Wonderful Shopping@Amazon

Thursday, 1 August 2019

நன்றி எழுதுதல்


நீங்கள் இதுவரை, இன்று வரை உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவிய நபர்கள், பொருட்கள் அல்லது சம்பவங்களுக்கு நன்றி கூறியதுண்டா?

முதல் முதலில் உங்கள் கையைப் பிடித்து எழுத்தறிவித்த அந்த ஆசிரியையை எப்போதாவது நினைப்பதுண்டா?

உங்களுக்கு முதல் முதலில் வேலை கற்றுக் கொடுத்த அந்த நபர் பெயர் நினைவில் உண்டா?

இது போல எத்தனையோ விஷயங்களை மறந்திருப்போம், அவற்றையெல்லாம் மனத்திரையில் / நினைவுக்குக் கொண்டு வந்து நன்றி தெரிவிப்பது தான் இந்தப் பயிற்சியின் நோக்கம்.

நன்றிக்கு வள்ளுவர் தந்த வாக்கு.

குறள் 101:
செய்ந்நன்றி அறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வரதராசன் விளக்கம்:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

சரி விஷயத்துக்கு வருவோம்....

எப்படி ஆரம்பிப்பது ?ஒரு நோட்டுப் புத்தகம் அல்லது பழைய டைரி மற்றும் பேனா.

காலை எழுந்தவுடன் நடைப் பயிற்சி / உடற்பயிற்சி / யோகா பயிற்சி எதுவோ அது முடித்தவுடன், நோட்டுப் புத்தகத்தில் அன்றைய தேதியிட்டு பத்து வரிகள், நபருக்கோ, சம்பவத்துக்கு அல்லது பொருட்களுக்கோ நன்றி தெரிவித்து

எழுதவேண்டும். பிறகு நோட்டுப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அன்றைய தினசரி வேலையைத் தொடங்குங்கள். அதே போல், இரவு படுக்கப் போகும் முன் பத்து வரிகள் அன்று நடந்த விஷயங்களுக்கு நன்றி தெரிவித்து எழுதவேண்டும்

இதை அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். ஒரு நாள் எழுத முடியவில்லை என்றால் அல்லது மறந்துவிட்டாலோ, பிரச்சனையில்லை மறுநாள் தொடரவும்.

எதைப் பற்றி எழுதுவது?
எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். உங்கள் கற்பனையே உச்சம்.

நம் முன்னோர்களுக்கும், பெற்றோர்களுக்கும், நம் குலத்தைக் காக்கும் குலதெய்வத்துக்கும், உண்ணும் உணவுக்கும், உணவை விதைத்து, அறுவடை செய்த விவசாயிக்கும், உணவை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்த அத்தனை பேருக்கும், உணவை வாங்க உதவும் பணத்துக்கும், பணத்தை ஊதியமாகக் கொடுக்கும் நாம் பணிபுரியும் நிறுவனத்துக்கும், உடுத்தும் உடைக்கு, உடையைத் தைத்த தைலக்காரருக்கும், குடிக்கும் நீருக்கும், சுவாசிக்கும் காற்றுக்கும், ஆரோக்கியமான உடலுக்கும், ஒத்துழைக்கும் உடல் அவயங்களும். எழுதும் பேனாவுக்கும், எழுத கற்றுக் கொடுத்த ஆசிரியைக்கும் - இப்படி நன்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

எப்படி எழுதுவது ?
  • இன்றைய இனிய காலைப் பொழுதுக்கு நன்றி.
  • எனக்கு முதல் முதலில் எழுத்து சொல்லக் கொடுத்த ......... ஆசிரியைக்கு நன்றி.
  • இன்று காய்கனிகள் வாங்க உதவிய பணத்துக்கு நன்றி.
  • எப்போதும் என்னை வழிநடத்தும் அந்த இறைவனுக்கு நன்றி.
  • தாகத்தைத் தீர்த்த தண்ணீருக்கு நன்றி.
  • பிறருடன் தொடர்புகொள்ள உதவியாக இருக்கும் என் கைப்பேசிக்கு நன்றி.
  • ..........................................................................................நன்றி.
  • .........................................................................................நன்றி.
  • .......................................................................................................நன்றி.
நன்றி எழுதுவதால் ஏற்படும் பலன்கள்:
  • மன அமைதி
  • தன்னைப் பற்றிய தெளிவான சிந்தனை
  • மனதை எளிதாக ஒரு விஷயத்தில் குவித்தல்.
  • இரவு ஆழ்ந்த தூக்கம்.
  • நல்ல எண்ணங்கள்
  • செய்யும் வேளையில் ஒழுங்கு, நேர்த்தி.
  • ஆரோக்கியமான உடல் நலம்.
Gratitude Writing கூகிள் செய்து பாருங்கள், ஏராளமான தகவல்களை அள்ளிக் கொட்டும். அதிலிருந்து எடுத்து, தொகுத்துத் தமிழ்ப் படுத்தி உங்களுக்குத் தந்திருக்கிறேன். பயனடையுங்கள்.

"நன்றி எழுதுதல்" பற்றிய விஷயத்தைச் சொல்லிக் கொடுத்த Epic Recap Jay அவர்களுக்கு நன்றி.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி