Friday, 29 June 2018

வாசிப்பே சுவாசம்

வாசிப்பு பழக்கம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு தமிழ் கற்று கொடுத்த ஆசிரியையை தான் காரணம். அவர் எப்போதும் ஏதாவது ஒரு தமிழ் புத்தகம் கையில் வைத்திருப்பார். புத்தக தலைப்பை எழுத்து கூட்டி படிப்பதுண்டு.

அப்பா எப்போதும் முடிதிருத்த எங்கள் தெருவிலுள்ள நடராஜன் அண்ணன்
முடிதிருத்த கடைக்கு கூட்டி செல்வார். அப்போது தினத்தந்தி வசிக்கும் பழக்கம் ஏற்பட, பள்ளி விட்டதும் நேராக நடராஜன் கடைக்கு சென்று அன்றைய தினத்தந்தி நாளேடை வாசித்துவிட்டு தான் வீட்டுக்கு வருவேன். இது விடுமுறை நாட்களிலும் தொடர்ந்தது  தினத்தந்தி, ராணி மற்றும் குமுதம் வரை நீண்டது. சிலசமயங்களில் நடராஜன் கடை மூடியிருந்தால் செம கடுப்பாயிருக்கும்.  எப்போதுமே நடராஜன் அண்ணன் வாசிப்பு  பழக்கத்தை ஊக்குவிப்பவராக இருந்தார். தினத்தந்தியின் எழுத்து நடை, செய்தியை சொல்லும் பாங்கு இதெல்லாம் எனக்கு பிடிக்கும். அப்போது வேறு எந்த தினசரி நாளிதழும் என்னை கவரவில்லை. அதன் பிறகு தினத்தந்தி எத்தனையோ மாற்றங்களை கண்டது.  இப்பொது வாசிப்பது தி இந்து தமிழ்.   தி இந்து தமிழில் வரும் செய்தி கட்டுரை என்னுடைய முதல் தேர்வு.  அதற்காகவே தி இந்து தமிழுக்கு மாறினேன்.

கோடை விடுமுறையில் மாமா கடையில் அவருக்கு உதவியாக இருப்பேன். அப்போது குங்குமம், மஞ்சள் மற்றும் இன்ன பிற வஸ்துகள் பொட்டலம் மடிக்க பழைய ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு மற்றும் வண்ணத்திரை    பயன்படும். மதியவேளையில் பழைய வார இதழ்களை படிப்பது வழக்கமாயிற்று.  குமுதம் நடுப்பக்க படம், விகடன் மதன் நகைச்சுவை கார்ட்டூன், கல்கண்டு லேனாவின் ஒருபக்க கட்டுரை இதெல்லாம் எனக்கு பிடித்தவை.

வாசிப்பு பழக்கம் பள்ளியை தாண்டி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முடிந்தது. 

பாட்டி வீட்டில் குடியிருந்த குடும்பத்தினர் மூலம் ஒரு இனிய நாளில் தி இந்து ஆங்கில நாளேடு அறிமுகமானது.  அர்த்தம் புரியுதோ இல்லையோ அப்படியே புரட்டி பார்ப்பது. அப்போது மூன்றாம் பக்கம் சென்னை நகர திரையரங்கில் ஓடும் சினிமாக்கள் பற்றிய பத்தி செய்தி இடம்பெறும்.  அங்கிருந்து தான் வாசிக்க தொடங்கினேன், பின்பு மெல்ல முக்கிய செய்திகள் மற்ற விஷயங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.

என்னை சுற்றி யார் யாரெல்லாம் தினசரி மற்றும் வார இதழ் வாங்குகிறார்களோ, அவர்களிடம் கூச்சப்படாமல் கேட்டு வாங்கி படிப்பதுண்டு.  கல்கி / தேவன் சிறுகதைகள் எனக்கு பிடித்தவை.

கிளை நூலகம் செல்ல ஆரம்பித்து, விடுமுறை நாள் முழுதும் நூலகத்திலேயே இருந்ததுண்டு. எங்கள் ஊருக்கு சென்றால் அங்குள்ள கிளை நூலகத்துக்கு செல்வதுண்டு. வாரம் ஒரு நாள் பள்ளியில் நூலகத்தில் உட்கார வைப்பார்கள். படிக்க புத்தகம் தந்து பிறகு வாங்கி வைத்துவிடுவார்கள்.
பள்ளியில் நடக்கும் வினா விடை போட்டியில் என்னுடைய பெயர் கண்டிப்பாக இருக்கும்.

இந்த வாசிப்பு பழக்கம் பள்ளி / பட்டய பாட புத்தகங்களையும் இயல்பாக வாசிக்க தூண்டியது. தேர்வில்  கேள்விகளை புரிந்துகொண்டு, விடைகளை சொந்தமாக எழுத உதவியது. ஒன்று முதல் பத்து வரை இரண்டாவது மொழி பாடம் இந்தி, பன்னிரெண்டாம் வகுப்பு  மற்றும் பட்டய படிப்பில் இரண்டாவது மொழி தமிழ் எடுத்து படிக்கும் அளவுக்கு வாசிப்பு பழக்கம் கைகொடுத்தது.

இப்பொது செய்திகளை / புத்தககங்களை வாசிக்க கிண்டில், அலைபேசி, இணையதளம் மற்றும் கணினி பல தளங்கள் இருந்தாலும்,  எப்போதும் புத்தகங்களே என்னுடைய பயணதுக்கு  துணை.

என்னுடைய வாசிப்பு அடுத்தகட்டதுக்கு நகரவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. முக்கிய படைப்புக்களை தீவிரமாக வாசிக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தாலும், அதற்கான சூழல் அமையவில்லை என்பதுதான் உண்மை.

நெருக்கடியான மற்றும் வறட்சியான காலகட்டத்தை கடக்க வாசிப்பு பழக்கம் துணையாயிருந்தது.

இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், நேரமின்மையால்  முடியவில்லை.

இந்த வருடம் புத்தக கண்காட்சிக்கு பையன்களை அழைத்து சென்று புத்தகங்கள்  வாங்கி கொடுத்தேன்.  எப்படியோ அவர்களும் மெல்ல வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போக போக தான் தெரியும்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

No comments:

Post a Comment