Wonderful Shopping@Amazon

Friday, 5 June 2015

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்




உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

     செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் 
பொருள்: உங்கள் வீட்டு புழக்கடைத் தோட்டத்து தடாகத்துள் செங்கழுநீர் மலர்கள்
மலர்ந்து, கருநெய்தல் மலர்கள் பூத்துக் குவிந்துள்ளன.

அடுக்ககத்தில் வாழும் இன்றய தலைமுறையினருக்கு புழக்கடையின் அருமை பெருமை
தெரிய வாய்ப்பில்லை.

புழக்கடை, பேக்கடை, புறக்கடை, கொல்லைப்புறம் என்று அழைக்கபடுவது
வேரொன்றும் இல்லை, கிராமத்தில் வீடு கட்டும் போது பின்புறம் சிறிது
இடம் விட்டு கட்டுவார்கள் அதுவே புழக்கடை.

இன்றய நவீன யுகத்தில் புழக்கடை வழக்கொழிந்து விட்டது. இன்று 400‍-600 சதுர 
அடியில் வாழ்க்கை சுருங்கிவிட்டது. புழக்கடை இருந்த இடம் இன்று இரண்டு  
அறைகள் கொண்ட வாடகை வீடாகி விட்டது.

எங்கள் கிராமத்து பாட்டி வீட்டில் இன்றும் புழக்கடை உள்ள வீடு உண்டு.

எப்போதும் வற்றாத கற்கிண்று அதை ஒட்டி பெரிய தொட்டி மற்றும் குளியல்/
கழிப்பறைகள், மாட்டுக்கொட்டில், கோழி/கிடாய் அடைக்க சிறிய கூண்டுகள்,
பெரிய வேப்பமரம். மா, வாழை,முருங்கை, மரங்கள், பாகல், பூசணீ, முல்லை
படரும் கொடி, மற்றும் கத்திரி, வெண்டை செடிகள் வகைகள் ஆகியவை
அடங்கிய தோட்டம். மாட்டு சாணம், கோமியம் தான் புழக்கடை தோட்டதிற்கு
இயற்கை உரம்.

கொல்லைப்புற தோட்டத்து மூலையில், ஓலை வேய்ந்த பந்தலின் கீழ் விறகடுப்பு. சில சமயம், எண்ணெய் பலகாரம் மற்றும் முக்கிய அசைவ உணவு சமையல் பதார்தங்கல் அங்கு தயாராகும். மற்றபடி வெண்ணீர் / பால் வைக்கவும் பயன்படும்.

பாட்டி அதிகாலையில் எழுந்து பால் கறந்து, மாடுகளுக்கு தண்ணீ காட்டி, தொழுவத்தை
சுத்தபடுத்தி, சூரியன் வருவதற்குள் எல்லா வேலையும் முடித்து கறந்து பால் உமி அடுப்பில்
சூடாயிருக்கும். 

கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு செல்லும் நாங்கள், பாட்டிக்கி உதவ வேண்டி ஆளுக்கு 5 குடம் வீதம் கிணற்று நீரை இறைத்து தொட்டியை நிரப்புவோம்.

பாட்டி தன் வாழ்நாள் முழுதும் புழக்கடையில் தான் செலவிட்டாள். புழக்கடை தான் அவள் உலகம். ஏதோ ஒரு வேலையை இழுத்து போட்டுகொண்டு செய்வாள். அந்த சுறுசுறுப்பு, எனர்ஜி என்னை வியக்கவைக்கும்.  இயற்கையோடு இயைந்த வாழ்வு.

கொல்லைப்புற தோட்டத்து முருங்கை, கத்திரிகாயில் செய்யும் பொரியல், சாம்பார், கார  
குழம்புக்கு தனி சுவை உண்டு.

சிறிய துளசி மாடம், வேப்ப மர அடியில் சிறிய விளக்கு மாடம் (குலதெய்வத்திற்காக வேண்டி)  வருடா வருடா குலதெய்வப்படயல் வேப்பமரத்தின் அடியில் உள்ள சாமிக்கு.

கோடைக்காலத்தில் பிற்பகலில் புழக்கடையில் கயிற்று கட்டிலில் குட்டி தூக்கம் போடுவது பரமசுகம்.  கொல்லைப்புறம் கோடையில் எப்போதும் குளூமையாக இருக்கும்.

தாயம், பல்லாங்குழி, ஏழாங்காய், கேரம், மாமரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது என எங்கள் பொழுது புழக்கடையில் கழியும்.
 
படர்ந்திருக்கும் கொடி முல்லை பூவை பறித்து, அப்போதே கட்டி அம்மாவின் தலையில் வைப்பாள் பாட்டி.

வேலை ஆட்கள் புழக்கடை வாசல் வழியே நுழைந்து வேலையை முடித்துவிட்டு அப்படியே சென்று விடுவார்கள்.

அடுத்த தெருவில்லுள்ள நூலகம், அண்ணாச்சி கடைக்கு செல்ல புழக்கடை வாசல் வழியே எளிதில் சென்று விடலாம்.

வீதி உலா வரும் சாமியை புழக்கடை வாசலில் நின்றே சேவிப்போம். எங்கள் தெருவுக்கு வர நேரமாகும் ஆதாலால்.

நீண்ட நாட்களூக்கு பிறகு சமீபத்தில் ஊருக்கு சென்ற போது, பாட்டி வீட்டு புழக்கடை அடையாளம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. புழக்கடை இருந்த இடத்தில் மாமா மூன்று போர்ஷன் கட்டி வாடகை விட்டிருந்தார். கற்கிணறு மட்டுமே எஞ்சிருந்தது. பழைய நினைவுகளோடு அங்கிருந்து கிளம்பினேன்.




                                                            -காளிகபாலி
                                                                                   
              

No comments:

Post a Comment