Wednesday, 25 July 2018

இட்லி

நீங்கள் அசல் இட்லி எப்போது சாப்பிட்டீர்கள்?

வயதான நண்பர் சொல்வதை கேளுங்கள் :

"தீபாவளி அன்று தான் எங்கள் வீட்டில் இட்லி. எப்படா பொழுது  விடியப்போகிறது என்றிருக்கும். தீபாவளிக்கு முதல் நாளே  அம்மா மாவு அரைத்து தயாராக வைத்துவிடுவாள். அப்பா தீபாவளி அன்று காலை சீக்கிரம் எழுந்து ஆட்டுக்கறி வாங்கி வந்துவிடுவார். நாங்கள் குளித்து முடித்து வந்தவுடன் அம்மா இட்லி, கறி குழம்பு மற்றும் கேசரி, அப்பாவுக்கு மட்டும் கொஞ்சம் கார சட்னி. என எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருப்பாள். சாமி கும்ப்பிட்டுவிட்டு சாப்பிடுவோம்.  அம்மாவின் கைமணம், இளம் ஆட்டுக்கறியின்  சுவை, பூ போன்ற  இட்லி அடுத்த தீபாவளி வரை தாங்கும்.

மதியத்துக்கு தலைக்கறி குழம்பு பெரிய பாத்திரத்தில் மிதமான சூட்டில் அடுப்பில் வெந்துகொண்டிருக்கும்.  அதை தவிர யாரவது முக்கிய விருந்தாளி வந்தா தான் எங்கள் வீட்டில் இட்லி."

இது என் கதை:

"என்னங்க டிபன் ரெடி பண்ணட்டுமா"

"வேண்டாம் நான் கேன்டீனில் சாப்பிட்டுகிறேன்"

அன்று கேன்டீனில் காலை சிற்றுண்டி இட்லி-வடகறி-சட்னி  இட்லியை பிய்த்து வடகறியில் தோய்த்து வாயில் வைக்கிறேன், அதிர்ச்சி. இட்லி வேகவே இல்லை. சரி அடுத்த இட்லி... அதுவும் அதே கதை. அப்படியே வைத்து விட்டு வந்து விட்டேன்.  பேசாமல் வீட்டிலேயே சாப்பிட்டிருக்கலாம்

சமீபத்தில் எங்கள் அலுவலக கேன்டீனில் 11 வகை தோசை மேளாவை நடத்தினார்கள்.  இட்லியே ஒழுங்கா சுட தெரியவில்லை தோசை மேளாவாம்.!

இட்லி என்ற பெயரில் எதையோ உண்டு வாழ்கிறோம் நாம்.

நம்மாளுக என்னதான் பிஸ்ஸா, பர்கர், பாஸ்தா என்று சாப்பிட்டாலும் கடைசி புகலிடம் நம் இட்லி தான்.  ஆனால் நம்மவர்களுக்கு அந்த பழைய பக்குவம் மறந்து நீண்ட நாட்கள் ஆகிறது.  இட்லி நன்றாக மென்மையாக இருக்க வேண்டி, இட்லிக்கு மாவு அரைக்கும் போது  சில இடங்களில் ஜவ்வரிசி, வெள்ளை அவுல் இன்னும் பல பொருட்கள் சேர்க்கப்படுகிறது.


சிறந்த இட்லிக்கான குறிப்பு:

- 4 பங்கு புழுங்கல் அரிசி
- 1 பங்கு உளுத்தம்பருப்பு அதனுடன் ஒரு டீஸ்பூன் வெந்தயம்

இதில் உளுந்து ஒரு மணி நேரம் ஊறினால் போதும்.
அரிசி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

முதலில் உளுந்தை கிரைண்டரில் போட்டு நன்கு குடையக் குடைய அரைக்க வேண்டும். முதலிலேயே தண்ணீர் அதிகம் ஊற்றாமல் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்க வேண்டும். ஒரு முக்கால் மணி நேரம் உளுந்து நன்கு மசிந்ததும் /அரைத்ததும் உளுந்தை எடுத்துவிட்டு அரிசியைப் போட்டு அரைக்கவும். அரிசியை ரொம்ப வழு வழுப்பாக அரைக்காமல் சிறிது நற, நறவென்று அரைத்து உளுந்துடன் சேர்த்து உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

இட்லிக்கு தொட்டுக்கொள்ள சரியான பதார்த்தம் எது ?

மிளகாய் பொடி, ஹோட்டல் சாம்பார், பாம்பே சட்னி, நிலக்கடலை சட்னி, வெங்காய சட்னி, பூண்டு கார சட்னி, சிக்கன் குழம்பு, ஆட்டுக்கால் பாயா, மீன் குழம்பு, மட்டன் குழம்பு,

பதார்த்தங்கள் வீட்டுக்கு வீடு மாறுபடும். என்னுடைய சாய்ஸ் முன்பு அம்மா வைக்கும் ஹோட்டல் சாம்பார், இப்பொது 'மின்சாரம்' செய்யும் நிலக்கடலை சட்னி மற்றும் ஆட்டுக்கால் பாயா.

அம்மா மிகுதியாக உள்ள இட்லிகளை பிய்த்து மசாலா சேர்த்து திடீர் உப்புமா செய்து தருவாள்.  அதை சாப்பிட நீ, நான் என்று போட்டி போடுவோம். அவ்வுளவு சுவையாக இருக்கும்.

மூன்று இடங்களில் இட்லி சாப்பிட்டது மறக்க முடியாது

ஒன்று, திருமூர்த்தி மலை அருவியில் குளித்துவிட்டு வந்தவுடன் அங்கே உள்ள உணவகத்தில் சுட சுட இட்லி -வடை-சாம்பார் சட்னி சாப்பிட்டது.

இரண்டு, குற்றாலத்தில் கண் சிவக்க குளித்து விட்டு மூன்று வகை பதார்த்தங்களுடன் சுட சுட இட்லி சாப்பிட்டது.

மூன்று, காலை  சுவாமி தரிசனத்துக்கு பிறகு ஸ்ரீவல்லிபுத்தூர் தேரடி அருகில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட இட்லியை விட அந்த உணவாக ஊழியர் வாஞ்சையாக கேட்டு கேட்டு பரிமாறிய விதம் இன்னும் நினைவில் உள்ளது.

ஹோட்டல் சரவண பவன் ஆரம்பித்த புதிதில் சாம்பாரில் முக்கிய மினி இட்லி சுவையாக இருக்கும்.

நாங்கள் குடியிருந்த பழைய அக்ராஹாரத்தில் ஒரு பாட்டி இட்லி சுட்டு விற்கும்.  வீட்டில் ஒரு சில நாள் அம்மா டிபன் போடவில்லையென்றல் அந்த பாட்டி கடையில் தான் தம்பிகளுக்கும்  எனக்கும் சேர்த்து இட்லி வாங்கி  வருவேன். மிருதுவான இட்லி, மொறு மொறு சிறிய மசால் வடை மற்றும் காய்ந்தமிளகாய் போட்டரைத்த உடைத்தக்கடலை தண்ணீ சட்னி சுவை
பிரமாதமாக இருக்கும். சல்லீசான விலை.  இப்பொது பாட்டியும் இல்லை, இட்லி கடையும் இல்லை

லோட்டா இட்லி சாப்பிட்டிருக்கிறீர்களா? நான் சாப்பிட்டிருக்கிறேன். வழக்கமான இட்லி சட்டியில் கீழ் தட்டை எடுத்து விட்டு சின்ன சின்ன லோட்டாவில் அம்மா தாளித்த இட்லி மாவை ஊற்றி வைப்பாள். இரண்டு லோட்டா இட்லி நாலு இட்லிக்கு சமம்.  அதனுடன் தொட்டு கொள்ள ஹோட்டல் சாம்பார் நல்ல இணை.

மருத்துவர் கு சிவராமன் சொன்னது போல் உளுந்துக்கு பதில் உடைத்த கருப்பு உளுந்து  சேர்த்து இட்லிக்கு மாவு தயார் செய்கிறோம் எங்கள் வீட்டில், இட்லி நல்ல சுவையாக இருக்கிறது. நீங்களும் செய்து பாருங்கள்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

No comments:

Post a Comment