட் தொலைக்காட்சிப்பெட்டி நன்றாகயிருப்பதாக நண்பர் சொன்னார். விலை ரூபாய் 15000/-. ஜனவரி முதல் ஸ்மார்ட் தொலைக்காட்சிப்பெட்டிக்கான சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டதால் விலை ரூபாய் 13999/- விலையில் வாங்கினோம்.  பிராண்ட் ஸ்மார்ட் தொலைக்காட்சிப்பெட்டியில் உள்ள HD தரத்திலான ஒளி ஒலி அமைப்பு மற்றும் பல அம்சங்கள் இதிலும் உண்டு.

இன்று நம் பிள்ளைகளுக்கு கிடைத்த வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை.

நாங்கள் வளர்ந்துவந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச்சில வீட்டில் மட்டுமே தொலைக்காட்சிப்பெட்டி இருக்கும்.

அப்போது எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி இல்லை. ஒளியும் ஒலியும், ஞாயிறன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் மாநில மொழி திரைப்படம், ஞாயிறு மாலை நேர திரைப்படம் என எல்லாம் பக்கத்து வீட்டில் தான் பார்ப்போம்.
சில நாட்கள் கழித்து அப்பா கருப்பு வெள்ளை சாலிடர் தொலைக்காட்சிப்பெட்டி வாங்கினார். கதவெல்லாம் வைத்து அட்டகாசமாக இருக்கும். எங்க வீட்டிற்கு வந்த முதல் தொலைக்காட்சிப்பெட்டி. ரொம்ப வருடம் ஓடியது. திரைப்படம், ஒளியும் ஒலியும், வயலும் வாழ்வும், இளந்தென்றல், மனைமாட்சி, செவ்வாய் இரவு 8 மணி நாடகம், புதன் தோறும் ஒளிபரப்பாகும் சித்ரஹார், சனிக்கிழமை ஒளிபரப்பாகும் இந்தி திரைப்படம்  என விடாமல் பார்ப்போம். அந்த அளவுக்குத் தொலைக்காட்சிப்பெட்டி மீது எங்களுக்கு ஒரு கிரேஸ். பிறகு தொலைக்காட்சி சேனல்கள் பெருகப்பெருக அப்பா ஒரு கலர் டிவி வாங்கினார். அது இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது.

நாங்கள் வாடகை வீட்டில் வசித்தப்போது.  உரிமையாளர் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சிப்பெட்டி இருக்கும். காசுகொடுத்தெல்லாம் ஞாயிறு திரைப்படம் பார்க்க மக்கள் வருவார்கள். ஒளியும் ஒலியும் பார்க்க 25 பைசாவும், ஞாயிறு திரைப்படம் பார்க்க 50 பைசா வசூல் செய்த காலமும் உண்டு.

அதேபோல் நாங்கள் வாசித்த தெருவில் ஒருத்தர் வீட்டில் விசிஆர்-இல் சனிக்கிழமை தோறும் திரைப்படங்கள் போடுவார். நுழைவு கட்டணம் ஐம்பது பைசா.

இப்ப கூட என்ன மாறிவிட்டது.. காசு கொடுத்தால்தான் தொலைக்காட்சி சேனல்களை பார்க்க முடிகிறது.

எங்கள் ஊரில் விசிஆர்-இல் ஒரே இரவில் மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் போடுவார்கள். இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் திரைப்படம் பார்க்கச் செல்வோம். அதற்குக் கட்டணம் ரூபாய் இரண்டு அல்லது மூன்று நினைக்கிறன். ஆனால் மொத்த படமும் பார்க்க முடியாது முதல் படம் முழுசாகப் பார்ப்போம், இரண்டாவது படம் கஷ்டப்பட்டுப் பார்ப்போம், மூன்றாவது படம் தொடங்குவதற்குள் நாங்கள் ஆழ்ந்த நித்திரையில் இருப்போம். விடியற்காலையில் எழுந்து வீட்டுக்கு வருவோம். சிந்துபைரவி, முந்தானை முடிச்சு, கௌரவம், நான் சிகப்பு மனிதன், ஆண் பாவம் இது போல ஏகப்பட்ட படங்கள் இப்படிப் பார்த்தது தான். விலை அதிகம் என்பதாலோ என்னவோ அப்பா விசிஆர் வாங்கவில்லை.

மாமா வீட்டில் விசிஆர் இருந்தது. கோடை விடுமுறை முடியும் வரை தினமும் திரைப்படம் பார்ப்போம். புதிய திரைப்படக் காஸெட் வந்தால் தவறாமல் எங்களுக்கு ஒரு பிரதி அனுப்பிவிடுவார் காஸெட் கடைக்காரர். வாடகை ரூபாய் பத்து.

சரி Back to ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் தொலைக்காட்சிப். தொழிற்நுட்ப வசதிக்கேற்ப தொலைக்காட்சி பார்க்கும் அனுபவம் மாறிவிட்டது.

தொலைக்காட்சிப்பெட்டியை Idot Box என்று சொல்வார்கள். ஆனால் அச்சொல் மாறி நீண்ட நாட்கள் ஆகிறது. Entertainment ஆக இருந்த தொலைக்காட்சி Infotainment ஆக மாறிவிட்டது. டேட்டா கார்டை சொருகினால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் தொலைக்காட்சிப்பெட்டியில் Freeze ஆகியுள்ள ஏகப்பட்ட தொகுப்புகளான இணையநிகழ்ச்சிகள், திரைப்படங்கள், இணையத்தொடர்கள்,  இணையத்தொலைக்காட்சிகள் என எல்லாம் உயிர் பெறுகிறது. உரிய கட்டணம் செலுத்தினால் அனைத்தையும் பார்க்கலாம்.

கைபேசி வழியாகத்தான் இணையும் பழகி வந்தோம் ஆனால் இந்த ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி வந்தது முதல் இணையநிகழ்ச்சிகளை டிவியில் பார்ப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது என்று ஒரு சர்வே சொல்கிறது. மாநில மற்றும் NCRT பாடங்கள், அறிவியல் ப்ராஜெக்ட் செய்முறை, சுயமுன்னேற்ற வீடியோக்கள் போன்று இன்னும், இன்னும் ஏராளமான யூடியூப் வீடியோக்களைப் ஸ்மார்ட் தொலைக்காட்சி வழியாக பார்க்க முடிகிறது.

இந்தாண்டு மத்தியில் JIO DTH மற்றும் JIO GIGA FIBERNET வர இருக்கிறது.  குறைந்த கட்டணத்தில் ஏகப்பட்ட சானல்களை காணும் வசதி ஏற்படும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதனால் ஆண்ட்ராய்ட் டிவியில் இணையதள நிகழ்ச்சிகளை அளவுடன் பார்ப்பது நல்லது ஏனெனில் நம்முடைய நேரத்தை அது கபளீரம் செய்துவிடுகிறது.  தொலைக்காட்சி அழுகாச்சி தொடர்கள் நம்முடைய நேரத்தை வீணடிப்பது போல இதிலும் அந்த அபாயம் உண்டு. அதனால் கவனம் தேவை, அளவாகப் பயன்படுத்தி நிறைவாக வாழுங்கள்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Monday, 24 December 2018

படி படி லேசெ மனசு(2018)

எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கிறது, வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு ரகம்.  குடும்பம், ஆக்ஷன், மற்றும் பேய் படங்கள் வந்து ஓய்ந்து பிறகு. மீண்டும் காதல் படங்கள் வந்து ரசிகனை  ஆசுவாசபடுத்தும்.  காதல் படங்களுக்கு என்றுமே மவுசு இருக்கத்தான் செய்கிறது.

இந்தாண்டின் இறுதியில் தெலுங்கில் வந்திருக்கும் Musical Romantic Comedy படம் படி படி லேசெ மனசு.

எந்த ஒரு நடிகரும் கொஞ்சநாள் தான் காதல் படங்கள் நடிக்கமுடியும். ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் திரை வாழ்வில் காதல் படங்கள் பெரு வெற்றியை தேடி தந்திருக்கும்.

சர்வானந்த் - தெலுங்கு திரையுலகில் ரன் ராஜா ரன், மல்லி மல்லி இதி ரன்னி ரோஜு,  எக்ஸ்பிரஸ் ராஜா, ராஜாதி ராஜா, ஷதமானம் பவதி, ராதா, மஹானுபாவுடு என வித்தியாசமான கதைகளில் நடித்து வெற்றிகளை குவித்துவரும் நடிகர்.  காமெடி, ஆக்ஷன் என மனிதர் கலந்து கட்டி நடிக்கிறார்.  100% பொழுபோக்கு அம்சங்கள் அவர் படங்களில் நிச்சயம் இருக்கும்.

பெரிய நடிகர் நடித்த படமும், சர்வானந்த் நடித்த 'ஷதமானம் பவதி' படமும் ஒரே நாளில் வெளியானது.  ஆனால் 'ஷதமானம் பவதி' படம் பெரிய நடிகரின் பட வசூலை பாதித்தது. குடும்ப மாண்புகளை சொன்ன 'ஷதமானம் பவதி' ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

ஃபிடா, எம்சிஏ போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவிக்கு இது மூன்றாவது தெலுங்கு படம்.

சரி விஷயத்துக்கு வருகிறேன்..... 'படி படி லேசெ மனசு...' என்ன ஒரு அருமையான பெயர்.. 'விழுந்து விழுந்து எழும் மனசு..' என்று பொருள் கொள்ளலாம். சர்வானந்த் மற்றும் சாய் பல்லவி நடித்து வெளிவந்திருக்கும் படத்தை பற்றி பார்ப்போம்.

நாயகன் விழுந்து விழுந்து நாயகியை காதிலிக்கிறான் ஒரு பூகம்பம்  அவர்களை பிரிக்க, அவர்கள் மீண்டும் எப்படி ஒன்று ஒன்று சேர்கிறார்கள் என்பது மீதி கதை.  காதல், காதல், காதல், பிரேக்-அப் மீண்டும் காதல், காதல் சுபம்.

சர்வானந்த் (சூர்யா) - சாய் பல்லவி (வைஷு) ...ப்பா  என ஒரு கெமிஸ்ட்ரி. சாய் பல்லவி துரு துரு, கண்கள்........காதல், சோகம் என வாவ்சொல்ல வைக்கிறார்...
நாயகனுக்கு முத்தத்தை மொத்தமாக வரி வழங்குகிறார் நாயகி.

விஷால் சந்திரசேகரின் இசையில் "படி படி லேசெ மனசு", "கல்லோலம்",
"ஹ்ருதயம் ஜார்பி...", "ஏமை போயாவே..","ஓ மை லவ்லி.."  போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.  பின்னணி இசை சுமார்.

ஹௌரா பாலம், டம் டம் ரயில் நிலையம், ஹூக்லி படகு குழாம், கல்கத்தாவின் நெருக்கமான வீதிகள் என ஒளிப்பதிவாளர் ஜே கே வின் கேமரா நம்மை அழைத்து செல்கிறது.

சில படங்களில் துணை கதாபாத்திரங்கள் நமக்கு பிடிக்கும் காரணம் அவர்கள் இயல்பான நடிப்பு நம்மை.  இதில் சாய் பல்லவிக்கு அப்பாவாக வரும் முரளி சர்மா வெகு இயல்பாக நகைசுவை கலந்து நடித்திருகிறார். மெயின் வில்லன், போலீஸ் என கலக்கியவர் இப்பொது அப்பா வேடங்களில் முத்திரை பதித்து வருகிறார்.

சாய் பல்லவிக்கு தோழியாக வரும் நடிகை Cute..!

இயக்குனர் ஹனு ராகவபுடியின் நான்காவது படம்  படி படி லேசெ மனசு...! இடைவேளைக்கு பிறகு படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது மற்றபடி காதல் இசை பட ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் இந்த படம்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

கே ஜி ஃஎப் - முதல் பாகம் (2018)


நவீன் குமார் கவுடா என்கிற நடிகர் யாஷ் அல்லது யஷ் - கன்னட திரையுலகின் வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டார். குறுகிய காலத்தில் பல வெற்றிப்படங்கள்.  அவருடைய சில படங்களை பார்த்திருக்கிறேன் அதில் கஜகேசரி, மாஸ்ட்டர்பீஸ், மிஸ்டர் & மிஸ்டர்ஸ் ராமச்சரி மற்றும் கூகுலி எனக்கு பிடித்த படங்கள்.  நல்ல உயரம்,  சமகால இளைஞர்களை பிரதிபலிக்கும் தோற்றம், மீசையுடன் சேர்ந்த அழகான குறுந்தாடி, ஆக்ரோஷம், நகைசுவை என கலந்து கட்டி மனிதர் ஜமாய்க்கிறார்.

கே ஜிஎப் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்தாலும், கே ஜிஎப் டிரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை  எகிற வைத்தது.  பெங்களுருவில் உள்ள என்னுடைய நண்பர் அவ்வப்போது படத்தை பற்றி  சொவதுண்டு. கண்டிப்பாக பார்க்கவேண்டியிருந்தார்.  தமிழிலும் வந்ததால் கிளம்பிவிட்டேன்.

கே ஜி எப் - Best of Neo-Noir Film in  Indian Cinema என்று சொல்வேன். கன்னட திரையுலகை திரும்பி பார்க்கவைக்கும் படைப்பு.  கோலார் தங்க வயலும் அதன் பின்னிலுள்ள ஒடுக்குமுறை, ரத்தக்கரை படிந்த அடிமை வரலாறு மற்றும் தங்க சாம்ராஜ்யத்தை கைப்பற்ற  நாயகன் நடத்தும் வேட்டை என எழுத்தாளர்  ஆனந்த் நாக் பார்வையில் விரிகிறது படம்.

நாயகன்  'ராக்கி' அறிமுகமாகும் அந்த முதல் சண்டை காட்சி அட்டகாசம். இதுபோல ஒரு அறிமுக காட்சி பார்த்து நீண்ட நாளாயிற்று.  இந்தாண்டின்
சிறந்த நாயகன் அறிமுக காட்சி.  நாயகன் யாஷ் தன்னுடைய அனாயசமாக  நடிப்பால் மிரட்டுகிறார்.  படத்தில் நாயகன் பயன்படுத்தும் பைக் வடிவமைப்பு அருமை.

இடைவேளைக்கு பிறகு வரும் தங்க வயல் காட்சிகள் நம்மை வாய் பிளக்க வைக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் கலை இயக்குனர் சிவகுமார் குழாம் உழைப்பு தெரிகிறது. கோலார் தங்க வயலை நாம் பார்த்தது இல்லை ஆனால் அது இப்படி தான் இருக்கும் என்று என்னுனமளவுக்கு தத்ரூபமாக படைத்திருக்கிறார் கலை இயக்குனர்.

கோலார் தங்க வயலில் நடக்கும் பைக் துறத்தல் மற்றும் சுரங்க அடியில் நடக்கும் சண்டைக்காட்சியை படமாக்கிய விதம் வாவ்!!

தமன்னா ஒரு  பாட்டுக்கு வந்து போகிறார். கதாநாயகி ஸ்ரீநிதி நாயகன் ராக்கி அறிமுகமாகும் பாடல் காட்சி அருமை. பின்னணி இசை காட்சிகளின் படத்தின் வீரியத்தன்மையை.  பாடல்கள் பெரிதாக மனதில் ஓட்டவில்லை.

படத்தில் வரும் எல்லா நடிகர்களும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லை ஆதாலால் படத்தில் எளிதில் ஒன்றை முடிகிறது.  படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள். ஆனால் வில்லன்களுக்கெல்லாம் வில்லன் நம்முடைய நாயகன் ராக்கி.  கிளைமாக்ஸ் காட்சி திக் திக் நிமிடங்கள்.

இது பீரியட் சினிமா ரசிகர்களுக்கானது.  அகன்ற திரையில் கண்டு சுகானுபவம் பெறுக.

கே ஜி ஃஎப் - பாகம் இரண்டுக்காக காத்திருப்போம்......

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Saturday, 15 December 2018

ஓடியன் - 2018


மோகன்லால் நடித்த எத்தனையோ படங்களை பார்த்திருக்கிறேன். அதில் என்னுடைய விருப்ப படங்கள்... ராவணபிரபு, கிலுக்கம், ஆறாம் தம்புரான், ஸ்படிகம், நரசிம்மம், சித்ரம், தேவாசுரம், கிரீடம், காலபாணி, என்னும் எப்போழும் மற்றும் தேன்மாவின் கொம்பத்து.

அவர் ஸ்டலிலிஷாக பேசும் வசனங்கள் எனக்கு பிடிக்கும்.

"சவாரி கிரி கிரி.........",  "நீ போ மோனே தினேஷா..........", "மீனுக்குட்டி...",  "முத்து காவு...",  "களி கனிமங்களத்தே தம்புரானோடு வேண்ட.."

2018 ன் மலையாள மொழியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோகன்லால் படம் "ஓடியன்". படத்தை பற்றிய செய்திகள் அவ்வப்போது படிக்க நேர்ந்தது.  சரி அப்படி என்னதான் இருக்கிறது, பார்ப்போமே என்று போனேன்.

வெளிநாட்டு பழங்குடிகள் பற்றிய சிறுகதைகளை படித்திருப்போம் / கேட்டிருப்போம். அக்கதைகளின் உள்ளடக்கம் தார்மீக அறம் பற்றி சொல்லப்பட்டிருக்கும். அறம் மீறி நடந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்கவேண்டிருக்கும் என்பது போல கதை இருக்கும்.

ஓடியன் படம் அதுபோல ஒரு கதை என்று தோன்றுகிறது. மெகா ஸ்டார் மம்முட்டி கதை சொல்ல விரிகிறது படம்.

நமது நாயகனும் தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட 'சித்து' மற்றும் 'கட்டு' வேலைகளை நியாயமான காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறான். இருந்தாலும் கொலை பழி நாயகன் மீது விழ, ஊரைவிட்டு தலைமறைவாகிறான்.

பதினைந்து வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பி வரும் தன் மீது விழுந்த பழியை எப்படி தீர்க்கிறான் என்பது மீதி கதை.

நாம் மோகன்லால் நடிப்பை எத்தனையோ படங்களில் பார்த்து  வியந்திருப்போம், இதிலும் அப்படியே. காசியில் அறிமுகமாகும் அந்த முதல் காட்சி அருமை. எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இளவயது மற்றும் முதிர்ச்சியான வயது என மாறுபட்ட கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார் Complete Actor மோகன்லால்.

பொதுநலன் கருதியோ என்னவோ 'சித்து' மற்றும் 'கட்டு' வேலைகளை பற்றிய டீடைலிங் இயக்குனர் சொல்லாமல் விட்டிருக்கலாம் என்று நினைக்கிறன்.

சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்னின் உழைப்பு ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் தெரிகிறது. அதற்கேற்றார்போல் லாலேட்டனின் எனர்ஜி லெவல் அசரடிக்கிறது.  அந்த கிளைமாக்ஸ் சண்டை காட்சி அருமை.

பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர், சனா அல்தாப், நரேன், இன்னோசென்ட், மனோஜ் ஜோஷி, சித்திக் மற்றும் நம்மூர் மொட்டை ராஜேந்திரன் (கிளைமாக்ஸ் சண்டை காட்சி) என அவரவர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.  சாம் சி எஸ் பின்னணி இசை அருமை.

கமர்சியல் பட ரசிகர்களுக்கு ஏற்ற படம் இதுவல்ல.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி