Wonderful Shopping@Amazon

Wednesday, 17 January 2018

மூன்று பல்புகள்


இப்போதெல்லாம் திரையரங்கில் படம் பார்ப்பது பிடிக்கிறது. சமீபத்தில் பார்த்த மூன்று படங்கள்.

வேலைக்காரன் : 'தனிஒருவன்' போல அல்லது சேரி வாழ் மக்கள் சிரமங்களை சொல்லும் ஒரு பொலிடிகல் திரில்லராக இருக்கும் என்று போனால் உணவு கலப்படம், அது இது என்று எங்கெங்கோ கொண்டு போய் கடைசியில் கம்யூனிசம் போதிக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.

அஞ்ஞாதவாசி: திருவிக்ரம் ஸ்டைலிஷ் இயக்குனர், அவருடைய படங்களில் வசங்கள் தெறிக்கும். ஆக்ஷன் பிளாக் பிரமாதமாக இருக்கும்.

திருவிக்ரம், பவன் கல்யாண்  இதற்கு முன்பு ஜல்ஸா, அத்தரின்டிக்கி தாரேடி போன்ற படங்களில் இணைந்திருக்கிறார்கள். அதனால் அஞ்ஞாதவாசி படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியது. தமிழ் படத்துக்கு இணையாக சென்னை மற்றும் புறநகர் புகுதிகளில் உள்ள  திரையரங்கில் அஞ்ஞாதவாசி திரையிடப்பட்டது.  பவன் கல்யாணுக்கு சென்னையிலும் ரசிகர் கூட்டம் உள்ளது போலும். எனக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது அத்தரின்டிக்கி தாரேடி போல ஒரு முழுநீள ஆக்ஷன் + குடும்ப சென்டிமென்ட் படமாக இருக்கும் என்று போனேன்.

அத்தரின்டிக்கி தாரேடி எனக்கும் என் பசங்களுக்கும் பிடித்த படம். மா தெலுங்கு தொலைக்காட்சியில் எப்போது போட்டாலும் பார்ப்போம். முதல் ரீல் முதல் கடைசி ரீல் வரை விறுவிறு திரைக்கதை அமைத்திருப்பார் திருவிக்ரம். உயிரோட்டமான தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மற்றும் இனிய பாடல்கள்.

அத்தரின்டிக்கி மற்றும் அஞ்ஞாதவாசி ஏறக்குறைய ஒரே கதை போல இருக்கிறது. அதில் ஆரம்பத்தில் எம்.எஸ் அம்மா பாடல் ஒலிக்கும் இதில் டி,கே பட்டம்மாள் பாடல்.

அதில் கதாநாயகன் வீட்டு பெயர் - 'நந்தா' இதில் 'விந்தா'.
அதில் போமன் இரானி தாத்தா இதில் அப்பா.
அதில் கதாநாயகன் 'கார் ஓட்டுநர்' இதில் 'அந்தரங்க உதவியாளர்'
அதில் நதியா அத்தை இதில் குஷ்பு வளர்ப்பு அம்மா.
இரண்டிலுமே கதாநாயகன் தன்னுடைய இருப்பை மறைத்து வாழ்வான்.

அத்தரின்டிக்கியில் நகைசுவை அபாரம் அஞ்ஞாதவாசியில் நகைசுவை பகுதி குறைவு. ஆக்ஷன் கோரியோக்ராபி இரண்டிலுமே அருமை. அதுமட்டும் போதுமா,,...!

பச்.. இந்தமுறை திருவிக்ரம் மாஜிக் மிஸ்ஸிங்.

ஸ்கெட்ச்: ஸ்கெட்ச் டிரெய்லர் நன்றாக இருந்ததால், சரி விக்ரம் எதிரிகளை ஸ்கெட்ச் தூங்குவார் போல என்று நினைத்து போனால், இங்கே தவணை நிலுவை கட்டாத வண்டியை தூக்குகிறார். நிச்சயமாக விக்ரமுக்கு ஏற்ற கதை இதுவல்ல. விக்ரம் என்ற ஆளுமையை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறன்.
சரி மேலும் எதற்கு பல்பு வாங்கவேண்டும் என்று மற்றைய இரண்டு படத்துக்கு போகாமல் தவிர்த்து விட்டேன்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி
 

Monday, 1 January 2018

அம்மாவின் சமையல்

தனி குடித்தனம் வந்த புதிதில் அம்மாவின் சமையலை ரொம்பவே மிஸ் செய்தேன். மின்சாரம் (சம்சாரம்) அப்போது தான் தனியாக சமைக்க ஆரம்பிதித்திருந்தாள். அவள் வைக்கும் சாம்பார், ரசம் மற்றும் காரக்கொழம்பு எல்லாம் ஒகே தான், ஆனால் காரசாரம் இல்லாதிருந்தது. எப்படியோ அட்ஜஸ்ட் செய்து சாப்பிட்டேன். இப்பொது பரவாயில்லை நன்றாக சமைக்கிறார்.

அம்மா சமைத்த சிலவற்றை நினைத்து பார்க்கும் பொது, இன்றைய இளையதலைமுறைக்கு இதெல்லாம் செய்ய தெரியுமா என்று தெரியவில்லை. 

வெந்தய குழம்பு:முதல் நாள் இரவு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து விடுவார். மறுநாள் காலை குக்கரில் சாம்பார் பருப்புடன்  வெங்காயம், தக்காளி ஊறவைத்த வெந்தயம் வேகவைத்து. பருப்பு கடையும் மண் சட்டியில் இவையெல்லாம் கொட்டி கடைந்த பிறகு தாளித்தால் வெந்தயம் குழம்பு தயார். மூன்று வேளையில் வெந்தயகுழம்பு வெவ்வேறு இணையில் சாப்பிடுவோம். அதில் தொட்டு கொள்ள அரிசி வத்தல் -வெந்தய குழம்பு சாதம் ஜோரான இணை.  மறுநாளைக்கும் வெந்தய குழம்பு நன்றாக இருக்கும்.
உப்பு உருண்டை: ஊறவைத்த பச்சரிசியை முறுக்கு மாவு பதத்துக்கு அரைத்து, தாளித்து கொள்ள வேண்டும்.பின்பு கையால் உருண்டை பிடித்து இட்லி குக்கரில் வைத்து ஆவி பிடித்து இறக்கி.ஆறிய பிறகு சாப்பிட்டால் அபார சுவையாக இருக்கும்.  தொட்டு கொள்ள கார சட்னி அல்லது அப்படியே சாப்பிடலாம். சனிதோறும் எங்கள் இரவு சிற்றுண்டி இது.
ஆட்டு குடல் கறி: ஞாயிறு  காலை ஆட்டு குடல் வாங்கி வந்து 4 -5 முறை  நன்றாக சுத்தம் செய்த பிறகு குக்கரில் வேக வைத்து, கறி குழம்பு போல் செய்வார்.  நன்றாக வெந்து குடல் பஞ்சு போல் இருக்கும். சுட சுட சாதத்துடன் குடல் கறி குழம்பு ஊற்றி சாப்பிட்டால் கொண்டா கொண்டா என்று இறங்கும்.
ஹோட்டல் சாம்பார்: தீபாவளி, பொங்கல், எங்கள் பிறந்தநாள் போன்ற விசேஷ நாட்களில் அம்மா ஹோட்டல் சாம்பார் செய்வார். அதிகாலை  வெங்காயம், தக்காளி மற்ற துணை பொருட்கள் தயாராக இருக்கும். பருப்பு வெந்தவுடன் எல்லாவற்றையும் போட்டு வதக்கி, பின்பு கடைந்து சிறிது நேரத்தில் ஹோட்டல் சாம்பார் தயார் செய்துவிடுவார். இன்னொரு அடுப்பில் இட்லி வெந்துகொண்டிருக்கும். கேசரி, ஹோட்டல் சாம்பார் மற்றும் இட்லி எங்கள் வீட்டின்  Signature டிஷ். சமீபகாலமாக மின்சாரமும் ஹோட்டல் சாம்பார் நன்றாக சமைக்க ஆரம்பித்திருக்கிறார்.

வெண்ணை - நெய்: இப்பொது பல நிறுவனங்களின் நெய் சந்தையில் கிடைக்கிறது.  அம்மா எப்போதுமே வெண்ணை வாங்கி வந்து அதை பக்குவமாக காய்ச்சி உபயோகப்படுத்துவார்.வெண்ணெயை காய்ச்சி அடுப்பு அணைக்கும் முன்பு முருங்கை இலையைசிறிது கிள்ளி போடுவார். அது பொரிந்ததும் தனியாக எடுத்து கேழ்வரகு மாவுடன் கலந்து  சர்க்கரை சேர்த்து எங்களுக்கு கொடுப்பார்.  அது சுவையுடன் இருக்கும். வெண்ணை காய்ச்சும் போதெல்லாம் தவறாமல் கிடைக்கும் இது.

சாதாரண ரசம் சாதத்துக்கு வேர்க்கடலை வறுத்து உப்பு மிளகாய் தூள் கலந்து வைத்து விட்டால் போதும், ஜம்மென்று சாதம் இறங்கும்.

கருவாட்டு குழம்பு, கேழ்வரகு களி, கேழ்வரகு கஞ்சி, உளுத்தம் கஞ்சி, மிளகு குழம்பு இதெல்லாம் அரிய உணவுவகைகளாகிவிட்டது.

நாங்கள் இளம்வயதில் சாப்பிட்ட உணவில் இருந்த சுவை, மனம், தரம்  எங்கள் பிள்ளைகள் சாப்பிடும் இன்றைய உணவில் இல்லை என்பதே உண்மை.  ஒரு முழுமையான ஊட்ட சத்து உணவு வீட்டில் கிடைத்தது. இப்பொது முழுமையான ஊட்டச்சத்தை ஈடுகட்ட நம் பிள்ளைகளுக்கு எதை எதையோ வாங்கி கொடுக்க வேண்டிருக்கிறது.

ஹோட்டல் உணவு எங்கேயாவது வெளியூர் போகும்போது தான் சாப்பிடமுடியும். இப்பொது மாதம் இரண்டு அல்லது ஒரு நாள் ஹோட்டல் உணவு கட்டாயமாகிவிட்டது.

அடுப்பில் சமைக்கும் போதும் சரி,  எரிவாயு அடுப்பில் சமைக்கும் போதும் சரி  திட்டமிட்டு சீக்கிரம் சமைத்து விடுவார் அம்மா. அதே வேகத்தில் வேலைக்கு செல்லும் அப்பாவுக்கும், பள்ளி / கல்லூரி செல்லும் எங்களுக்கும் மதிய உணவு கட்டி கொடுத்துவிடுவார்.

நாம் சைக்கிள் ஓட்ட பழகிக்கொண்டிருக்கும்போது நமது அம்மாக்கள் துரித
சமையலுக்கு தேவையான தொழிற்நுட்பங்களை கற்றுக்கொண்டு அநாயசமாக அதை உபயோகப்படுத்திக்கொண்டிருந்தார்கள். என்ன புரியலையா....? அதான் சட்னி/ மசாலா அரைக்க மிக்ஸி, இட்லி மாவரைக்க கிரைண்டர், குளிக்க வெந்நீர் வைக்க வாட்டர் ஹீட்டர், குக்கர், மின் அடுப்பு போன்றவைகள். வீட்டிலாகட்டும் அல்லது அலுவலகத்திலாகட்டும் புதிய தொழிற்நுட்பங்களை விரைந்து கற்றுக்கொள்வது பெண்களே...!

மசாலா, கோதுமை மாவு, இட்லி மாவு, சீயக்காய், புட்டு மாவு, மிளகாய் தூள் எல்லாமே நேரடியாக அரவை இயந்திரத்தில் அரைத்து உபயோக படுத்தினர் நமது அம்மக்கள். இப்பொது சந்தையில் கிடைப்பதெல்லாம் ஆயத்த சமையல் பொருட்கள். விலை மலிவு, சுவை குறைவு.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி