Wonderful Shopping@Amazon

Friday, 3 January 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-44

நினைத்ததை முடிப்பவன் (1975)

எம்ஜிஆர் - The Don of Tamil Cinema, பாடல்களில் பிடித்த ஒன்று. இதில் எம்ஜிஆரின் Energy வேற லெவல். திரை ஊடகத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியவர் புரட்சித் தலைவர். தனி அமைப்பை உருவாக்கி விஸ்வரூபம் எடுப்பார் என்று கடைசி வரை யாராலும் கணிக்க முடியவில்லை. உற்று நோக்கினால் தனக்கான /அதற்கான கட்டமைப்பை மிக மிகப் பலமாக அமைத்துக்கொண்டார் என்றே சொல்வேன்.

சரி விசயத்துக்கு வருகிறேன், எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குநர் ப.நீலகண்டன் இயக்கிய பதினாறாவது படம் "நினைத்ததை முடிப்பவன்" படத்தில் வரும் கவிஞர் மருதகாசி எழுதி, விச்சு டார்லிங் இசையமைத்த "கண்ணை நம்பாதே" பாடல், எம் ஜி ஆர் பிறந்தநாள், நினைவு நாள் அன்று, அலுவலகம் செல்கையில், ஊர் முழுதும் இந்தப் பாடல் ஒலிக்கும், கேட்கும் போதே உற்சாகமாக இருக்கும்.

இன்றைய தமிழ் சினிமா கதாநாயகர்கள் இப்படியான பாட்டைத் தனக்கு வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தகமே. இந்தப் படத்தில் "பூமழை தூவி வசந்தம்..."என்ற இன்னொரு அருமையான பாடலும் உண்டு.





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-43


உன்னால் முடியும் தம்பி (1988) 

சென்ற வாரம் மதிய வேளையில் தொலைக்காட்சியில் இயக்குநர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கி, கமல் நடித்த 'உன்னால் முடியும் தம்பி' படம் ஒளிபரப்பானது. எப்போது போட்டாலும் பார்க்கக்கூடிய சில படங்களில் இதுவும் ஒன்று.

இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான படம், ஆனால் 32 வருடத்துக்கு முன்பே வந்துவிட்டது. குடிமறுப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, ஸ்வச்பாரத், தன்னிறைவு பெற்ற கிராம மேம்பாடு எனப் பல விஷயங்களை அப்பவே பேசியிருப்பார் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். சரியாக நான்கு வருடத்து முன்பு தான் ராஜேஷ், சரிதா நடிப்பில் 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற அரசியல் படத்தைத் தந்து அதிரவைத்தார். அதற்கும் முன்பு 1981-ஆம் ஆண்டுத் திரு கோமல் சாமிநாதன் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட 'தண்ணீர் தண்ணீர்' என்ற படத்தைத் தந்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அண்ணா ஹசாரே மற்றும் எம் எஸ் உதயமூர்த்தி அவர்களின் சமூக வாழ்க்கை பயணத்தைத் தழுவி மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்து, கே பாலசந்தர் இயக்கிய தெலுங்கு படம் 'ருத்ரவீணா' அதே ஆண்டில் (1988) ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கமலுடன் சேர்ந்து 'உன்னால் முடியும் தம்பி' என்ற படத்தைத் தமிழில் தந்தார்.

'பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை' ஜெமினி கணேசன்-'உதயமூர்த்தி'க் கமலஹாசன் இருவருக்கும் நடக்கும் அந்த Confrontation. அதற்கு இணையாக ஒலிக்கும் பின்னணி இசை ரகளையான இருக்கும்.

மரம் நாடும் தாத்தாவைப் பார்த்து Inspire ஆகும் கமல் (நாமும் தான்!). அப்போது வரும் புல்லாங்குழல் Progressive பின்னணி இசை அருமையாக இருக்கும்.

படத்தில் சீதா அறிமுகமாகும் அந்த முதல் காட்சி 'நச்'. பாலச்சந்தரின் அக்மார்க் 'டச்'. கமல்-சீதா சந்திப்பின் போது வரும் அந்தக் காதல் பின்னணி இசை (Love BGM) என்னுடைய கைப்பேசி அழைப்புமணி.

கமல்-சீதா திருமணம் நின்றுபோகும் தருணத்தில் அவர்களிருவரும் முகத்தில் காட்டும் அந்த Expressions பலே!

எப்பொழுதும் கே பாலசந்தர் படத்தில் துணைக் கதாபாத்திரங்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இதிலும் அப்படியே. மனோரமா, டெல்லிகணேஷ், நாசர், சார்லி, ஜனகராஜ், கிருஷ்ணன், ரமேஷ் அரவிந்த், தாரணி, பிரசாத் பாபு, மீசை முருகேஷ், வி கே ராமசாமி போன்றோர் கதையோட்டத்திற்கு வலுசேர்ப்பார்கள்.

இப்படி
நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். படத்தின் இன்னொரு நாயகன் ராஜாவின் இசை. ராஜாவின் ஆகச்சிறந்த படைப்பு இது.




நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-42

ர் எஸ் மனோகர்

காலஞ்சென்ற நடிகர், 'நாடக காவலர்' என போற்றப்பட்ட ஆர் எஸ் மனோகர் - தமிழ் சினிமாவின் ஒப்பற்ற நடிகர். இவர் நடித்த வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், நூற்றுக்கு நூறு, பில்லா, மற்றும் தீ   போன்ற படங்களைச் சென்னை தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன். தென்னகத்தின் 'ஜேம்ஸ் பாண்ட்' ஜெய்சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய வில்லன், வில்லனின் கையாள் என கர கர குரலில் மிரட்டலாகத் தனது நடிப்பை வழங்கியிருப்பார். சினிமாவில் வில்லன், நிஜத்தில் புராண மேடை நாடகம் மீது தீரா காதலும், அர்ப்பணிப்பும் கொண்ட கலைஞன். இவருடைய சம கால நடிகர்கள் பலர் மேடை நாடகத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தாலும். இவரின் 'நேஷனல் தியேட்டர்ஸ்'  நாடகக் குழு 'இலங்கேஸ்வரன்', 'சாணக்கிய சபதம்' , 'சூரபத்மன்', 'சிசுபாலன்', 'இந்திரஜித்', 'சுக்ராச்சாரியார்', 'நரகாசூரன்' மற்றும் 'திருநாவுக்கரசர்' போன்ற பிரமாண்ட அரங்க அமைப்புகள் கொண்ட மேடை நாடகங்களில், மந்திர-தந்திர காட்சிகள், போர்க்கள காட்சிகள் எனப் பல புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை மகிழ்வித்தவர். ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கும் நாடகத்தைப் பார்க்கக் கூட்டம் அலைமோதும், திரும்ப, திரும்பப் பார்த்து வியந்தவர்கள் உண்டு. சாணக்கிய சபதம் மற்றும் நரகாசுரன் நாடகங்களைச் சென்னை தூர்தர்ஷனில் அப்போது ஒளிபரப்பானது. இவர் கேரளாவிலோ, கர்நாடகாவிலோ அல்லது ஆந்திராவிலோ பிறந்திருந்தால் இவருக்குப் பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் கொடுத்துக் கௌரவித்திருப்பார்கள்.  இவர் மேடையில் நிகழ்த்திய மாயாஜாலத்தை இனியொருவர் நிகழ்த்துவது சாத்தியமில்லை. இதோ அவருடைய நாடகத்தின் சிறிய பகுதியினை கண்டுகளியுங்கள்:



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி