Wednesday, 25 July 2018

கோவில் திருக்குளங்கள்

எந்த கோவிலுக்கு சென்றாலும் நான் முதலில் பார்த்து வியப்பது, பரந்து விரிந்திருக்கும் அழகான திருக்குளமும் அதன், விஸ்தாரணமும்.

பிரசித்திபெற்ற கோவில்களுக்கு தொலைதூரத்திலுருந்து வரும் யாத்ரீகர்கள்  நீராட  பண்டைய காலத்தில் அமைக்கப்பட்டதே திருக்குளங்கள்.  அதுமட்டுமல்ல ஊரின் தண்ணீர்  தேவையையும்  அது பூர்த்தி  செய்தது திருக்குளங்கள்.  திருக்குளம் கோவிலுக்கு அணிகலன் போன்றது, அழகு சேர்ப்பவை,

புகழ் பெற்ற கோயில் குளங்களில் உள்ள நீர் பிரம்ம தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம் என இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

திருக்குளங்கள் நாட்டின் பொக்கிஷம். நீங்கள் உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் நம்முர் திருக்குளங்கள் போன்ற அமைப்பை வேறெங்கும் காணமுடியாது.  திருவெள்ளறை ஸ்வஸ்திக் திருக்குளம், கர்நாடகாவில் உள்ள ஹூலிக்கெறே கல்யாணி திருக்குளம், குஜராத்தில் உள்ள உலகப்பிரசித்திபெற்ற ராணி கா வாவ் குளம் ஓர் உதாரணம்.  இப்பொது புதிய நூறு ரூபாய் தாள்களில் ராணி கி வாவ் படத்தை காணலாம்.

திருவேலங்காடு கோவில் குளம், திருவாரூர் கமலாலயம் திருக்குளம், மதுரை மாரியம்மன் தெப்பகுளம், திருவள்ளூர் வீரராகவ சுவாமி திருக்குளம், கும்பகோணம் மகாமக திருக்குளம் போன்றவை தமிழ்நாட்டில் உள்ள பெரிய குளங்களில் ஒன்று.

திருக்குளம் பல அறிய வரலாற்று நிகழுவுகளை நமக்கு நினைவு படுத்துகிறது. 

திருப்புலீச்சரத்து திருக்குளத்திலே மூழ்கி திருநீலகண்டநாயனாரும் மனைவியாரும் மூப்புப்பருவம் நீங்கி, இளைமைப்பருவம் உடையவர்களாய்ப் பிரகாசித்தார்கள்.

திருஞானசம்பந்தருக்கு அன்னை பராசக்தி ஞானபால் தந்தது சீர்காழி சட்டைநாதர் கோவில் பிரம்மா தீர்த்த குளத்தங்கரையில். இன்றும் சாட்சியாக இருக்கிறது.

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் திருக்குளம் "சங்கு தீர்த்தம்" என்றழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இவ்வாறு கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.  2011-ம் ஆண்டு இக்குளத்தில் சங்கு கிடைத்துள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் அமிர்தசரஸ் என்னும் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.  வசந்த மண்டபத்தில் 10 நாட்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள். நின்ற கோலத்திலும், சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார்.  1939 மற்றும் 1979 ம் ஆண்டுகளில் நடந்த இந்த வைபவம் அடுத்து 2019 ம் ஆண்டு நடக்கும்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் பொற்றாமரைக் குளம் சிறப்பு மிக்க ஒன்று.  சிவபெருமானை பூஜிப்பதற்காக இந்தக் குளத்தில் இருந்துதான், பொன் தாமரை மலரைப் பெற்றான் இந்திரன்.
திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப் பலகை இந்தத் திருக்குளத்தில் தோன்றியதாக தல வரலாறு தெரிவிக்கிறது. ஒரு நாரைக்கு சிவபெருமான் அருளியபடி, இந்தப் பொற்றாமரைக் குளத்தில் மீன்களும், இன்னபிற நீர்வாழ் உயிரினங்களும் இல்லாமல் இருப்பது இன்றும் காணப்படும் அதிசயங்களில் ஒன்று.  பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, பொற்றாமரைக் குளத்தில் இருந்து நக்கீரரை உயிர்ப்பித்துக் கொடுத்தார் சிவபெருமான்.

திருப்பதி தேவஸ்தானம் திருக்குளத்தை நன்கு பாராமரிக்கிறது.  திருமலையில்  ஶ்ரீவராகசாமி ஆலயம் அருகே திருக்குளம் உள்ளது. குளத்தில் குளித்துவிட்டு ஶ்ரீவராகசாமியை  தரிசித்து விட்டு, பின்பு பெருமாளை தரிசிக்க செல்ல வேண்டும்.

குளத்தில் உள்ள மூன்றாவது படியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள், நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும், காரணம்? அங்கே கொங்கணர் சித்தர் ஜீவசமாதி ஆனவர்.  ரசவாதம் அறிந்தவர். மக்கள் வறுமையில்லாமல் இருக்கவேண்டும் என்று ஒரு மலையையே தங்கமாக மாற்ற முயன்றவர். அந்த முயற்சி ஆரம்பிக்கும் போதே சிவனால் தடுக்கப்பட்டு திருமலைக்கு அனுப்பப்பட்டவர். இப்போது புரிகிறதா! ஏன் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படுகிறதென்று?

மேலும், பெருமாளுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் இந்த குளத்தில் தான் கலக்கிறது.

சென்ற வருட கோடை விடுமுறைக்கு மதுரை சென்றபோது, மதுரை மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றோம். மாரியம்மன் தெப்பக்குளம் வற்றிபோய் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். "மதுர மரிக்கொழுந்து வாசம்....." பாடலில் வரும் தெப்ப குளமா இது என்று தோன்றியது.

திருவள்ளூர் வீரராகவ சுவாமி திருக்குளம் முழுதும் நிரம்பியதை சிறுவயதில் கண்டிருக்கிறேன். இப்போதைய நிலை பற்றி சொல்ல வேண்டாம்......

கோடை பள்ளி விடுமுறைக்கு திருவேலங்காட்டில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு செல்லும் முன் அம்மா என்னை "குளதாண்ட போவாதே" என எச்சரிக்கை செய்வாள்.  குளத்துபடிகளில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது எனக்கு பிடிக்கும்.

ஒரு முறை ஆந்திராவில் உள்ள நந்தியால் கோவிலுக்கு இரவு போய் சேர்ந்தோம்.  விடியற்காலையில் குளத்தில் குளிக்க சென்று தண்ணீர் குளிராக இருக்குமென கால் வைக்க தயங்கினோம், மாறாக குளத்து நீர் வெது வெதுப்பாக இருந்தது. பிறகென்ன நன்றாக குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்தோம்.

எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் திருக்குளத்தில் குளித்துவிட்டு தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். இதுதான் ஐதீகம். ஆனால் குளிக்கும் நிலையில் குளங்களை இல்லை என்பதே உண்மை. கழிவு நீர் கலப்பு, பாசி படிந்த படிகள், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள், குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு கடைகள்.  குளத்தில் கால் வைக்கவே பயமாக இருக்கிறது 

சமீபத்தில் திருப்போரூர் முருகன் கோவில் குளத்தில் கால் அளம்பிவிட்டு ஸ்வாமியை தரிசிக்க செல்லலாம் என்று இறங்கினால், படி முழுதும் பாசி படர்ந்து வழுக்கையாக இருந்தது.  அங்குள்ளவர்கள் எச்சரித்தததால், குளத்தை பார்த்துவிட்டு திரும்பிவிட்டேன்.

ஏரி, குளங்களைய நாம் விட்டு வைக்கவில்லை, கோவில் குளங்களை சும்மா விடுவோமா.

புரசைவாக்கம் டேங்க் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடைகளுக்கு பின்னே கொஞ்சம் எட்டி பாருங்கள், மிகப்பெரிய குளம் தெரியும்.

பூவிருத்தமல்லி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடைகளுக்கு பின்னே பார்த்தால் மிகப்பெரிய குளம் தெரியும்.

இது போல் பல ஊர்களில் திருக்குளத்தை மறைத்து நிறைய ஆக்கிரமிப்புகளை காணலாம்.

மழைக்காலத்தில் சாலையில் சேகரமாகும் / வழிந்தோடும் நீர் எல்லாம் திருக்குளத்தில் விழும் படி மற்றும் ஏரி நிரம்பினால் உபரி நீர் திருக்குளத்தில் சேர பின்பு அது நிரம்பி உபரி நீர் வேறு குளங்களுக்கு  சேரும்படி நம் முன்னூர்கள் வழி செய்தார்கள்.  ஆனால் நாம் அதையெல்லாம் அடைத்துவிட்டு தண்ணீர் புகாதபடி செய்துவிட்டோம்.

ஆயிரம் குளங்களை வெட்டலாம் ஆனால் ஒரு திருக்குளத்தை கூட நம்மால் உருவாக்க முடியாது.

- காளிகபாலி

No comments:

Post a Comment