ஆண்பாவம்
நாங்கள் குடியிருந்த காம்பௌண்டில் திறந்தவெளியில் தொலைக்காட்சி-விசிஆரில் பார்த்தப்படம்.
எந்த இயக்குநர்-நடிகருக்கும் கிடைக்காத அதிர்ஷ்ட வாய்ப்பு, இவருக்கு இரண்டாவது படத்திலும் கிடைத்தது.
அடர்த்தியான கதையம்சமுள்ள படம் (முதல் படமும் கூட), நான்கு படத்துக்குண்டான கதையை, ஒரே படமாக எடுத்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.
நகைச்சுவை நாயகனாகக் கதாநாயகன், ஜனகராஜ், தவக்களை மற்றும் பசி நாராயணன் எனப் படம் முழுதும் நகைச்சுவை தர்பார். அதற்கிணையாக நேர்கோட்டில் சீரியசாகப் பயணிக்கும் கதை. ரீல் ஒன்று முதல் கடைசி ரீல் வரை இப்படி அப்படியென்று உங்களால் நகரவே முடியாது.
அடுத்து, ராஜாவின் இசை பங்களிப்பு. பெண் பார்க்கும் இடத்தில் வரும் பின்னணி இசை மற்றும் பாண்டியன், சீதா சந்திப்பு நிகழும் அந்தக் காட்சியில் வரும் பின்னணி இசை, ஒற்றைப் புல்லாங்குழலில் ஆரம்பித்து அப்படியே வீணையில் தாவி வயலின் குழுவில் முடிந்து சலசலவென அருவி போல் கொட்டும்.
இந்தக் காட்சியை இயக்குநர் எப்படியெல்லாம் யோசித்திருப்பார், அதை உள்வாங்கி ராஜா எப்படி இசையமைத்தார் ...? இருவரும் சேர்ந்து நிகழ்த்திய மாயாஜாலம் நம்மை வியக்கவைக்கிறது.
வாங்க அந்தப் பின்னணி இசையைக் கேட்டு ரசிப்போம்:
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி