Wonderful Shopping@Amazon

Wednesday, 16 December 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-104

ராஜாவின் டவுன் பஸ் பாடல்கள்

காலை 6.00 மணி

கும்பகோணம் பேருந்து நிலையம் - திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலுக்குப் பரிகார பூஜை செய்ய மயிலாடுதுறை செல்லும் தனியார் பேருந்தில் உட்கார்ந்திருந்தோம். பயணிகள் வர வர பேருந்து நிரம்பியது. அப்போது பாடல்களை ஒலிக்கவிட்டார் ஓட்டுநர். 'கோவில்காளை' படத்தில், பாடகர் மனோ மற்றும் ஜானகி அம்மா பாடிய "சோலைக்குயில்கள் ரெண்டு " என்ற இனிமையான முதல் பாடல், பேருந்து கிளம்பியிருந்தது. பேருந்தில் அருமையான ஒளியமைப்புச் செய்திருந்தார்கள். பாடலில் இடைஇடையே வரும் தபேலா இசைக்கருவியின் சத்தம் கூடத் துல்லியமாகக் கேட்டது. இரண்டாவதாகப் 'பாண்டிய நாட்டுத் தங்கம்' படத்திலிருந்து "சிறு கூட்டுல..." பாடல் ஒளிபரப்பானது, அதற்குள் நாங்கள் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்ததால் இறங்கிவிட்டோம். கோவிலிலிருந்து தாங்கும் விடுதிக்குத் திரும்பியவுடன் இந்தப் பாடலை அலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இளையராஜா பாடல்களைக் கேட்கத் தமிழகம் முழுதும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யவேண்டும் வேண்டுமாம் - இது நண்பனின் ஆசை. நீங்கள் தொலைக்காட்சியில் கேளுங்கள், அலைபேசியில் கேளுங்கள், சிறந்த தலையணியுடன் கேளுங்கள், வானொலியில் கேளுங்கள், காரில் கேளுங்கள் ஆனால் எல்லாவற்றையும் விடப் பேருந்தில் பயணம் செய்யும்போது ஜன்னலைப் பார்த்துக்கொண்டே இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும்போது (அதே பாடல்கள் தான்) ரம்மியமாக ({வேறு மாதிரி) இருக்கும்.

ஒரு முறை தனியார் மொபஸல் பேருந்தில் பயணம் செய்யும்போது, இனிமையான ராஜா பாடல்கள் பயணத்தைச் சுகமாக்கியது. 'சகலகலா வல்லவன்' படத்தில் இடம்பெற்ற "நிலா காயுது ..." பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. பேருந்திலிருந்த பயணிகள் கொஞ்சம் நெளிய ஆரம்பித்தார்கள். இடையில் வரும் முத்த சத்தம் ..பயணிகள் முகத்தில் நமட்டுச் சிரிப்பு ..ஓட்டுநருக்கு என்ன தோன்றியதோ சடாரெனப் பாய்ந்து பாடலை மாற்றி விட்டார் .. என்ன செய்யச் சிலருக்கு இப்படியும் சங்கடம்.

நம்மிடம் இருப்பதை விட நம்மூர் ஓட்டுநர்களிடம் தான் இளையராஜாவின் அத்தனை பாடல்கள் அடங்கிய ஒலிநாடகள்/சிடிக்கள் இருக்கிறது. நீங்கள் பிரதி எடுக்கக் கேட்டுப் பாருங்களேன், அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்கமாட்டார்கள். எனக்குத் தெரிந்த கால் சென்டர் கார் ஓட்டுநர் வருத்தத்துடன் கூறியது : " ராஜா சார் பாட்டு கேசட்ட எவனோ ஆட்டயபோட்டான், கஷ்டப்பட்டுச் சேர்த்துவச்சது.." பின்னே உட்கார்ந்து வண்டி ஓட்டற்றவனுக்குத் தான் கஷ்டம் தெரியும், ராஜாவின் பாடல்கள் தான் அவர்களுக்குத் துணை. அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்.

இசைஞானியின் அதிகாரப்பூர்வ தலத்தில் "டவுன் பஸ் பாடல்கள் தொகுப்பை" கேட்டு மகிழுங்கள்.



நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

 


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-103

'டிக் டிக் டிக்' (1981)

வார இறுதி நாள் கமல்-மாதவி பாடல்களுடன் கழிந்தது. இதுவும் ஒரு துள்ளலான பாடல் தான். கமல்-மாதவி கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் அபாரமாக இருக்கும். மாணவர் பருவத்தில் வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல். 'மோனோ' இசை தான் அதிலேயே வயலின், கிட்டார் போன்ற இசை கருவிகளின் துல்லியமான இசை தடையின்றி காதில் பாய்ந்து, மனதில் பதிந்தது. இந்த பாடலை எப்போது கேட்டாலும் பழைய நினைவுகள் ஒன்றின் பின் ஒன்றாக நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கி, கமல்-மாதவி நடித்து 1981-ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான 'டிக் டிக் டிக்' படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதி, ராஜா சார் இசையில் இடம்பெற்று, தாசேட்டன்-ஜென்ஸி பாடிய "பூ மலர்ந்திட .." என்ற இனிமையான Semi-classic பாடல்.  நடனத்தின்போது மாதவியின் கண்கள் அப்பப்பா Scorching Beauty.. என்ன ஓர் பாவம். பாடல் இடையில் தாசேட்டன் "ஐலவ்யூ, ஐலவ்யூ..ஐ லவ் யூ"....... என ஹம் செய்யும் அழகே அழகு.

"படுக்கையில் பாம்பு நெளியுது
தலையணை நூறு கிழியுது
நீ அணிகிற ஆடையில் ஒரு நூலென தினம்
நான் இருந்திட ஸநிதப மபதநி.."
 
சரி, நீங்களும் இந்த பாடலை கேட்டு ரசியுங்கள்:


 
நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி