Wonderful Shopping@Amazon

Monday 27 November 2017

ராஜா தி கிரேட்


மாஸ் மகாராஜா ரவி தேஜா நடித்து தீபாவளிக்கு வந்த படம் ராஜா தி கிரேட்

பலம் வாய்ந்த வில்லனை பார்வையற்ற நாயகன் எதிர்கொள்வது தான் கதை. இதிலும் படம் முழுதும் ரவி தேஜாவின் எனர்ஜி மற்றும் இயக்குனர் அணில் ரவிப்புடியின் இயக்கமும் படத்தில் நம்மை ஒன்ற வைக்கிறது. நாயகனின் நச் அறிமுகம் கபடி ஆட்டத்தில் தொடங்குகிறது.

முதல் பத்து நிமிடம் பிரகாஷ்ராஜின் பகுதி.  வில்லனின் பலம் பற்றி  நமக்கு புரியவைத்து விடுகிறார் இயக்குனர்.

படம் முழுதும் ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் நகைச்சுவை கைகொடுக்கிறது.

நாயகனின் அம்மாவாக வரும் ராதிகாவின் நடிப்பு அருமை.

இரயில் மீது ஏறி கூகிள் உதவியுடன் வில்லனின் இருப்பிடத்தை அடையும் நாயகனின் உத்தி அருமை.

அடிக்கடி நாயகன் உதிர்க்கும் வார்த்தை (I'm blind but trained) "நான் பார்வையற்றவன் ஆனால் பயிற்ச்சி பெற்றவன்".

டார்ஜிலிங் மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் அதிரடி.

இந்திய சினிமாக்களில் பார்வையற்ற நாயகன் சோகமாக காட்சியளிப்பான், அவனனுக்கு ஒரு காதலி இருப்பாள்.  ரசிகர்களின் பரிதாபத்தை பெற நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கும்.

இந்த படத்தில் அதெல்லாம் இல்லை. இவன் மிகுந்த தன்னம்பிக்கையுடவன். எதையும் எதிர்கொள்ள பயிற்ச்சி பெற்றவன். அவன் அம்மாவே அவனது  பலம்.  காதலியின் அப்பாவை கொன்ற வில்லனை வெற்றி கொள்வான்.

இன்றைய காலகட்டத்தில்  பார்வையற்றோக்கு தகுந்த பயிற்ச்சி அளித்தால் அவர்கள் சராசரி மனிதர்கள் போல வாழ்வார்கள்.   இந்தியாவில் பார்வையற்றோர்க்கு ப்ரைளே பயிற்ச்சி மட்டுமே அளிக்கப்படுகிறது.

ஒரு சில தொழில் நிறுவனங்கள் பார்வையற்றோர்க்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.

 
மும்பை போவாயில்  உள்ள மதீரா & மைம் உணவகம் முழுக்க முழுக்க காது கேளாத மாற்றுதிறனாளிகலால் செயல்படுகிறது.  சைகை பாஷையை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது.  இதுபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிறுவனங்கள் மாற்றுதிறனாளிகளை ஆதரிக்கிறது.

சாதனை புரிந்த மாற்றுதினாளிகள் வெளிநாட்டில் ஏராளமானோர் உண்டு.  கூகிள் செய்தல் பட்டியல் நீளும். இந்தியாவில் அத்தகையோரை விரல் விட்டு எண்ணி விடலாம்.
மாற்றுதிறனாளிகளுக்கு நாம் எந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறோம் என்பதை தினசரி நாளிதழில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

எனது சகோதரரும் ஒரு மாற்றுதிறனாளி தான். அவருக்குரிய சலுகைகள் பெற ஒவ்வொரு முறையும் எவ்வளவு அலையவேண்டியிருக்கிறது தெரியுமா.

மாற்றுதிறனாளிகளுக்கு இலவச இரண்டு சக்கர வாகன திட்டத்தில் பெற எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம்.  பிறகு எங்கள் மனு நிராகரிக்கப்பட்டது காரணம் 70 சதவீத ஊனம் இருந்தால் தான் இரண்டு சக்கர வாகனமாம்.  அதாவது படுத்த படுக்கையாக  இருக்கணும் போல.  இது தான் இன்றைய நிலைமை.

- காளிகபாலி

Wednesday 22 November 2017

வேர்க்கடலை, நிலக்கடலை, கலாக்காய்



வேர்க்கடலை, நிலக்கடலை, கலக்காய் என பல பெயரில் அழைக்கபடுகிறது புரதம் நிறைந்த தின்பண்டம்.
எனக்கு மிகவும் பிடித்த திண்பண்டம்.  என்னுடய பயண பையில் வறுத்த உப்பு வேர்கடலை, கடலை மிட்டாய், மற்றும் கடலை உருண்டை போன்றவை எப்பொதும் இடம் பெறும்.

சிறுவயதில் டவுசர் பாக்கெட்டில் தின்று மிச்சம் வைத்த வேர்க்கடலை
துகள்கள் எப்போதும் இருக்கும். நாளடைவில் டவுசர் பாக்கெட் கறை படிந்து காணப்படும்.

முன்பு மாநகர மின் இரயிலில் சிறு கூடையில் “கடல, கடல ….சால்ட கடல, வறுத்த கட்ல, டைம் பாஸ் கடல” என் அண்ணாக்கள் கூவி கூவி விற்பார்கள். சிறு மூடி அளவு ஓரு ரூபாய், இரண்டு ரூபாய் கடைசியில் ஐந்து ரூபாய் வரை ஆனது.  வீடு வந்து சேரும் வரை அதன் சுவை நாக்கில் இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கென்று தனி வாடிக்கையாளர்களும் உண்டு.  காலமாற்றத்தால் அவர்கள் மறைந்து போனார்கள்.  இப்போது அனைத்தும் பாக்கெட்களில், குறைந்தபட்ச விலை பத்து ரூபாய்.

மார்க்கெட்டில் ஒரு படி வேர்க்கடலை ரூபாய் 30/- இரண்டு படி ரூபாய் 50/-  உப்பு போட்டு வேக வைத்து பசங்களுக்கு சாப்பிட கொடுக்கலாம். சிறந்த மாலை சிற்றுண்டி.

இப்போது அவித்த கடலை விற்கப்படுகிறது சுமார் ரகம் தான். அதிக உப்பும், பழையதும் கலந்து விற்கப்படுகிறது. சிலது பருப்பு இல்லாமல் காலியாக இருக்கும்.

தள்ளு வண்டியில் மணலில் வறுத்த வேர்க்கடலை, அது வேறு வித சுவை. அதில் உள்ள எண்ணை பசை உறிஞ்சப்பட்டு, கடலை பொன்னிறமாக மொறு மொறுவென்று இருக்கும்.

வீட்டில் பெரும்பாலும் காலை சிற்றுண்டியான இட்லி, தோசைக்கு வேர்கடலை சட்னி ஜோரான இணை.

புளியோதரை, எலுமிச்சை சாதம், சாம்பார் சாதமாகட்டும், ரசம்  சாதமாகட்டும், பகலோ, இரவோ தொட்டுக்கொள்ள எண்ணையில் பொரித்து, உப்பு, மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா கலந்த வேர்கடலை போதும். சாதம் இறங்கிவிடும்.
கேழ்வரகு களியுடன் தொட்டுக்கொள்ள வேர்க்கடலை கெட்டி சட்னி நல்ல இணை.

ஒன்றும் பாதியாக பொடித்த வேர்க்கடலை தூள் கலந்த முருங்கை கீரை பொரியலை கேழ்வரகு கூழ் உடன் குடிப்பது உடலுக்கு நல்லது.

சமீபத்தில்  அலுவலக கேன்டீனில் சாப்பிட்ட பொடித்த வேர்க்கடலை தூள் கலந்த கொத்தவரங்கா பொரியல் நன்றாக இருந்தது.

இப்பொழுது பிரட் மேல் தடவி சாப்பிட வேர்க்கடலை பசை பாட்டிலில் அடைத்து விற்கப்படுகிறது. கொஞ்சம் விலை அதிகம்.  வாங்கி வந்த இரண்டு நாளிலேயே பசங்க காலி செய்து விடுகிறார்கள்.

எனது முதல் விமான பயணித்தின்போது குளிர்ந்த பீர் உடன் தோல் உரித்த வறுத்த உப்பு வேர்க்கடலையும் சேர்த்து தந்தார்கள்.

வயலில் விளைந்த இளம் வேர்க்கடலை கொத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

சமீபத்தில் என்னுடைய நண்பர் கோவில்பட்டியிலுருந்து வேர்க்கடலை பர்பி வாங்கி வந்தார்.  சுட சுட செய்து கொடுத்ததாக சொன்னார்.  சுவை அபாரம்.

வருடா, வருடா, பெங்களூருவில் அரசு மற்றும் விவசாயிகள் இனைந்து பசவனகுடியில் நடத்தும் பிரசித்தி பெற்ற கலக்காய் திருவிழா நவம்பர் மாதம் நடக்கும்.  கர்நாடக மாநில விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நிலக்கடலையை சிவனுக்கு காணிக்கை செலுத்துவார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டகளிருந்தும் விவசாயிகள் நிலக்கடலை கடை விரிப்பார்கள், வித, விதமான கடலை ரகங்கள் வாங்கியும், வகை வகையான கடலை தின்பண்டங்கள் சுவைத்தும் மகிழலாம்.  நமது மாநில எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரி, தரமபுரி விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த கடலை ரகங்களை விற்பதை காண்லாம்.  வாய்ப்பு கிடைத்தால் ஒரு நடை போய் வாருங்கள்.

கர்நாடக மாநிலம் சிந்தாமணி எனும் ஊரில் ஒரு வித கார சுவையுடன் வறுத்த வேர்கடலை விற்கிறார்கள்.  அவ்வூரில் இது பிராதான தொழில்.  அவ்வூரிலிருந்து யாராவது உறவினர் சென்னை வந்தால் நமக்கும் சேர்த்து வாங்கி வருவார்கள்.

சரி, இவ்வளவு அருமை பெருமை வாய்ந்த நிலக்கடலை பயிரை / கடலைச் சாகுபடியை பிரபலப்படுத்தியவர் திரு.வளவனூர் கோவிந்த அய்யர் என்ற சாதனையாளர். அவர் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.  அவசியம் அதை பற்றி தெரிந்து கொள்வோம், இதோ இந்த சுட்டியை அழுத்தவும்: http://solvanam.com/?p=30613
- காளிகபாலி

Monday 20 November 2017

சன்புசா என்ற சமோசா



இன்று எங்கள் அலுவலக கேன்டீனில் மாலை சிற்றுண்டி சமோசா. 

சமோசா என்ற பெயரில் ஏதோ ஒன்று செய்து போட்டார்கள். உள்ளே பூர்ணம் சுவையாக இல்லை. வெளிப்புறம் பாதி வெந்து பாதி வேகாத மாதிரி இருந்தது.  எது செய்தாலும் சாப்பிட ஒரு கூட்டம் எங்கள் அலுவலகத்தில் உண்டு.

முன்பு இருந்த கேன்டீன் காண்ட்ராக்டர் சமோசாவை வெளியில் இருந்து வாங்கி வந்து போடுவார். சில நேரங்களில் பெரிய சமோசா அல்லது இரானி சமோசா கிடைக்கும். கூட்டம் அள்ளும். கூப்பன்கள் பறக்கும். வீட்டிற்கு பார்சல் வாங்கி செல்வார்கள் நம் மக்கள். சீக்கிரம் தீர்ந்து போய்விடும். ஒரு கட்டத்தில் யாரோ நிர்வாகத்திடம் புகார் தட்ட. அதோடு சமோசா சிற்றுண்டி நிறுத்தப்பட்டது.

விக்கிப்பீடியாவில் சமோசாவை பற்றி நாலு பக்கத்துக்கு தகவல்கள் நீள்கிறது. சமோசா 14 ஆம் நூற்றாண்டில அரேபியாவிலுருந்து இந்தியாவுக்கு வந்த சிற்றுண்டி. மொகலாய சமையல் கலைஞர்கள் பலவித சுவைகளில் தங்களது அரசர்களுக்கு விருந்து படைத்தார்கள்.  சமோசாவில் உள்ளே  வைக்கும் பூர்ணம் மாமிச துண்டு, பாதாம் முந்திரி மற்றும் உருளைகிழங்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.  அரசவை விவாதங்களில் இடம்பெற்ற முக்கிய சிற்றுண்டி.  அரசர்களை சந்திக்க வரும் முக்கிய விருந்தினர்களுக்கு பிரியாணியுடன் பரிமாறப்பட்ட  சிற்றுண்டி. சன்புசா என்ற பெயர் மருவி சமோசா ஆனது.

வடஇந்தியாவில் சமோசாவிற்கும் தென்னிந்தியா சமோசாவிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சுவையும் வேறுபாடும்.  

தென்னிந்தியாவில் சோமார்ஸ் என்ற அரைவட்ட வடிவில் உள்ளே இனிப்பு பூர்ணம் வைத்து தயாரிக்கப்படும் சிற்றுண்டியை சுவைத்திருக்கலாம். திருமணம் மற்றும் இதர விசேஷங்களுக்கு வரிசை தட்டில் வைக்கப்படும் முக்கிய சிற்றுண்டி. பின்னர் விழாவிற்கு வந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

தீபாவளி பண்டிகை பலகாரங்களில் இடம் பெற்ற முக்கிய இனிப்பு பண்டம்.  தீபாவளிக்கு  பத்து நாளுக்கு முன்னமே செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் நம் வீட்டு பெண்கள்.   காலம் மாறிவிட்டது இப்போது எல்லாம் இனிப்பகங்களில் முன்கூட்டியே எண்ணிக்கையை சொல்லிவிட்டால் அவர்கள்  செய்து  தந்துவிடுவார்கள்.

 சரி இப்போது விசயத்துக்கு வருவோம்.

சுவையான சமோசுவிற்கு நான் எப்போதுமே நான் ரசிகன். முன்பு நுங்கபாக்கத்தில் வேலை செய்யும் போது ஹாட் சிப்ஸில் சுட சுட சமோசா சாப்பிட்டுவிட்டு தான் வீட்டுக்கு பஸ் ஏறுவேன்.  அலாதியான சுவை உள்ளளே பூர்ணம் முந்திரி பருப்பு சேர்த்த உருளைக்கிழங்கு மசாலா. தொட்டு கொள்ள தக்காளி சாஸ்.

ரிச்சி தெரு, பாரிஸ் கார்னர் இரண்டாவது கடற்கரை சந்து, மற்றும் அண்ணாசாலை அண்ணா - சாந்தி திரையரங்கம் மத்தியில் உள்ள டி கடையில் கிடைக்கும் டீயும் இராணி சமோசா அற்புதமான இணை.   

புரசைவாக்கம் சரவணா பவன் உணவகம் நேர் எதிரில், டைலர்ஸ் ரோடு, அயனாவரம் தபால் நிலையம் வாசல் இங்கெல்லாம் மாலை வேலையில் தள்ளு வண்டியில் தயாரிக்கபடுக்கபடும்  மினி சமோசா சாப்பிட ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.

இப்போது வடஇந்தியர்கள் ஆங்காங்கே தள்ளு வண்டியில் சமோசா சுண்டல் மசாலா விற்பதை பார்க்கலாம். சுவை சுமார் ரகம் தான். சுகாதாரம் கேள்விக்குறி  மற்றும் அங்கே குடிக்க வைக்கப்படும் தண்ணீர் அவ்வளவு சுத்தமாக இல்லை.  சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிப்பது நல்லது.

என்னுடைய இப்போதைய பிடித்த இடம் தேவி திரையரங்கம் பின்புறம் உள்ள பாம்பே லஸ்ஸி கடை அங்கே சுட சுட விற்கப்படும் சமோசா (ரூபாய் 12 ) சுவையானது.    கட்ச்சோரி, பாஸந்தி மற்றும் லஸ்ஸி எல்லாமே நல்ல சுவை. சுகாதாரமான இடம்.  தண்ணீர் சரில்லை. வீட்டு தண்ணீர் நிரப்பிய பாட்டில் எப்போதும் கைகளில் இருப்பது உசிதம்.   

மெயின் ரோட்டில் கடை இருந்தால் தான் நன்றாக வியாபாரம் ஆகும் என்ற எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். இந்த கடை தெருவின் உள்ளே இருக்கிறது. இருபது பேர் கொண்ட அவர்கள் குழு சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கும். இந்த பக்கம் சமோசா அந்த பக்கம் கட்ச்சோரி என சுட சுட தயாராகிகொண்டிருக்கும்,  சாப்பிட ஆள்கள் வந்து கொண்டு இருப்பார்கள். 

அவர்கள் தயாரிக்கும் சிற்றுண்டியில் உள்ள சுவை தான் வாடிக்கையாளர்களை இழுக்கிறது. தொழிலை ஒரு தவம் போல் செய்கிறார்கள் இவர்கள். நேரம் கிடைத்தால் ஒரு எட்டு போய் வாருங்கள்.



- காளிகபாலி