Wonderful Shopping@Amazon

Thursday 14 January 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-105

தென்கச்சி கோ. சுவாமிநாதன்

காட்சி - 1: 1893-ஆம் ஆண்டு

சுமார் 127 ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 11 அன்று, சுவாமி விவேகானந்தர், மதங்களின் பாராளுமன்றத்தின் சிகாகோ மாநாட்டில் சிறப்பான சொற்பொழிவு நிகழ்த்தினார். 1893-இல் இந்து மதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி விவேகானந்தர் சகிப்புத்தன்மை, மதம் மற்றும் அனைத்து வகையான வெறித்தனத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதன் அவசியம் குறித்துப் பேசினார்.
 
காட்சி - 2 : 1963-ஆம் ஆண்டு

"எனக்கு ஒரு கனவு இருக்கிறது"

ஆகஸ்ட் 28, 1963 அன்று வேலை மற்றும் சுதந்திரத்திற்கான வாசிங்டன் பேரணியில் அமெரிக்கச் சிவில் உரிமை ஆர்வலர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆற்றிய ஒரு பொது உரை "ஐ ஹேவ் எ ட்ரீம்", அதில் அவர் சிவில் மற்றும் பொருளாதார உரிமைகள் மீட்பு மற்றும் அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

காட்சி - 3 : 1964-ஆம் ஆண்டு

ரிவோனியா விசாரணையில் 1964 ஏப்ரல் 20 அன்று நெல்சன் மண்டேலா ஆற்றிய மூன்று மணி நேர உரையின் சாராம்சம் :"நான் இறக்கத் தயாராக இருக்கிறேன்".
 
காட்சி - 4:  2005- ஆம் ஆண்டு

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆற்றிய உரையின் முக்கியச் சாராம்சம் : "நம்மை நாமே முழுமையாக நம்புவது, எந்தத் துறையாக இருந்தாலும் தொடர்ந்து பயணிக்க வேண்டும், நீங்கள் விரும்பும் நபரை இழக்காதீர்கள், மற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள்".
 
இப்படி பேச்சைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். பேச்சு சமூக மாற்றத்தை உண்டாக்கவேண்டுமன்றி பதற்றத்தை உண்டாக்கக்கூடாது. குறைந்தபட்சம் யார் மனதையும் புண்படுத்தாமல் இருந்தால் சரி.
  
நிற்க.
 
இன்றைக்கு யார் வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். மைக் கிடைத்தால் போதும் பேசி தள்ளிவிட வேண்டியது அல்லது சமூக ஊடகங்களில் எதையாவது பேசிவிட்டுச் சர்ச்சையில் சிக்கினால் "நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை", "அது அவருடைய சொந்த கருத்து", "என்னுடைய பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது", "அது என்னுடைய பேச்சே அல்ல" இப்படிப் பல காரணங்களைப் பிரபலங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை கூறுவதை நாம் கேட்கலாம்.

சமீபத்திய உதாரணம்: பிரபல செய்தி சேனல் உரிமையாளர் மாநில அரசின் கடுங்கோபத்துக்கு ஆளானதும், பின்பு நீதிமன்ற பிணையில் வெளிவந்ததும் நினைவிருக்கலாம்.

எங்கேயோ படித்தது ஞாபகம் வருகிறது "இரண்டு வயது முதல் பேசக் கற்றுக்கொள்கிறோம், ஆனால் கடைசிவரை எப்படிப் பேச வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதில்லை" இது எனக்கும் பொருந்தும். நானும் இப்படி ஏதாவது பேசி, பிறகு முழிப்பதுண்டு.

சில நேரங்களில் அலுவலகத்தில் நாள் முழுதும், மதிய இடைவேளைக்குப் பிறகும் தொடரும் மீட்டிங்கில் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் எனக்கு வரும் தூக்கம் இருக்கிறதே.. அப்பப்பா ..கட்டுப்படுத்தவே முடியாது. இதில் மேடையில் பேசுபவர் என்னைப் பார்த்துப் பேசுவது போல இருக்கும், அந்தச் சூழ்நிலையில் உங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள் எப்படி இருக்குமென்று.

சிறு வயதில் அடிக்கடி வாரியார் ஸ்வாமிகள் அவர்களின் ஆன்மிகச் சொற்பொழிவு சென்னை தொலைக்காட்சியில் கேட்டதுண்டு.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை அயனாவரம் மார்க்கெட் பொதுக்கூட்டத்தில் திமுகத் தலைவர் கலைஞர் அவர்களின் மாமாவுடன் சென்று பேச்சைக் கேட்டிருக்கிறேன். அறிஞர் அண்ணாவின் எழுச்சிக்குப் பிறகு தான் மேடைப் பேச்சுக்குத் தமிழகத்தில் தனிக் கவுரவம் ஏற்பட்டது என்று சொல்வேன்.

தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், நடிகர் எஸ் எஸ் சந்திரன், நாஞ்சில் சம்பத் மற்றும் வைகோ இவர்களுடைய பேச்சு வெகு காலம் தமிழக அரசியல் மேடையை அலங்கரித்தது. முன்னர்ச் சொன்ன மூவரின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்கமுடியாது.

இன்றைய அரசியல் மேடைப் பேச்சு வெறும் அவதூறு நிறைந்த, சாரம் இல்லாத மற்றும் ஆவேச பேச்சாகிவிட்டது.

அண்ணா வழிவந்தவர்கள் கூட மேடைப் பேச்சில் தடுமாறுவது தான் அவலம்.

சரி நமக்கெதற்கு அதெல்லாம்.. நாம் விஷயத்துக்குச் செல்வோம்...

பிறகு அதிகம் கேட்டது காலஞ்சென்ற திருத் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களுடையது.

அம்மா சமையலறையில் எங்களுக்கும், அப்பாவுக்கும் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருப்பார். நாங்கள் பள்ளிக்குத் தயாராக இருக்கும் ஐந்து நிமிட இடைவேளையில் காலஞ்சென்ற திரு தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் பேச்சைக் கேட்டுவிடுவோம். என்னுடைய வகுப்பில் அன்றைய விவாதப் பொருள் இவர் சொன்ன கதையில் வரும் நகைச்சுவை. இவருடைய பேச்சைக் கேட்காத நாளே இல்லை எனலாம்.

வரலாற்றில் அநேகமாகத் திட்டுமென மேடை ஏற்றப்பட்டவர்கள் தான் புகழ் பெற்றிருக்கிறார்கள் என்பது என் எண்ணம். அப்படித் தான் சென்னை வானொலியில் "பண்ணை இல்லம்"விவசாய நிகழ்ச்சியில் பேசி வந்த திரு சுவாமிநாதன் அவர்கள் "இன்று ஒரு தகவல்" பேச வந்தார். அது இவ்வளவு பெரிய தாக்கத்தையும், வெற்றியையும் பெரும் என்று அவரே கூட நினைத்திருக்கமாட்டார்.
அனைவருக்கும் புரியும்படியாக எளிய குரலில், தெளிவான நடையில் குட்டிக்கதை சொல்வார், கடைசியில் சிந்தனையை தூண்டும் நகைச்சுவையுடன் கதையை முடிப்பார்.

நான் படித்து முடித்து வேலைக்குச் செல்லும் வரை அவருடைய பேச்சைத் தொடர்ந்து கேட்டு வந்தேன். இன்று அவர் நம்மிடையே இல்லையென்றாலும் அவருடைய பேச்சு இன்றும் ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது.



நன்றி: Google

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

 



No comments:

Post a Comment