இன்று எங்கள் அலுவலக கேன்டீனில் மாலை சிற்றுண்டி சமோசா.
சமோசா என்ற பெயரில் ஏதோ ஒன்று செய்து போட்டார்கள். உள்ளே பூர்ணம் சுவையாக இல்லை. வெளிப்புறம் பாதி வெந்து பாதி வேகாத மாதிரி இருந்தது. எது செய்தாலும் சாப்பிட ஒரு கூட்டம் எங்கள் அலுவலகத்தில் உண்டு.
முன்பு இருந்த கேன்டீன் காண்ட்ராக்டர் சமோசாவை வெளியில் இருந்து வாங்கி வந்து போடுவார். சில நேரங்களில் பெரிய சமோசா அல்லது இரானி சமோசா கிடைக்கும். கூட்டம் அள்ளும். கூப்பன்கள் பறக்கும். வீட்டிற்கு பார்சல் வாங்கி செல்வார்கள் நம் மக்கள். சீக்கிரம் தீர்ந்து போய்விடும். ஒரு கட்டத்தில் யாரோ நிர்வாகத்திடம் புகார் தட்ட. அதோடு சமோசா சிற்றுண்டி நிறுத்தப்பட்டது.
விக்கிப்பீடியாவில் சமோசாவை பற்றி நாலு பக்கத்துக்கு தகவல்கள் நீள்கிறது. சமோசா 14 ஆம் நூற்றாண்டில அரேபியாவிலுருந்து இந்தியாவுக்கு வந்த சிற்றுண்டி. மொகலாய சமையல் கலைஞர்கள் பலவித சுவைகளில் தங்களது அரசர்களுக்கு விருந்து படைத்தார்கள். சமோசாவில் உள்ளே வைக்கும் பூர்ணம் மாமிச துண்டு, பாதாம் முந்திரி மற்றும் உருளைகிழங்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது. அரசவை விவாதங்களில் இடம்பெற்ற முக்கிய சிற்றுண்டி. அரசர்களை சந்திக்க வரும் முக்கிய விருந்தினர்களுக்கு பிரியாணியுடன் பரிமாறப்பட்ட சிற்றுண்டி. சன்புசா என்ற பெயர் மருவி சமோசா ஆனது.
வடஇந்தியாவில் சமோசாவிற்கும் தென்னிந்தியா சமோசாவிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சுவையும் வேறுபாடும்.
தென்னிந்தியாவில் சோமார்ஸ் என்ற அரைவட்ட வடிவில் உள்ளே இனிப்பு பூர்ணம் வைத்து தயாரிக்கப்படும் சிற்றுண்டியை சுவைத்திருக்கலாம். திருமணம் மற்றும் இதர விசேஷங்களுக்கு வரிசை தட்டில் வைக்கப்படும் முக்கிய சிற்றுண்டி. பின்னர் விழாவிற்கு வந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
தீபாவளி பண்டிகை பலகாரங்களில் இடம் பெற்ற முக்கிய இனிப்பு பண்டம். தீபாவளிக்கு பத்து நாளுக்கு முன்னமே செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் நம் வீட்டு பெண்கள். காலம் மாறிவிட்டது இப்போது எல்லாம் இனிப்பகங்களில் முன்கூட்டியே எண்ணிக்கையை சொல்லிவிட்டால் அவர்கள் செய்து தந்துவிடுவார்கள்.
சரி இப்போது விசயத்துக்கு வருவோம்.
சுவையான சமோசுவிற்கு நான் எப்போதுமே நான் ரசிகன். முன்பு நுங்கபாக்கத்தில் வேலை செய்யும் போது ஹாட் சிப்ஸில் சுட சுட சமோசா சாப்பிட்டுவிட்டு தான் வீட்டுக்கு பஸ் ஏறுவேன். அலாதியான சுவை உள்ளளே பூர்ணம் முந்திரி பருப்பு சேர்த்த உருளைக்கிழங்கு மசாலா. தொட்டு கொள்ள தக்காளி சாஸ்.
ரிச்சி தெரு, பாரிஸ் கார்னர் இரண்டாவது கடற்கரை சந்து, மற்றும் அண்ணாசாலை அண்ணா - சாந்தி திரையரங்கம் மத்தியில் உள்ள டி கடையில் கிடைக்கும் டீயும் இராணி சமோசா அற்புதமான இணை.
புரசைவாக்கம் சரவணா பவன் உணவகம் நேர் எதிரில், டைலர்ஸ் ரோடு, அயனாவரம் தபால் நிலையம் வாசல் இங்கெல்லாம் மாலை வேலையில் தள்ளு வண்டியில் தயாரிக்கபடுக்கபடும் மினி சமோசா சாப்பிட ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.
இப்போது வடஇந்தியர்கள் ஆங்காங்கே தள்ளு வண்டியில் சமோசா சுண்டல் மசாலா விற்பதை பார்க்கலாம். சுவை சுமார் ரகம் தான். சுகாதாரம் கேள்விக்குறி மற்றும் அங்கே குடிக்க வைக்கப்படும் தண்ணீர் அவ்வளவு சுத்தமாக இல்லை. சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிப்பது நல்லது.
என்னுடைய இப்போதைய பிடித்த இடம் தேவி திரையரங்கம் பின்புறம் உள்ள பாம்பே லஸ்ஸி கடை அங்கே சுட சுட விற்கப்படும் சமோசா (ரூபாய் 12 ) சுவையானது. கட்ச்சோரி, பாஸந்தி மற்றும் லஸ்ஸி எல்லாமே நல்ல சுவை. சுகாதாரமான இடம். தண்ணீர் சரில்லை. வீட்டு தண்ணீர் நிரப்பிய பாட்டில் எப்போதும் கைகளில் இருப்பது உசிதம்.

அவர்கள் தயாரிக்கும் சிற்றுண்டியில் உள்ள சுவை தான் வாடிக்கையாளர்களை இழுக்கிறது. தொழிலை ஒரு தவம் போல் செய்கிறார்கள் இவர்கள். நேரம் கிடைத்தால் ஒரு எட்டு போய் வாருங்கள்.
- காளிகபாலி