மா பலா வாழை என முக்கனிகளில் முதல் கனியான மாம்பழ சீசன் முடிய இன்னும் சில நாட்களே உள்ளது.
மாங்கனி ஒரு சமத்துவ கனி. சிறியவர் முதல் பெரியவர் வரை, ஏழை, பணக்காரன் என எல்லா தரப்பினரும் விரும்பு உண்ணும் ஒரு கனி மாங்கனி.
நமது உணவுகளில் இடம்பெறும் ஒரே கனி மாங்கனி. கனிகளுக்கெல்லாம் அரசன் மாங்கனி; ஆம் இது ராஜகனி; தேவகனி.
ஆப்பிள், திராட்சை, கொய்யா, சாத்துக்குடி இத்தியாதி, இத்தியாதி என எல்லா கனிகளுக்கு ஒரு நிரந்தர சுவை இருக்கும். ஆனால் மாங்கனிக்கு மட்டுமே ஒவ்வொன்றுக்கும் தனி தனி சுவை.
Image from Google |
கோடை வந்துவிட்டால் மாங்காய் கார பச்சடி, மாங்காய்-வெள்ளம் இனிப்பு பச்சடி, கத்திரிக்கா-முருங்கை-மாங்காய் கலந்த சாம்பார், மாங்காய் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள மாம்பழம் என மாங்காய் /மாம்பழ நுகர்வு எங்கள் வீட்டில் மிகுதியாக இருக்கும்.
சமீப காலமாக எங்கள் குடும்பத்தின் மாம்பழ நுகர்வு குறைந்துகொண்டே வருகிறது . காரணங்கள் பல இருந்தாலும் செயற்கை முறையில் பழுக்கவைத்து மாம்பழங்கள் விற்கப்படுகிறது. அதை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாகவே வாங்க அச்சமாயிருக்கிறது.
கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் இருக்கும்போது, கொத்தவாள்ச்சாவடியிலுருந்து மாமா இரண்டு வெற்றிலை கூடை நிறைய செந்தூரா மற்றும் நீளம் வகை மாம்பழம் வாங்கி வருவார். சாப்பிட அவ்ளோ சுவையாக இருக்கும்.
கொட்டி போன சிறு சிறு மாங்காய் வகை ஒன்று உண்டு. பாட்டி மொத்தமாக வாங்கி வந்து அறிந்து, உப்பு போட்டு வெய்யிலில் காயவைத்து ஊறுகாய் தயாரித்து, ஹார்லிக்ஸ் பாட்டிலில் நிரப்பி அம்மாவுக்கு கொடுத்து அனுப்புவாள். சில மாதங்கள் வரும். அலாதியான சுவையாக இருக்கும். இப்பொது அது போல ஊறுகாய் போட்டு கொடுக்க பாட்டி இல்லை.
இப்பொது ஊறுகாய் போட யாரும் மெனக்கெடுவதில்லை, எல்லா வகையான ஊறுகாய்கள் சந்தையில் பாட்டிலில் அடைத்து சல்லிசான விலையில் சந்தையில் விற்கப்படுகிறது.
"வெறும் மாங்காய் அதோடு சேர்த்து பச்சைமிளகாய் ஒரு கடி கடித்து தயிர் சாதம் அல்லது பழைய சாதத்தோடு சாப்பிட ரணகள சுவையாக இருக்கும்" - இது ஒரு நண்பரின் அனுபவம்.
அதுமட்டுமா மாங்காய்த் துண்டுகள் தொட்டுக்கொள்ள உப்பு, மிளகாய் - இது
அபார சுவையுடைய காம்போ.
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்கள் இப்பொது சர்வ சாதாரணமாக சந்தையில் கிடைக்கிறது. சௌகார்பேட் மின்ட் தெருவில் சுவையான உலகப்புகழ் பெற்ற ரத்னகிரி மாம்பழம் நல்ல விலையில் கிடைக்கிறது. வாங்கி சுவைக்கலாம்.
வருடம் முழுதும் மற்ற பழங்களை விற்று பெரும் இலாபத்தை விட மூன்று மாதங்களில் மாம்பழங்கள் ஈட்டி தரும் இலாபம் அதிகம் - இது ஒரு பழக்கடைக்காரரின் கூற்று.
Image from Google |
நான் குடியிருக்கும் வீட்டில் ஒரு மாமரம் உண்டு. சீசனில் நல்ல கனி கொடுக்கும் மரம் அது. காலையில் கதவை திறந்தால் அணில் கடித்து /சாப்பிட்டு போட்ட மாங்கனிகள் / துகள்கள் கீழே விழுந்து கிடக்கும். அந்த இரண்டு மாதம் மரத்தில் வாழும் அணில்களுக்கு கொண்டாட்டம் தான்.
கிருஷ்ணகிரியில் நடத்தப்படும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி சென்னையில் நடத்தினால், என்னை போன்ற சென்னைவாசிகளுக்கு எத்தனை வகை மாங்கனிகள் உண்டு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எங்கள் தெருவில் நீண்ட நாட்களை பூட்டி இருக்கும் ஒரு வீட்டின் வாசலில் உள்ள மாமரத்தில் பழங்கள் பழுத்து கிழே விழுந்து கிடக்கிறது. ஆனால் எடுக்க தான் ஆள் இல்லை. தன வீட்டில் விளைந்த மாம்பழங்களை சாப்பிட கொடுப்பினை இல்லை போலும் அந்த வீட்டின் உரிமையாளருக்கு.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி